Tuesday, June 29, 2010

பயணங்கள் !


ஸாதிக் ஹாஜியார் வழமைக்கு மாற்றமாக அதிக நேரம் பள்ளியில் கழித்தது பற்றி எல்லோருக்கும் ஆச்சரியம். தொழுது முடிய ஸலாம் கொடுத்தவுடன் எழுந்து கடைக்குப் போய்விடும் அவரை இப்படி பள்ளியில் பார்த்தால் ஆச்சரியம் இல்லாமல் இருக்குமா?

கொட்டிக்கிடக்கும் பணத்தில் ஒரு சின்ன பகுதியை வெறும் புகழுக்காக செலவழித்துவிட்டு, தான் ஹாஜியார் என்று முத்திரை குத்திக்கொள்ளாத குறையாக பெருமையாக பேசித் திரிபவர் அவர்.

இப்போது இந்த இரண்டு நாட்களாக அவரது நடவடிக்கையில் பெருத்த மாற்றம் இருந்தது. தான் அந்த ஏழைக் கன்னி பஸீனாவுக்கு செய்த அநியாயமே தற்போது தன் மகளுக்கு வந்து மு(வி)டிந்திருக்கிறது என்று எண்ணம் வரும் போதெல்லாம் வலது கையால் இடது நெஞ்சைத் தடவி சமாதானம் தேடிக்கொண்டிருந்தார்.

***************

உயர்தர வகுப்பு டியூஷனுக்கு போகும் போதெல்லாம் பஸீனாவின் சிறந்த குணத்தை அறிந்து அவளுடன் நெருங்கிப்பழக முயன்று கொண்டிருந்தான் சமீர். வீட்டுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கமாக வளர்ந்த பஸீனாவுக்கு சமீரின் நடவடிக்கைகள் எரிச்சலையூட்டின. அவனது போக்குக்கு அவள் அடிமையாகவில்லை.

ஏ.எல் முடித்து கௌரவமான தொழில் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே தற்போது அவளது தேவையாக இருந்தது. அதற்கு அப்பாற்பட்ட விடயங்களை அவள் நினைத்தும் பார்க்கவில்லை. உழைத்து ஓடாய் தேய்ந்து போன வாப்பா இனியும் உழைத்து தன்னையும் தனது தங்கையரையும் கரை சேர்ப்பது சாத்தியமில்லை என்பது அவளது அறிவுக்கு புலப்படாமல் இல்லை.

ஆகவே அவள் படித்து உழைத்துத்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவள் விரும்பியோ விரும்பாமலோ அவளுக்கு சுமத்தப்பட்டிருந்தது. ஆண் பிள்ளையை பெற்றுக்கொள்ளாமல் இருந்தது பற்றி அவளது பெற்றோர் நடு இரவொன்றில் அழுததை தலையணையில் முகம் புதைத்தவாறு கேட்டுக் கொண்டிருந்ததன் தாக்கமே அவள் சமீரை ஏறெடுத்தும் பார்க்காதது.

சமீரும் அவளை எல்லோரும் போல் பார்க்கவில்லை. அவன் உண்மையிலேயே அவளை நேசித்தான். அவளும் அவளையறியாமல் தன்னை நேசிப்பது சமீருக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் பள்ளி செல்லும் மாணவியிடம் திருமணம் பற்றி பேசுவது அழகல்ல என்பதால் இரண்டு வருடங்களை அவளுக்காகவே காத்திருப்பதாய் நினைத்து உழைக்கவென்று வெளிநாடு புறப்பட்டான்.

அவனது உண்மையான அன்பைப் புரிந்தாலும்கூட தற்போதைக்கு பஸீனாவால் எதுவும் சொல்ல முடியாது என்பதால் காலத்தை கடத்தி வந்தாள். சமீர் தன்னை விட்டு விட்டுப்போனதாகவே அவள் எண்ணினாள். ஆனால் துளியும் வருத்தப்படவில்லை. கழாகத்ர் (விதி) படியே எல்லாம் நடக்கும் என்று எண்ணி தன் வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டாள்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காதே. வருடங்கள் இரண்டு முடிய சமீர் ஊருக்கு வந்திருந்தான். அவன் சற்று கொழுத்து, மிகவும் அழகாய் இருப்பதாக கேள்விப்பட்ட போதும் அவனைப் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து துடிக்கவில்லை. அவளது ஆசைகள் சிறகடிக்கவில்லை. காரணம் பணக்கார வாலிபர்கள் அனைவரையும் அவள் ஒரே மாதிரி எடைபோட்டிருந்தமையே.

அவன் பஸீனாவைப்பற்றி அவளது தோழி சுலைஹாவிடம் விசாரித்த போது பஸீனா ஆசிரியையாக தொழில் புரிவது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவளது இலட்சியங்களை அறிந்திருந்தவனுக்கு அவளது ஆசைப்படியே கௌரவமான தொழில் கிடைத்ததையிட்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினான்.

வெளிநாட்டிலிருந்தபோது ஒருநாள் ஸாதிக் ஹாஜியார் மகன் சமீருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது சமீரின் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அதனால் சமீரை திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும் படியும் கூறினார்.

‘தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் வாப்பா. என்னை எதுக்கு வற்புறுத்துறீங்க?’

‘அட நீ வேறப்பா. முதல்ல சிலோனுக்கு வா. அப்புறம் எல்லாத்தயும் வௌரமா சொல்றேன்’ என்றுவிட்டு போனை வைத்தார்.

இது நினைவு வர சமீர் ஒரு நாள் தன் வாப்பா ஸாதிக் ஹாஜியாரிடம் இது பற்றிக் கதைத்தான்.

மகனிடம் எப்படி தொடங்குவது என்றிருந்த ஸாதிக் ஹாஜியார் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

‘அதொன்டுமில்ல மகன். கண்டீல ஒரு பார்ட்டி. நல்ல சல்லிக்காரங்க. உன்ட தங்கச்சிய கெம்பஸில பாத்துட்டு அந்தப் பொடியன் விரும்பீட்டானாம். உன்ட தங்கச்சிக்கும் அவன் மேல ஆச இருப்பதாய் தெரியுது. அவன் நண்பன் மூலமா தன் வாப்பாட்ட செல்லீக்கியான். அவரு விசாரிச்சுப் பாத்ததில என்ட மகள்னு தெரிஞ்சீக்கி. கரீம் ஹாஜி என் நல்ல கூட்டாளி’

இதற்கும் நான் கல்யாணம் முடிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் என்று சமீர் நினைத்த போது அவரே பேச்சை மறுபடியும் தொடங்கினார்.

‘விசயம் என்னன்டா சமீரு.... அவன்ட தங்கச்சிய நீ முடிக்கோணும். அப்போ எல்லா சொத்தும் நமக்கு வந்த மாதிரித்தான். உங்களிருவரயும் நல்ல இடத்தில் கரசேத்த திருப்தியோட நானும் மௌத்தாகிடுவன். பொடியனுக்கு உன் தங்கச்சியும், அவன்ட தங்கச்சிக்கு உன்னையும் மாத்தி செய்றதா வாக்கு கொடுத்திட்டன்’

‘வாக்கு கொடுத்தீங்களா? என்னை ஒரு வார்த்தை கேட்காமல் என் வாழ்க்கையை தீர்மானிக்கிறீங்களே வாப்பா? என் மனசில் இருக்கும் ஆசை தெரியுமா? நான் விரும்பும் என் தேவதை யார் என்று தெரியுமா? உங்களிடம் இவ்வளவு பணமிருந்தும் நான் ஏன் வெளிநாடு போய் உழைத்து வந்தேன் தெரியுமா? எல்லாம் பணத்துக்காக வாப்பா. பஸீனா ஏழைனு தெரிஞ்சா நீங்க கட்டாயமா ஒத்துக்க மாட்டீங்க. அதனாலதான் நானே ஒழச்சி அந்தப் பணத்தையெல்லாம் அவ மூலமா ஒங்களுக்கு தர வச்சிருந்தன்’

உடைந்து சிதறிய வார்த்தைகளை கஷ்டப்பட்டு கோர்த்து அவன் அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தான். சொல்லி முடியுமுன்பே அவனுக்கு தலைசுற்றுவது போலிருந்தது. அதிர்ச்சி நீங்கி நிதானித்து பார்த்தபோது அவனது சிவந்த கன்னத்தில் ஹாஜியாரின் கை அச்சு உக்கிரமாய் பதிந்திருந்தது. அதற்குப்பிறகு இது பற்றி அவனும் பேசவில்லை. அவரும் பேசவில்லை. அவன் மிகவும் நொந்து போயிருந்தான். பெண்களுக்கு மட்டும்தான் மனசிருக்கிறதா? அப்படியில்லையே. இதோ இன்று பஸீனாவை எண்ணி என் மனம் படுகிற வேதனையை அறிந்த நாயனே எனக்கு நல்ல வழியொன்றை காட்டித்தா என்று சமீர் புலம்பிக்கொண்டிருந்தான்.

அவனது பிரச்சனைகளை தன் தாயிடமும் சொல்லியழ முடியாத சோகம் அவனுக்கு. வாப்பாவின் கத்தலுக்கே சுவரோடு ஒடுங்கிப்போகும் ரகம்; அவனது உம்மா. வாப்பாவை எதிர்த்து பேசும்படி உம்மாவை தூண்டிவிட்டு அதன் பிறகு தன் உம்மா கண்கலங்குவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது.

அது தவிர, தன் தங்கையின் நிலைமையையும் நினைத்து உருகினான் சமீர். தான் அந்த கண்டி ஹாஜியாரின் மகளை மணமுடிக்க ஒத்துக்கொள்ளாவிட்டால் தன் தங்கையின் ஆசைகள், கனவுகள் என்னாவது? அவனுக்குள் பெரும் போராட்டமாய் இருந்தது. மகனது நடிவடிக்கைகளில் எவ்வித மாற்றத்தையும் அறியாத ஹாஜியார் அடுத்தகட்ட காரியமாக பஸீனாவின் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

ஒரு நாளும் இல்லாமல் முக்கிய விடயமொன்றைக்கூற வந்திருந்த தோழி சுலைஹாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் பஸீனா. எதிரே முற்றத்தில் திடீரென வந்து நின்ற காரிலிருந்து இறங்கி வேகமாய் வந்து கொண்டிருந்த ஸாதிக் ஹாஜியாரைப் பார்க்க இருவருக்கும் பயமெடுத்தது. சுலைஹா விடயத்தை ஓரளவு உணர்ந்து கொண்டாள்.

‘ஏய் தாவூத் வெளில வா. மாசச் சம்பளத்த வாங்குறத்துக்கு முதலாளிக்கிட்ட கையேந்தி நிக்கிற கூட்டத்தைச் சேர்ந்தவன் நீ. உன் புள்ளக்கி என்ட மகன் கேக்குதாமா? வசதியான பையன வளைச்சு போட சொல்லிக்கொடுத்தியா? எல்லா வினையும் இதோ.. உன் மகளால தான். இன்று அவன் என் பேச்சை கேட்காமல் இவள் வேணும்னுகிட்டு இருக்கான். எல்லாத்தயும் மரியாதயா விட்டிரச் சொல்லு. அப்புறம் போலீசுல நாய் படாத பாடு படுவே’

நரம்பில்லாத நாக்கால் குத்தலாய் பேசி அடிக்கடி பஸீனாவை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தார் ஹாஜியார். அவரது கதைகளைக்கேட்டு காதை பொத்தியவாறு அழுது கொண்டிருந்தாள் பஸீனா.

நான் சமீரை விரும்புறேனாமா? வாப்பாவை எப்படி கீழ்த்தரமாய் பேசிவிட்டார் இந்தப் பெரிய மனுசன்? இவரெல்லாம் அஞ்சு நேரம் அல்லாவ தொழுறவங்க தானா? இன்னும் என்னென்னமோ ஹாஜியார் சொல்லிக்கொண்டிருக்க, சுவரில் அடித்த ஆணியாய் பஸீனாவின் உம்மாவும் வாப்பாவும் பேச திராணியற்று மௌனமாக இருந்தார்கள்.

ஹாஜியார் தன் கொடூர பேச்சை முடித்துவிட்டு செல்ல, தன் மீது படியும் பெற்றோரின் பார்வையை ஒருமாதிரியாக உணர்ந்தாள் பஸீனா. ஆனால் அந்தப் பெற்றோருக்கு தம் வளர்ப்பின் மீது நம்பிக்கையிருந்தது. அதை விட பஸீனா மேல் அதிகம் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் பஸீனாவை சமாதானப்படுத்த, அவள் நெஞ்சுருகி தன் தாயின் தோளில் சாய்ந்து அழுதாள்.

சுலைஹாவின் முன் இப்படி அவமானப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த போது, சமீர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பின் ஒருநாள் தன்னிடம் பஸீனா பற்றி விசாரித்ததாகவும், அதை சொல்லவே இன்று வந்ததாகவும் கூறிச் சென்றாள் சுலைஹா.

பஸீனாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. சமீர் இன்னமும் என்னை நெனச்சிக்கிட்டு இருக்காரா? ஆனால் அவருக்கு மனைவியாக வாழுற பாக்கியம் எனக்கில்லையே. ஸாதிக் ஹாஜியார் வந்து பேசிவிட்டுப் போன பேச்சுக்கள் கொஞ்சநஞ்சமா? உண்மையில் நேசித்திருந்தாலும் விட்டுவிட வேண்டிய நிலைமையல்லவா இது?
பெற்றோரிடமிருந்து பிள்ளையை பிரிக்கும் கல்நெஞ்சம் கொண்டவள் அல்லவே பஸீனா. எல்லாம் அல்லாஹ் விட்ட வழி என்று தன் மனசை திசை திருப்பினாள். ஆறேழு மாதங்கள் கடந்த நிலையில் பஸீனா வேறொருவரை மணமுடித்து சந்தோஷமாய் சென்றாள். அவளது வாழ்க்கை மிகச்சிறப்பாய் இருந்தது. அவளை கரம்பற்றியவரும் அதிர்ஷ்டசாலி.

ஆனால் சமீர் இன்று உருக்குலைந்து, தானும் வேலையும் என்று காலம் கடத்துகிறான்.

ஹாஜியாருடன் மொத்தமாக அவன் பேசவில்லை. இதெல்லாம் ஹாஜியாருக்கு மன வருத்தத்தைக் கொடுக்கவில்லை. பஸீனா என்ற தொல்லை கழிந்தது. இனி சமீரை சம்மதிக்க வைத்து விடலாம் என்று எண்ணியிருந்த போதே அவரது தலையில் இடி விழுந்தது.

அதாவது கண்டியிலுள்ள கரீம் ஹாஜியார், ஸாதிக் ஹாஜிக்கு ஒரு மடல் அனுப்பியிருந்தார்.

அன்பின் நண்பருக்கு,

அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும். உங்கள் பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்ற ஆசையில் பெரும் பணக்காரர்களான மணமக்களையே எதிர்பார்த்தீர்கள். என் மகனும் உங்கள் மகளைத்தான் இன்னமும் விரும்பிக்கொண்டிருக்கிறான். அதற்கு என்ன செய்ய? நானும் உங்களைப்போல ஒரு தகப்பன்தானே? என் பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்றுதானே நினைப்பேன். ஆதலால் உங்களை விட மிகவும் வசதியான ஒருவரின் மகளுக்கு என் மகனை மணமுடித்து வைக்க ஏற்பாடு நடந்துவிட்டது. வஸ்ஸலாம்.

இப்படிக்கு
கரீம் ஹாஜியார்.

தனது பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்ற பெயரில், தான் பேராசைப்பட்டதை எண்ணி மனசு வெடித்தார் ஸாதிக் ஹாஜி. தன் மகளின் கனவுகள், தன் மகனின் ஆசைகள் எல்லாம் தன்னால் எரிக்கப்பட்டு விட்டதாய் உணர்ந்தார். அன்று அவர் பஸீனாவுக்கு செய்த அநியாயத்தால் வந்த பாவத்தைக் கழிக்கவே இப்போதெல்லாம் அதிக நேரத்தை பள்ளிவாசலில் கழிக்கிறாரோ என்னவோ!!!

No comments:

Post a Comment