'வைகறை' தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் சிறுகதைத் தொகுதி
எம்.கே.முருகானந்தன்
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களின் முதலாவது சிறுகதைத் தொகுதி நூலினது வெளியீட்டு விழா இது. இலக்கியத்துறையில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர் அவர். ஏற்கனவே 'இன்னும் உன் குரல் கேட்கிறது' என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டதின் மூலம் இலக்கிய உலகில் தனது அடையாளத்தை பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'வைகறை' என்ற இந்த நூல் அவரது சிறுகதைத் தொகுதியாகும். இந்த நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் வெளியிட்டிருகிறது.
'சிறுகதை இலக்கியத்தின் இளையது. கடைக்குட்டி. கடைக்குட்டி எப்பொழுதும் காரமானதாகவும் வீச்சானதாகவும் இருக்கும்.' இவ்வாறு சொல்கிறார் நீர்வை பொன்னையன். இந்த நூலுக்கான அணிந்துரையை எழுதியிருக்கும் நீர்வையின் முதல் வசனம் அவ்வாறு ஆரம்பிக்கிறது.
ஆம் நல்ல சிறுகதைகள் அவ்வாறுதான் இருக்கும். அவ்வாறுதான் இருக்க வேண்டும்.
“A short story is a work of fiction, usually written in narrative prose” எனப் பொதுவாக ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது சிறுகதை என்பது உரைநடையில் அமைந்திருக்கும். அது அளவில் நாவலைப் போலவோ காவியங்கள் போலவோ நீண்டதாக அன்றிக் குறுகியதாக இருக்கும். அத்துடன் அது கற்பனையில் புனையப்பட்ட படைப்பாகவும் இருக்கும்.
ஆனால் சிறுகதை பற்றிய இந்தக் குறிப்பு பூரணமானது அல்ல என்பது மட்டுமின்றி முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அல்ல.
சிறுகதையானது எப்பொழுதுமே கற்பனையில் உதிக்கின்ற படைப்பாக இருக்க முடியாது. அது வாழ்வோடு தொடர்புடையது. ஓவ்வொரு படைப்புக்குமான ஊற்று அல்லது அதனுடைய கரு எதுவுமற்ற சூனியத்திலிருந்து திடீரென வந்து குதிக்கும் கற்பனையாக இருக்க முடியாது. எங்கோ நடந்த ஒரு சம்பவத்துடன் அல்லது அனுபவத்துடன் தொடர்புடையதாகவே நிச்சயம் இருக்கும். அதனை கதாசிரியன் தனது சிந்தனை வீச்சாலும், அனுபவத்தாலும், மொழி வளத்தாலும் செழுமைப்படுத்துவான். படைப்பானது சுவார்ஸமானதாகவும், விறுவிறுப்பானதாகவும், மனநிறைவைத் தருவதாகவும் வாசகனுக்கு அமையும்படியான நகாசு வேலைகளைச் செய்வதுதான் படைப்பாளியின் பங்காகும்.
இவ்வாறான எல்லா நல்ல அம்சங்களும் கூடிய சிறுகதையை எல்லோராலும் சுலபமாகப் படைத்துவிட முடியாது. அதற்கு பரந்த அனுபவ வீச்சு கிட்டியிருக்க வேண்டும். சூழுலை நுணுக்கமாக ஆழ்ந்து நோக்கும் இயல்பு இருக்க வேண்டும், ரசனையுணர்வும், மொழியாற்றலும் கை கூடவேண்டும். அதிலும் முக்கியமாக ஒரு ஆரம்ப எழுத்தாளனுக்கு தேடலும், பொறுமையும் விடாமுயற்சியும் மிக மிக அவசியம். இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது தேடலுள்ள ஒரு நல்ல வாசகனாக இருப்பதே ஆகும்.
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது பெயர் குறிப்பிடுவது போல மலையகத்தைத் பிறப்பிடமாகக் கொண்டவர். அழகும் குளிர்மையும் நிறைந்த இயற்கைச் சூழலில் வளர்ந்தவர். தனது முஸ்லிம் சமூக உறவுகளுக்கு அப்பால் மலையக மக்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தவர். அதே நேரம் நகர்ப்புறத்தின் அவசர வாழ்வின் அனுபவங்களையும் பெற்றவர். நாளந்த வாழ்வுக்கு அல்லற்படும் மக்களையும், பணம் பதவி, அந்தஸ்து என சொகுசுக்கு அலையும் வர்க்கத்தினரையும் நிஜ வாழ்வில் கண்டவர்.
இவ்வாறு மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே இவருக்கு வாய்த்துள்ளது. பரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தெக்க வைத்து இரை மீட்டு அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும்.
ரிஸ்னா தனது அக்கம் பக்கத்தைக் கருத்தூன்றி அவதானித்திருக்கிறார். இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் முன்னலைப்படுத்திச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. அவற்றுள் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டதாக இவரது படைப்புகளைக் காண முடிகிறது.
இவரது பெரும்பான சிறுகதைகள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி நேரடியாகக் களத்தில் இறங்குகின்றன. இதனால் சலிப்பின்றி கதைக்குள் இறங்க முடிகிறது. மனத்தை ஒரு முகப்படுத்தி வாசிக்க ஆவல் ஏற்படுகிறது.
கருவைப் பொறுத்தவரையில் தனது மனதைப் பாதித்த விடயங்களைப் பற்றியே பேசுகிறார். காதலையும் ஆண் பெண் உறவுகளையும் மையமாகக் கொண்ட பல படைப்புகள் உள்ளன. அத்துடன் குடும்ப உறவுகள் தொடர்பான படைப்புகளும் உள்ளன. களத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் சமூகக் கதைகளும் மலையகம் சார்ந்தவையும் அதிகம். தனக்கு நெருக்கமான சூழலிருந்து கதைகளை ஆக்கியுள்ளமை அவற்றின் நம்பிக்கைத் தன்மைக்குச் சான்றாக இருக்கின்றன.
சிறுகதைகள் என்ற இலக்கிய வடிவத்தைப் பொறுத்த வரையில் அதன் முடிவு முக்கியமானது. இது எந்த இலக்கிய வடிவத்திற்கும் பொருத்தமானதாயினும் சிறுகதையில் அது மிகவும் சிறப்பாக அமைய வேண்டும். முடிவைப் பொறுத்த வரையில் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட் வேண்டியலையாகும். முடிவானது வாசகனுக்கு நன்மை பயப்பதாக அவனுக்கு ஒரு முக்கிய செய்தியைக் கடத்துவதாக இருக்க வேண்டும். இது பொதுவாக சமூக நோக்குள்ள விமர்சகர்கள் கருத்தாகும். இதை மறுப்பாரும் உளர். அது எந்தச் செய்தியையும் பகிர வேண்டியதில்லை மனதை நிறைவு செய்தால் போதும் எனக் கருதுவார்களும் உளர்.
ரிஸ்னா படைப்புகள் வெறும் கதைகள் அல்ல. அதற்குள் ஒரு செய்தி, அதுவும் சமூகத்திற்கு நன்மையளிக்கும் செய்தி மறைந்திருக்கும். எனக்கு இது உவப்பானதாகும்.
முடிவைப் பொறுத்த வரையில் அடுத்த முக்கிய அம்சம் அதில் இருக்க வேண்டிய திடீர் திருப்பம் எனலாம். ஒரு கோணத்தில் எம்மை அழைத்துச் செல்லும் படைப்பானது திடீரென எதிர்பாரத திருப்பத்தைத் தரும்போது இன்ப அதிர்ச்சி கிடைக்கும். ரிஸ்னா பல கதைகளில் இத்தகைய திருப்பத்தைத் தருகின்றன. அதற்கு நல்ல உதாரணம் நூலின் முகப்புக் கதையான அழகன் ஆகும். திடீர் திருப்பத்தால் மட்டுமின்றி சொற் செட்டு, மிகக் குறைந்தளவான பாத்திரங்கள் போன்றவற்றாலும் இக் கதை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
குழந்தைத் தொழிலாளர், ஆணாதிக்கம் பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற வேறு பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் ஆற்றலை இவரது படைப்புகளில் காண்கிறோம்.
ஆனால் அலங்கார வார்த்தைகள், புரியாத சொற்களைப் பொழிதல் இவரது பாணி என்று சொல்ல முடியாது. வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசு தமிழில் எழுதுகிறார். அதை வசப்படுத்தி உருவேற்ற முயன்றிருக்கிறார். அந்த முறையில் வாசகனுடன் நெருங்கி வர முடியும் என்பதைப் புரிந்திருக்கிறார். ஆயினும் தனது படைப்புகளில் மேலும் கூடியளவு இறுக்கமும், சொற்செட்டும், கொண்டுவருவது படைப்புகளை செழுமைப்படுத்த உதவலாம். தான் சார்ந்துள்ள சமூகத்தில் மறைந்து கிடக்கும் அவலங்களையும் பெண்களின் பாடுகளையும் வெளிக் கொணர்வது அவரது படைப்புகளை வலுப்படுத்த உதவும் என நம்புகிறேன்.
ஜனசங்சதய இலக்கிய அமைப்பின் சிறுகதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்ற சிறுகதைப் போட்டி, இருக்கிறம் சஞ்சிகையின் கவிதைப் போட்டி போன்றவற்றில் பெற்ற பாராட்டுகளும் பரிசுகளும் இவரது படைப்பாற்றலைப் பரந்துபட அறியச் செய்திருக்கினறன.
வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய உட்பட இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளிலும், மல்லிகை, ஞானம், ஜீவநதி, செங்கதிர் உட்பட இலங்கையின் முக்கிய சஞ்சிகைகள் அனைத்திலும் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன. இணையத்தில் தனது வலைப்பதிவுகள் ஊடாகவும், இணைய சஞ்சிகைகள் ஊடாகவும் பதிவிடுகிறார். ரீவி, வானொலி ஊடகங்களிலும் தடம் பதிக்கிறார். இவ்வாறு வேகமாகவும், பரபரப்பாகவும் இயங்கும் அதே நேரம் படைப்பில் ஆழத்தை அவாவியும் படைக்கிறார்.
200ற்கு மேற்பட்ட கவிதைகள், 30ற்கு மேற்பட்ட சிறுகதைகள் என குறுகிய காலத்திற்கு பெரு அறுவடை செய்துள்ளார். தான் படித்த பல நல்ல நல்ல நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் நூல் விமர்சனங்களும் செய்கிறார்.
இதனால்தான் இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பில் உலா வரும் இன்றைய வாசகர்கள் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ஆக்கங்களில் நனைந்து திளைத்து மகிழாதிருக்க முடியாது. குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் இவர் எழுதுவது குறிப்பிடத்தக்கது.
நீர்வையின் சிறப்பான அணிந்துரை நூலுக்கு அணிசேர்க்கிறது. அதில் இந்த நூலைப் பற்றி மட்டுமின்றி சிறுகதை இலக்கியம் பற்றிய சிறப்பான அறிமுகமாகவும் இருக்கிறது.
கவிதை காவியம் போன்றவை தமிழிலும் சரி உலக இலக்கியங்களிலும் ஆரம்பகால இலக்கியமாக அமைந்திருப்பதையும், அதன் பின்னர் கைத்தொழிற் புரட்சிக்காலத்துடன் ஏற்பட்ட இயந்திர மயமான வேகமாக இயங்க வேண்டிய காலகட்டம் வந்ததும் குறுகிய நேரத்தில் படிக்கக் கூடிய இலக்கியமான சிறுகதை தோற்றம் பெற்றதைக் கூறுகிறார். மேலும் ஒரு சிறுகதையானது எவ்வாறு இருக்க வேண்டும் அதன் பண்புகள் யாவை போன்ற விடயங்களையும் மிக சிறப்பாக எடுத்துச் சொல்கிறது. சிறுகதை இலக்கியத்தில் தேர்ச்சி பெற விரும்பும் ஆரம்ப எழுத்தாளர்களுக்குப் பயன்படக் கூடிய சிறப்பான கட்டுரை இது.
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. இந்த அமைப்பானது கடந்த பல வருடங்களாக பல்வேறு இலக்கிய மற்றும் சமூக அக்கறை மிக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இவை ஈழத்து இலக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை. கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், நூல் வெளியீடுகள், விமர்சன அரங்குகள் ஊடாக இலங்கையின் இலக்கியப் படைப்புகளை வாசகர்களிடையே அறிமுகப்படுத்துகின்றன.
பேராசிரியர் கைலாசபதி, கவிஞர் முருகையன், போன்ற மறைந்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளைச் செய்து வருகின்றன. முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்தும் அவர்கள் பற்றிய அறிமுகங்களையும் நூலாக வெளியிடும் பணியைச் செய்கின்றன. இன்றைய தலைமுறையினருக்கு முற்போக்கு இலக்கியமானது ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய அரும் பணிகளை தெரியப்படுத்துவற்கு இத்தகைய செயற்பாடுகள் உதவுகின்றன. அவற்றை ஆவணப்படுத்துவதும் அத்தகைய நூல் வெளியீடுகளில் ஈடுபடுவதும் முக்கிய விடயமாகும்.
இன்றைய இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் பின் நிற்கவில்லை. அவர்களது நூல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா வைகறை என்ற இந்த நூலானது இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினரின் 27வது வெளியீடாகும். மற்றொரு புதிய எழுத்தாளரான வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற நூலை 2010 இல் வெளியிட்டது. அதேபோல திருமதி குமதி குகதாசன் அவர்களின் தளிர்களின் சுமைகள் என்ற நூலை இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தது.
இறுதியாக,
இவரது படைப்பாளுமைக்கு கட்டியம் கூறும் நூலாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. நெடும்பயணமாகத் தொடரப் போகும் இவரது இலக்கியப் பயணத்தில் வளமும், புகழும், சித்திகளும் கிட்ட வாழ்த்துகிறேன்.
பேஸ்புக் வாயிலாக இந்நூல் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்
http://www.facebook.com/media/set/?set=a.10152230789800268.931646.750020267&type=1¬if_t=backdated_content
நன்றிகள் - டாக்டர் M.K. முருகானந்தன்