Thursday, June 24, 2010
தெளிந்த வானம் !
அந்தப் பகல் அகோரமாய் தகித்தது. சூரியன் நிலத்தின் வெடிப்புகளுக்கிடையிலும் தன் கதிர்களை பாய்ச்சிக் கொண்டிருந்தான். கடையில் கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த அஸ்லம் எதிர்பாராத விதமாக அக்காட்சியைக் கண்டுவிட்டான். அவனது தந்தை அவளுக்கு கைநீட்டி ஏசிக் கொண்டு இருக்கிறாரே.
முக்கிய தேவைகளின் போது தன்னிடம் பேசுவதற்கு ஒரு கைத்தொலைபேசி வாங்கித்தருவதாக அஸ்லம் அவளை வரச்சொல்லியிருந்தான். காலை பத்தரைக்கு வந்து வாங்கிக்கொண்டு போனாளே. இப்போது இரண்டு மணி கடந்து இங்கென்ன செய்கிறாள்? இந்த மனிதரிடம் வசமாகவே மாட்டிக்கொண்டுவிட்டாளே? மனிதத் தன்மையை மறந்து அவள் மனசை என்ன பாடுபடுத்தி இருப்பாரோ இந்த வாப்பா? ஒரு வேளை அவன் மொபைல் வாங்கிக் கொடுத்ததையும் வாப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டாளோ, சொல்லியிருந்தால் என்னவாம்? அஸ்லமிடம் கேட்கும் உரிமை அவளுக்கு இருக்கிறது தானே? அவளது தேவைகளை கவனிப்பது அஸ்லமின் பொறுப்பில்லையா? பாவம் ரமீஸா!
தன் வாழ்வுரிமை மீறப்பட்டதால் தானே இப்படியொரு இக்கட்டுக்கு விருப்பமின்றியேனும் தள்ளப்பட்டாள். இப்படி அஸ்லமுக்கு தோன்றி என்ன பயன்? அவளது வாப்பா தாஸீம் ஹாஜியாருக்கல்லவா தோன்ற வேண்டும்? ஏன் வாப்பாவுக்கு புத்தி இப்படிப் போகிறதோ? பௌதீக மாற்றமேனும் நிகழ்ந்துவிட்டதோ? வாப்பாவை எதிர்த்து அவளை இந்த வீட்டுக்கு அழைத்து வரும் தைரியம் அஸ்லமுக்கு இல்லை. அவ்வளவு கையாலாகாதவனா அஸ்லம்? இவர்களை விட்டால் ரமீஸா எங்கு போவாள்? யோசித்தவாறே பகல் சாப்பாட்டுக்கு வந்திருந்த அஸ்லமைப் பார்த்ததும் அவனது தாய் வாஸிலாவுக்கு அவன் இதயம் புரிந்துவிட்டது.
‘என்ன ராஜா இன்னிக்கும் ரமீஸாவ கண்டுட்டீங்களா?’
‘ஓம் உம்மா. அதுவும் வாப்பாகிட்ட வசமா மாட்டிட்டாளே’ என்று கூறியதை கேட்ட வாஸிலாவுக்கும் தூக்கிவாரிப்போட்டது. கண்மண் தெரியாமல் தாஸீம் ஹாஜியார் அவளை ஏசியிருப்பார் என்றே வாஸிலாவும் கவலைப்பட்டாள்.
சற்று நேரத்தில் அஸர் தொழுதுவிட்டு வந்த ஹாஜியார் அஸ்லமை பன்மையில் கூப்பிட்டார். அவர் அப்படி கூப்பிட்டால் ரமீஸாவும், அஸ்லமும் சந்தித்த விடயம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். அவளை சந்தித்து பேசிய விடயத்தை கேள்விப்படும் ஒவ்வொரு முறையும் இவனுக்கு பன்மையில் அழைப்பு வரும். பிறகு காதுக்கு அர்ச்சனை நடக்கும். அஸ்லமுக்கும் ரமீஸாவுக்கும் இடையில் இருக்கும் பந்தம் பற்றி இவருக்கு என்ன தெரியும்? காதலித்திருந்தால் தானே ரமீஸாவின் மனநிலையை புரிந்திருப்பாரே? ஏதோ இவர்களின் தந்தைமார்களின் ஸ்நேகிதத்தால் உம்மாவும் வாப்பாவும் மணமுடித்திருக்கிறார்கள். தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். எத்தனை முறை இப்படி உயிரை வாங்கிவிட்டார்.
அவர் தனது வெறுப்பை அடிக்கடி வெளிப்படுத்துவதாலோ என்னவோ அஸ்லமுக்கு ரமீஸா மீதிருந்த அன்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. இருபத்திமூன்று வயது வரை அவளுடன் தானே பேசி, சிரித்து வாழ்ந்தான். அவனை விட இரண்டு வயது வித்தியாசம் தானே அவளுக்கு இருந்தது. வாஸிலாவுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும். பிடிக்காமல் போகுமா? என்ன தவறு செய்தாலும் பாசம் கண்ணை மறைத்துவிடுமே? அவளை வீட்டுக்கு வந்திருக்க அனுமதிக்குமாறு எத்தனை முறை தன் கணவனிடம் சண்டை போட்டிருப்பாள் வாஸிலா?
வாப்பா மீண்டும் கூப்பிடுவது கேட்டபோது அஸ்லமின் கை கால்களில் உதறல் எடுக்கத்தொடங்கின. என்ன கேட்கப் போகிறாரோ என்று எண்ணியபடி சாரத்தை இருகக்கட்டிக்கொண்டு வாசலினருகே வந்து நின்றான்.
‘சொல்லுங்க வாப்பா...’
தன் முன்னால் வந்து நின்ற அவனைப் பார்த்தார் ஹாஜியார்.
‘உங்களுக்கு இப்படி ஒரு மகன் கிடைக்க கோடி புண்ணியம் செஞ்சீக்கோணும்’
அடிக்கடி பஸ்லியா மாமி வாப்பாவிடம் கூறுவாள். தன் மகள் சியானாவுக்கு இவனை கணவனாக்கிவிட வேண்டும் என்ற உள் நோக்கம் அவளுக்கிருப்பதை ஹாஜியார் உற்பட அனைவரும் அறிந்திருந்தனர். பஸ்லியா மாமி சொல்வதிலும் தவறில்லையே? உண்மையில் அஸ்லம் போல் ஒருவனை தன் மகளுக்கு கணவனாக்க முடிந்தால் அந்த பெற்றோர் நன்மை செய்தவர்கள். பாடசாலையில் உயர்தரம் படிக்கும் போது கூட பெண்கள் பின்னால் வலிய செல்வதும், சைட் அடிப்பதும் நண்பர்களோடு இணைந்து மானம் மரியாதை இழந்து பெண்களை இழிவுபடுத்துவதும் கொஞ்சம் கூட அவனுக்கு பிடிப்பதேயில்லை. தன் தாய் தந்தையர் பார்த்து தனக்கும் அவளைப் பிடித்தால் அவளை மணமுடித்து அதன் பிறகு அவளைக் காதலிக்கலாம் என்று நண்பர்களிடம் கூறுவான். அப்போதெல்லாம் அவனுடைய ஸ்நேகிதர்களின் கேலிப் பேச்சுக்களுக்கு சிறைப்பட்டுத்தவிப்பான்.
கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாக இந்தக் குருட்டுச் சமூகம் ஓரங்கட்டிவிட்டதுடன் ஆண்களுக்கு ஆரோக்கியமற்ற சுதந்திரத்தையும் தந்துவிட்டது. காதல் மட்டுமல்ல கலாச்சார ரீதியிலும் கூட மார்க்கம் கூறாத சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கும் இந்தச் சமூகம் குறித்து அஸ்லம் கவலைப்பட்டிருக்கிறான். அத்தகைய அஸ்லமுக்கு வந்து வாய்த்தாளே உறவாக ஒருத்தி? அவளால் அஸ்லம், தாஸீம் ஹாஜியார், வாஸிலா என்று அனைவருமே சந்தித்த பிரச்சினைகள்? வாப்பா பெருமூச்சுவிட்டார். என்ன சிங்கம் கர்ஜிக்கவில்லை? மனுஷன் மௌனமாக இருக்கிறார் என்றால் அவரை உளரீதியாக ஏதோ ஒன்று தாக்கியிருக்க வேண்டும்? புரியாமல் உம்மாவும், மகனும் தவித்தனர். அதை கண்டுவிட்டவர் போல அவர்களை மாறி மாறி பார்த்த ஹாஜியார் நிதானமாகக் கூறுவதற்காக தொண்டையைச் செருமினார்.
‘ரமீஸா கர்ப்பமாக இருக்கிறாளாம்’ என்றார் ஹாஜியார்.
அஸ்லமின் நாடி நரம்புகள் ஒரு நிமிஷம் வேலை செய்யவில்லை. கர்ப்பமாக இருக்கிறாளா? தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? என்னிடம் கூறாத அளவிற்கு வைத்திருந்த ரகசியத்தை சட்டப்படி வாப்பாவிடமா கூறுவது? நெஞ்சில் இடி இறங்கினாலும் ஏதோ ஒரு குதூகலம் அதனுள்ளும் எட்டிப்பார்த்தது. உள்மனம் மகிழ்ச்சிக்கூத்தாடியது.
‘பிள்ளை ஆணாக இருந்தால் என் மடி மீது ஓடி வந்து உட்காருவானே? பெண் பிள்ளை என்றால் வடிவாக அணிவித்து அழகு பார்த்து... ஒரு வேளை இரட்டையர்கள் என்றால் இருவரையும் மாறி மாறிக் கொஞ்சி..’ எத்தனை கற்பனை அஸ்லமுக்கு? திடீரென ஏதோ நினைவு வந்தவன் போல வாப்பாவின் முகத்தை கூர்ந்து ஆராய்ந்தான். அதில் கோபத்தின் ரேகைகள் அறவேயில்லை. ஒரு வேளை தன் தவறு நினைவுக்கு வந்துவிட்டதோ அவருக்கு? ரமீஸாவின் காதலை தாஸீம் ஹாஜியார் ஏற்காத காரணம், சமூகத்தில் அவருக்கிருந்த செல்வாக்கும் பணமும் தானே? அப்படிப்பட்டவர் காதலுக்காக தம்மை எதிர்த்த ரமீஸாவை எப்படி வீட்டுக்குள் அனுமதிப்பார்? அவர் நிலையிலிருந்து எண்ணும் போது அவர் பக்கம் நியாயம் இருக்கிறது. ஆனால் அஸ்லமுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறதே? பால்ய காலத்திலிருந்தே ஒன்றாக உண்டு, விளையாடி, படித்து.. காதல் என்ற ஒன்றை காரணம் காட்டி அவனிடமிருந்து அவளை பிரித்தால் அவன் எப்படித்தாங்குவான்? அவனை அவள் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள். அத்தனை உரிமை? எல்லாம் பறிபோய்விடுமா?
‘வாஸிலா...’
வாப்பா உம்மாவை சன்னமான குரலில் கூப்பிட்ட போது அஸ்லம் சிந்தனை கலைந்தான்.
‘வாஸிலா அவ உண்டாகியிருக்கிறத கேள்விப்பட்ட பின்பும் நான் பிடிவாதமா நின்றால் நான் மனுஷனா பிறந்ததே அர்த்தமில்லாம போயிடும். ரமீஸாட மாப்பிள ஸஜாத் இப்ப ஹோட்டல் வச்சிருக்கானாம். ஸஜாத் உடன் இவ வீட்டவிட்டு போனதுக்கு காரணமே நான் தானே? நல்ல பண்புள்ள ஸஜாத்தை மதிக்காம இழவு.. பணம் பணம்னு என்ட பிள்ளைய பிரிஞ்சி ஒரு வருஷம் எப்படி இருந்தனோ? என் கவுரவத்தை கல்லில் அடிச்சி உடைச்சிருந்தா இன்று இப்படி நடக்குமா? இந்தா இருக்கானே உன் புள்ள அஸ்லம். எப்பப் பாரு தங்கச்சி தங்கச்சின்னு உருகுறான். எனக்குத் தெரியாமலே அவளோட தனியே பேசி உதவிகளும் செய்திருக்கான். இப்படி ஒரு நானாவை விட்டுட்டுப் போக அவளுக்கு எப்படி மனசு வந்திச்சோ?’
‘ராஜா.. நீயாவது எங்கள் விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணிக்கப்பா. என்ன வாஸிலா என் ரத்தத்துல பொறந்தவனுக்கே தங்கச்சி மீது இவ்ளோ பாசம்னா என் மகள் மீது எவ்ளோ பாசம் எனக்கிருக்கும்? ஏதோ விதி வெளயாடிரிச்சி. சரி அஸ்லம் நீ இனி பயப்படாம உன் தங்கச்சி ரமீஸாவுடனும், மச்சானுடனும் பேசு. காலம் கடந்தாலும் என் கண்களை அல்லாஹ் திறந்திட்டான் என்று சொல்லு’
அஸ்லமின் உதடுகள் மௌனமாக ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டன!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment