Sunday, December 8, 2013

உறவுகள்

உலகத்தில் இறைவன் எமக்காகப் பல உறவுகளை அமைத்துள்ளான். முதன் முதலில் எமது பெற்றோரைத் தந்துள்ளான். அவர்களது தூய்மையான பாசத்துக்குப் பிறகு அவர்கள் மூலம் எமக்கு உறவினர்களை  ஏற்படுத்தியிருக்கிறான். நம்மோடு சேர்ந்திருக்க நமக்கு சகோதர சகோதரிகளைத் தந்திருக்கின்றான்.
ஆனால் இரத்த உறவுகள் மூலம் ஏற்பட முடியாத சில உறவுகளையும் காலத்துக்குக் காலம் இறைவன் நமக்கு காட்டிக் கொண்டுதான் இருக்கின்றான். அதில் யார், யார் இதயத்தை கட்டிப் போடுகின்றார்கள், யார், யார் வெட்டிப் போடுகின்றார்கள் என்பதையும் உணர்த்திவிடுகின்றான். இவ்வாறு என் நினைவுக் குதிரை கடிவாளமில்லாமல் சுற்றித் திரிந்தது.

உயர்தரம் முடித்துவிட்டு இருந்த காலப்பகுதியில் பத்திரிகைகளோடு எனக்கிருந்த தொடர்பு இன்னும் இறுக்கமானது. வாசிப்பின் தீவிரத்தில் நானும் ஏதாவது எழுத வேண்டும் என்ற நிலைக்கு ஆளானேன். கவிதைகளை எழுதியனுப்பினேன். அந்த சந்தர்ப்பத்தில்தான் என் கவிதை பத்திரிகையில் பிரசுரமாகியதைத் தொடர்ந்து எனக்கொரு பாராட்டுக் கடிதம் வந்திருந்தது. அனுப்பியருந்தவர் நஸீரா தாத்தா. நாமிருவரும் காலப்போக்கில் நல்ல நண்பிகளானோம். கிட்டத்தட்ட என் தாயைப் போலவே என்னுடன் அதிக நேசம் கொண்டுள்ள அவர் தன் சொந்த சகோதரிகளைப் போல என்னுடன் நடந்து கொள்ளும் விதம் இன்றுவரை தொடர்ந்திருக்கின்றது. இவ்வாறு இருந்து தலைநகருக்கு நான் வந்துவிட்டேன்.

தலைநகருக்கு வந்த ஆரம்பத்தில் ஒரு நிறுவனத்துக்கு புதிதாக வேலைக்குச் சென்றிருந்தேன். அந்த நிறுவனத்தில் உள்ள அதிகாரியும், அவரது மகனும் முதலில் நன்றாகத்தான் இருந்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்களின் அதிகாரத் தொனியும், முதலாளித்துவக் குணமும் எல்லா ஊழியர்களையும் பாதித்தது. அதைவிடவும் பாதித்த விடயம் என்னவென்றால் எம்முடனேயே வேலை செய்யும் ஓரிரு பெண்கள் எம்மை துவேசக் கண்கொண்டு பார்ப்பதாகும்.

காலை வணக்கம் சொன்னபோதுகளில் கூட அவர்கள் அதற்கு மறுமொழி கூறாமல் மறுபுறம் திரும்பிக் கொண்டு செல்லும் ஒரு மனநிலையிலேயே காணப்பட்டார்கள். சில நேரங்களில் அவர்களின் பிரத்தியேக வேலைகளைச் செய்து தருமாறு கூறுவது கூட பரவாயில்லை. ஆனால் அதையுங் கூட ஆணவத்துடனும், அதிகாரத்துடனும் சொல்லும்தொனி அறவும் பிடிப்பதில்லை. எனினும் அவர்கள் சொல்வதை செய்யாத தருணத்தில் மேலாதிகாரியின் கோபத்துக்கு நாம் ஆளாக வேண்டிய அளவுக்கு அவர்களது அரசாட்சி அமையப் பெற்றிருந்தது.

பதினொரு மணியளவில் அலுவலகம் வந்து, நான்கு மணியாவதற்கு முதலே அவர்கள் செல்வதும், மற்றவர்கள் ஒன்பது மணிக்குப் போனாலும், ஐந்து மணிக்கு முதல் விடாததும் எமது அலுவலக ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மனக் கசப்பை ஏற்படுத்தியிருந்தது.

சில மாதங்களில் பிறிதொரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனுபவம் எனக்கு நேர்ந்தது. அதில் நம்முடனிருந்த ஊழியர்கள் மிகவும் நல்லவர்கள். உதவி செய்யத் தயங்காதவர்கள். ஆனால் அந்த அலுவலகத்தின் மேலதிகாரி ஒரு முரட்டுச் சுபாவம். ஒரு நிமிடம் பிந்தினாலும் கேவலமான பேச்சை பேசக்கூடியளவுக்கு அவரது பண்பின்மை காணப்பட்டது. நல்ல வேளையாக நமது கிளை அலுவலகத்துக்கு அவர் அதிகம் வருவதில்லையாதலால் எமது கிளையைச் சேர்;ந்த ஊழியர்கள் தப்பிய சந்தர்ப்பங்கள் பல.

எனக்கு நன்கு தெரிந்த ஒரு சகோதரி பிரபலமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தின் அதிகாரி, சாதாரண தரம் கூட சித்தியடையாதவர். ஆனால் அவரது பண பலமும், ஆங்கிலப் புலமையும் அவரை பணக்காரனாக மாற்றியிருக்கின்றது. அடிப்படையில் அவர் கொஞ்சம் பரவாயில்லை என்றபோதும், அந்தச்  சகோதரிக்கு சிக்கன்குன்யா காய்ச்சல் ஏற்பட்டு சுகவீனமாக இருந்த தருணத்தில் அவருக்கு கால் வீங்கி நடக்க முடியாத நிலையில் இருந்தார்.

வைத்தியர்கள் குறைந்தது மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என பணித்திருந்தனர். ஆனால் அந்த சகோதரி வெறுமனே இரண்டு கிழமைகள் மாத்திரமே விடுமுறை எடுத்திருந்தார். தொடர்ந்து விடுமுறை எடுத்த காரணத்தால் சகோதரியை பலவந்தமாக வேலையை விட்டு நீக்கியதும், சம்பளக் காசில் மூவாயிரம் ரூபாவை கழித்துக் கொடுத்ததும் ஒரு சோக நிகழ்வாக இன்னும் பதிந்திருக்கின்றது.

இப்படியிருக்க இறைவனின் நாட்டத்தினாலும், எனது பெற்றோர், சகோதரர்கள், ஆசிரியர்கள், உறவினர்களின் பிரார்த்தனையாலும் ஒரு நல்ல மனிதரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. உலகத் தலைவர்களில் முக்கியமான ஒருவரின் பெயரைக் கொண்டிருக்கும் அவர், ஒரு தலைவராகவே என் மனதில் ஆசனமிட்டு அமர்;ந்திருக்கின்றார். பிறரது வேலைகளைத் தனது சொந்த வேலையாகக் கருதி தொழிற்படும் நல்மனம் படைத்த அந்த அண்ணா, எனது பிரச்சனைகளை விளங்கிய பின், தனது நிறுவனத்தில் உள்ள தொழில் இடைவெளியை நிரப்புவதற்காக என்னை தேர்ந்தெடுக்க உதவினார். அவருக்கு என் இதய நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.

நான் இதுவரை வேலை செய்த இடங்களை விடவும் இது நல்லதொரு இடம் என்பதில் என்னைவிட எனது பெற்றோருக்கு மகிழ்ச்சி அதிகம். அங்கு முதன்முதலாக நான் நேர்முகத் தேர்வுக்காக சென்றபோது அங்கே இருந்த ஒரு யுவதி சிநேகபூர்வமாக என்னைப் பார்த்துச் சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்தேன். நேர்முகத் தேர்வு நடந்து முடிந்த பிறகு என்னிடம் வந்து எனது பெயர், ஊர் என்ன என்பவற்றை பாசத்துடன் வினவியபோது எனது மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. பெரும்பான்மை இனத்தைச் சேர்;ந்தவர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எந்தவித பாகுபாடும் இன்றி ஆழ் மனசிலிருந்தே புன்னகைத்தார்கள். இந்த நிறுவனத்தில் என்னை தொழிலுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் மனதாரப் பிரார்த்தித்தேன்.

இரண்டு கிழமைகளின் பின்னர் அந்த நிறுவனதிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் தெரிவு செய்யப்பட்டுவிட்டதாக அவர்கள் அறிவித்தார்கள். பின்னர் இறைவனைப் புகழ்ந்துவிட்டு, பெற்றோரின் ஆசியுடனும், நஸீரா தாத்தா மற்றும் நான் முதல் கூறிய அண்ணாவின் வாழ்த்துக்களுடனும் புதிய வேலைக்குச் சேர்ந்தேன்.

எனக்கு தரப்பட்ட அலுவலக மேசைக்கு சென்றபோது எல்லோரும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் கணினி முன்னால் அமர்ந்து எனக்கான வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நான் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்தபோது சிரித்த அந்தப் பெண், கொஞ்ச நேரத்தில் வந்து எனக்கான வேலையை தந்துவிட்டு அதைச் செய்யுமாறு அன்புடன் சொல்லிவிட்டுப் போனாள். அவளருகே இருந்த இன்னொரு சின்னப் பெண், என்னை அக்கா என்று அன்புடன் அழைத்துப் பேசினாள். எனக்கு இதயம் இலேசாகியது. இதுவரை முன்னர் வேலை செய்த அலுவலகங்களில் பட்ட துன்பங்களுக்கு வடிகால் கிடைத்துவிட்ட பிரம்மை எனக்குத் தோன்றியது.

அறையின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண், பகலுணவு நேரத்தல் என்னருகில் வந்து எனது பெயரை விசாரித்தார். பிறகு மற்றவர்களிடம் பகலைக்கு என்னை சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துப் போகுமாறு சொல்லிவிட்டு அகன்று சென்றார். அந்த அறைக்கு தலைவியாக செயற்பட்டு எல்லோரையும் பாசத்தால் கட்டிப்போட்டு கண்காணிக்கும் அந்த அக்கா, அகன்று அப்பால் சென்ற பின்னாலும் அவரது அன்புத் தொனி நிறைய நேரம் என்னை மகிழ்ச்சியிலாழ்த்தியது.
நான் சாப்பிட்டால் என்ன? சர்பபிடாவிட்டால் என்ன என்ற எண்ணம் சிறிதுமின்றி என்னை அவரது தங்கையாகவே எண்ணிய அந்த உரிமை எனக்கு சந்தோசத்தைத் தந்தது. இங்கு எனக்குக் கிடைத்த மூன்று பேருமே மிகவும் நல்லவர்கள்.

இன்னொருநாள் எனக்கு வேலை அதிகமாக இருந்தபோது அந்த அக்கா தானே என்னிடம் வந்து வேலையைப் பகிர்ந்து கொண்டார். வேறு யாரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள். தனக்கிருக்கும் வேலையை தமக்கு கீழிருப்பவர்களுக்கு சுமத்திவிட்டு, தொலைபேசியில் அரட்டை அடிப்பார்கள். அக்கா அப்படியில்லை. எல்லோரையும் சமமாகவே மதிப்பார்.  அக்காவின் வெள்ளை மனம் நன்கு பளிச்சிட்டது. அதுபோல தாம் கொண்டு வரும் டொபி, பிஸ்கட் முதலானவற்றைக்கூட எல்லோருக்கும் கொடுத்து அவர்கள் பகிர்ந்துண்ணும் பழக்கம் என்னைக் கவர்ந்தது. ஒருநாள் அக்கா விடுமுறை எடுத்துக்கொண்டார். அக்கா இல்லாத அலுவலகம் நம் எல்லோருக்கும் தண்ணீரில்லாத சோலை போல் இருந்தது.

எமது மேலாதிகாரியாகத் திகழும் மெடம் அவர்களும் மிகவும் மென் மனது படைத்தவர். கல்வி நடவடிக்கைகளுக்காக உதவி செய்யக் கூடியவர் என்றும் நான் அறிந்தேன். முன்பெல்லாம் ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்லப் பிடிக்காது, ஆனால் இப்போது ஏழு மணிக்கே செல்லப் பிடிக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இறைவனுக்கே புகழனைத்தும்!!!

Tuesday, May 14, 2013

வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் 




இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார்.

மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.


ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது சிறுகதைகள் பற்றி திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் தனதுரையில் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

'ரிஸ்னாவின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கற்பனா உலகிலிருந்து ஆக்கப்பட்டவை. ஒரு பகுதி ஆக்கங்கள், அவரது அனுபவங்களின் அருட்டலால் புனையப்பட்டவை. இச்சிறுகதைகள் வாசகர்கள் இலகுவாகப் படித்து இரசிக்கக் கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் அநேகமானவை கற்பனாரசக் கதைகள். ரிஸ்னா தனது கதைகளை இலாவகமாக நகர்த்திச் செல்கின்றார். இதற்கு அவரது மொழிவளம் துணைபுரிகின்றது. இவரது பாத்திரப் படைப்பு இயல்பாக உள்ளது. பாத்திரங்கள் கதைசொல்லல், ஆசிரியர் கதைகூறல், பின்னோக்கிக் கதைநகர்த்தல் போன்ற உத்திகளைக் கையாண்டு கதைகூறுகிறார்'.

இவரது சிறுகதைகள் மலையகம், முஸ்லிம் சமூகம், பெண்ணியம் போன்ற வௌ;வேறான தளங்களில் நின்று நோக்கத்தக்கவை. மூன்று தளங்களிலும் இவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் கற்பனைக் கதைகளையும் எதிர்பாராத முடிவினைத் தந்து இவர் யாத்திருப்பது சிறப்பம்சமாகும்.

தான் சிறுகதைகளை எழுவதற்குரிய காரணத்தையும் நூலாசிரியர் தனதுரையில் இவ்வாறு மனந்திறந்து கூறுகிறார்.

'அன்றாடம் நான் பார்த்த அல்லது கேட்ட சில விடயங்கள் என் மனதைக் குத்திக் கீறி ரணப்படுத்தின. அவ்வாறான சமூக அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் சிறுகதைகளை யாத்தேன். எனது சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சனைகளின் கருவானது, என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறுவடிவம் என்றும் கூறலாம். ஆகவே அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால், அந்த ஆறுதலைத்தான் என் சிறுகதைகளினூடாக நான் காணும் வெற்றியாக கருதுகிறேன்'.

பின்னட்டைக் குறிப்பில் டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் ரிஸ்னாவின் சிறுகதைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

'பரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தக்க வைத்து இரைமீட்டு, அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுக்கு மலையகம், நகர்புற வாழ்வு, முஸ்லிம் சமூகப் பின்னணி என முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே வாய்த்துள்ளது. இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் திறன்மிக்கவர். நூலாசிரியர் அலங்கார வார்த்தைகளால் வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசுதமிழை வசப்படுத்தி உருவேற்றி வாசகனுடன் உறவாடுவதில் கைதேர்ந்தவர்'.

அழகன் என்ற முதல் கதை. இரண்டு பக்கங்களில் அமைந்திருக்கிறது. சந்தியாவின் கற்பனையோட்டத்தால் கதை நகர்கிறது. பஸ்ஸில் தான் பார்த்த அந்த அழகனின் நினைவுகளை முதலில் வாசிக்கும்போது சந்தியா அவனை காதலிக்கப் போகிறாளா என்ற ஆர்வம் வாசகருக்கு ஏற்படுகிறது. எனினும் இறுதியில் நூலாசிரியர் வாசகர்களை அழகாக ஏமாற்றுகிறார். அதாவது சந்தியா அத்தனை நேரமும் மூன்று வயதுகூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையைப் பற்றியே எண்ணியிருக்கிறாள். கதையின் இறுதி வாக்கியம் இவ்வாறு முடிவுறுகிறது 'எனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை'.

பெண்பிள்ளை பெற்றால் உன்னை விவாகரத்து பண்ணிவிடுவேன் என்ற பிற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் இன்னும் நம் மத்தியில் வாழ்க்கிறார்கள். இறைவனின் தீர்ப்பை மாற்ற முயன்றால் முடிகிற காரியமா? காதல் கல்வெட்டு என்ற ரிஸ்னா எழுதிய சிறுகதை தன் காதலியின் கருப்பப்பை பிரச்சினை பற்றி அறிந்தும் அவளை மணக்க விரும்புகின்ற வசீகரன் பற்றியது. வசீகரனின் கீழுள்ள கூற்றை வாசிக்கையில் வாசகருக்கும் இதயம் கனத்துவிடுகின்றது. 'நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னுதானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. அது போதும். வா கார்ல ஏறு என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச் சென்றான்'.
மலையக தோட்டத் தொழிலாளிகள் தேயிலைக் காடுகளில் காலங் காலமாக கஷ்டப்படுகிறார்கள். போதாக் குறைக்கு தமது ஆண், பெண் பிள்ளைகளை தலைநகருக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு சிறுவயதிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்ட வனிதாவின் நிலையை விதி என்ற கதை சித்தரிக்கிறது. தனது வீட்டாருக்காக தனக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளையும் வனிதா தாங்கிக்கொள்வதாக கதை முடிவுறுகிறது. அந்த வனிதாவின் சோகக்குரல் இதோ.. 'விடிந்தால் ராத்திரி வரைக்கும் வேலை. விருந்தினர்கள்னு வீட்டுக்கு யாராச்சும் வந்தா எந்த ஒத்தாசயும் இல்லாம முதுகு முள்ளு ஒடியங்காட்டிக்கும் தனியாக்கெடந்து சாவனும். இரவில் நீங்க சுகமாக தூங்குறதுக்கு தாய்ப்பாலும் கொடுக்காமல் புள்ளையை எங்கிட்ட தந்துடரீங்க. சின்னக் குழந்த பாவம். தினமும் ராத்திரிக்கு புட்டிப்பால் அடிச்சுக் கொடுத்தாலும் அது குடிக்கமாட்டேங்குது. ராவைக்கெல்லாம் கண்முழிச்சி, பகலில வேல செஞ்சி இன்னமும் இங்கயே கதின்னு இருக்கேனே. உண்மைக்கும் நீங்க சொல்ற மாதிரி நான் எரும மாடுதான். எரும மாடேதான்'.

இறைவன் சிலருக்கு வசதியையும், பலருக்கு வறுமையையும் கொடுத்திருக்கிறான். பணமிருப்பவர்களிடம் ஏழைகளுக்கு கொடுத்துதவுமாறும் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் ஏழைகளின் கொஞ்சநஞ்ச உடமைகளையும் பறிப்பதற்கே பலர் முதலைகளாய் வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு மனிதர்தான் உஸ்மான் ஹாஜி. தனது ஏழைச் சகோதரனை வாழ விடாதவர். இறுதியில் உஸ்மான் ஹாஜி விபத்தில் சிக்க அவரது சகோதரர் அக்பர் இரத்தம் கொடுத்து உதுவுகிறார். அதைக் கேள்விப்பட்டு திருந்திய உஸ்மானின் ஆதங்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது. 'நான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ்! அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக'.

தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையே பிள்ளைகள் வெறுத்தொதுக்கும் கலிகாலம் இது. பாசம் யாவும் பணத்தால் மதிக்கப்படும் நிலை இன்று. அப்படியிருக்க தனது பாட்டி, பாட்டனை அன்பாக பார்க்க யாருக்கு மனது விசாலமாயிருக்கிறது? அவர்களின் மறைவை எண்ணி அழுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது? வேதனை என்ற சிறுகதையை ரிஸ்னா தனது பாட்டி, பாட்டனை நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார். அவர்கள் மேல் தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார். 01. 'நான் மௌத்தாகின காலத்துக்கு என்னை ஞாபகம் வரும் போது யாஸீன் சூரா ஓதிக்கொள்' என்றார். (யாஸீன் சூரா என்பது அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம்) நான் எதுவுமே பேசவில்லை. காரணம் அவர் மௌத்தாகும் விடயமொன்றை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. 02. 'உம்மம்மா பக்கத்தில் அவரது கம்பளிப் போர்வையை போர்த்தி அவரின் பழைய ஞாபகங்களை கேட்டபடியே படுக்க ரொம்பவும் ஆசை எனக்கு. அந்த போர்வை இப்போது எங்கள் மாமா வீட்டில் இருந்தாலும் உம்மம்மா இல்லாத இப்போதுகளில் அதைப் போர்த்த மனசு அடம் பிடிப்பதேயில்லை'.

சிட்டுக்குருவி என்ற கதையில் தனது ஒன்றுவிட்ட தங்கை ஷியாவை, அதாவது சிற்றன்னையின் (தாயின் சகோதரி) மகளை தன் வீட்டில் தங்கியிருந்து படிக்கும்படி சொல்கிறார் அபி டீச்சர். எனினும் அவரது சுயரூபம் ஓரிரு கிழமைகளில் தெரிகிறது. நம்பியோர் கழுத்தறுக்கப்படுவர் என்ற புதுக் கூற்றுக்கமைய அபி டீச்சர் தன் வீட்டிலிருந்து ஷியாவை தீடீரென போகச் சொல்கிறார். படிக்க வந்த ஷியா ஒன்றுவிட்ட சகோதரியின் வார்த்தைகளால் துடிக்கிறாள்.

இவ்வாறு கற்பனை, பாசம், பெண்ணியம், மலையகம், சமூகம் என்ற பல்வேறு தளங்களில் நின்று சிறுகதைகளை படைத்திருக்கும் ரிஸ்னா, இன்னும் பல இலக்கியத் துறைகளில் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வைகறை (சிறுகதை)
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0775009222
விலை - 300 ரூபாய்

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' 
சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை


சிவலிங்கம் சிவகுமாரன்

தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா இலங்கை முஸ்லிம் பெண் படைப்பாளிகளில் வளர்ந்து வரும் அதே நேரம் அறியப்பட்ட ஒருவராக விளங்குகிறார். இவரது முதலாவது சிறுகதை தொகுதியாக வைகறை என்ற படைப்பு வெளிவந்துள்ளது. இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 21 சிறுகதைகள் அடங்கியுள்ளன. 


உலக நாடக மேடைகளில் நாம் சந்திக்கும் வழமையான பாத்திரங்களே சிறுகதையில் இடம்பிடித்துள்ளன. வசிக்கும் சூழல் சார்ந்த அனுபவங்கள் இலக்கிய படைப்புகளாக வெளீவரும் போது பாத்திரங்களாக நாமும் அப்படைப்புகளில் நடமாட முயற்சிப்போம், எதிர்மறை எண்ணங்கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட பாத்திரங்களாக மாறி அறிவுரை கூறுதல் அல்லது சம்பவங்களை சிருஷ்டித்து பாடம் புகட்டுதல் போன்ற அம்சங்கள் புனைகதை சார்ந்த இலக்கியங்களில் சகஜம். அந்த வெளிப்படுத்துகை சில கதைகளில் தெரிகிறது. வாசிப்பவர்களுக்கு தடுமாற்றம் இல்லாத மொழி நடை பாராட்டப்பட வேண்டிய விடயம்,அதாவது வட்டாரவழக்குச்சொற்களும் பிரதேச மொழி நடையும் உள்வாங்கப்படாத அம்சம் எல்லோரையும் வாசிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்ததாக இருக்கலாம்.

ரிஸ்னாவின் படைப்புகளை பார்க்கும் போது ஒரு விடயத்தை முன்னிறுத்தலாம், பெண் படைப்பாளிகளில் குறிப்பாக முஸ்லிம் பெண்படைப்பாளிகள் சமூக கட்டுக்கோப்புக்குள் வாழ வேண்டும்,கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால் அதே கட்டுக்கோப்போடு தான் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்பதே அது. காரணம் சமூக சீர்கேடுகள், வறுமை, அதிகாரப்போக்கு, ஆணவம், கர்வம், ஏமாற்றுதல், வஞ்சம் போன்றவற்றை இவரது கதைகளில் பாத்திரங்களாக நடமாட விட்டு விளைவுகளை தண்டனைகளாக தந்திருக்கிறார். சிறு கதையானது அத்தளத்திலிருந்து சற்று வெளியே சென்று மீண்டும் கதைக்கு திரும்பும் பாணியை இப்போது எவரும் பின்பற்றுவதில்லை என்றே கூற வேண்டியுள்ளது. அதாவது கதைக்கு இடையே படைப்பாளி தரும் தத்துவங்கள்,வர்ணணைகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

ரிஸ்னாவின் கதைகளில் தேவையில்லாத அலட்டல்கள் இல்லை என்பதால் வாசிப்போருக்கு இலகுவாகவும் விரைவாகவும் வாசிக்க முடிகிறது. நடை மிகவும் இலகுவானது. விதி,கானல் நீர்,வாக்குறுதிகள்,கண்ணீர் போன்ற சிறுகதைகள் மனதை தொடுகின்றன. மலையகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ரிஸ்னா தற்போது தலைநகரில் வாழ்ந்து வருகிறார். எனினும் இவரை மலையக பெண் படைப்பாளிகளில் ஓருவராக பெயரிடவே எனது மனம் விரும்புகிறது. அவரது இலக்கிய பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர்: வைகறை (சிறுகதை தொகுதி)
நூலாசிரியர்: தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

Saturday, April 13, 2013

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல

வைகறைப் பொழுதினில்
வைகறை வருவது
மனதுக்கு இனியது
சிறுகதை தாங்கி
சிறப்புடன் திகழ்வது
சிந்தைக்குச் சிறந்தது!

ஆம்! இளம் பெண் எழுத்தாளரும், கவிதாயினியும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் துணை ஆசிரியருமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, தனது இரண்டாவது நூலாக வைகறை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருக்கிறார். இவர், ஏற்கனவே `இன்னும் உன் குரல் கேட்கிறது' என்ற பெயரில் கவிதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டிருந்தார். வாசகர் மனதில் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் வைகறை சிறுகதைத் தொகுதியும் வந்துவிட்டது.



இந்நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 27வது வெளியீடாகும். இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் மேற்படி மன்றம், கவிதாயினியும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் `தென்றலின் வேகம்' என்ற கவிதைத் தொகுதியினையும் ஏற்கனவே வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பிரபல படைப்பாளியும், மூத்த எழுத்தாளருமான திரு. நீர்வை பொன்னையன் அவர்கள், சகல சிறுகதை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் வகையில் மிகவும் அழகான, பொருத்தமான, பயனுள்ள சில கருத்துக்களைக் கூறியிருப்பது பிரயோசனமானதாக இருக்கிறது. சிறுகதை இலக்கணம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு அவரது கருத்துக்கள் பயன்பெறுகின்றன. பொதுவாக சிறுகதை ஒன்று ஆரம்பம், வளர்ச்சி, முதிர்வு (கிளைமேக்ஸ்) போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்  என்பது பொதுவான விதி. சிறுகதைக்கு அமைப்பு என்று ஒன்று இல்லை, எப்படியும் கதை சொல்லியாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மொழி வளமும், பிரயோகமும், நடமாடும் பாத்திரப் படைப்புகளும், எதிர்பாராத திருப்பமும்தான் சிறுகதைக்கு சுருதி சேர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பயிற்சிச் சிறுகதையாளர்களுக்கும், பயிற்சி பெற்றுத் திகழும் சிறுகதையாளர்களுக்கும் அறிவுரைகளைத் தரக்கூடியதாக இருக்கிறது. 

தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா, ஏற்கனவே தினகரன், தினக்குரல், வீரகேசரி, நவமணி, சுடர் ஒளி போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், ஞானம், மல்லிகை, செங்கதிர், ஜீவநதி, ஓசை போன்ற முன்னணி சஞ்சிகைகளிலும் எழுதி வருபவர். இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவில் சிறியதும், பெரியதுமான 21 சிறுகதைகளில் அநேகமானவை மேற்படி பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கவிதையாகத் தோன்றி, காப்பிய உருக்கொண்டு, உரைநடை மாற்றம் பெற்று இன்று இருக்கும் நிலைக்கு சிறுகதை இலக்கியம் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும், அதிலே பல ரகக் கதைகள் பல பெயர்களில் அழைக்கப்படக்கூடியதாக உருவத்திலும், உள்ளடக்கத்திலும் வேறுபட்டதாக சிறுகதை வடிவம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சிறுகதைக்கு வரைவிலக்கணம் கூறியுள்ள அன்ரன் செக்கோ, எட்கார் அலன்போ, எம்.ஈ. பாற்ஸ், எரிக் சேர்விக், ஹர்தோன், கா. சிவத்தம்பி, மார்க்ஸிம் கார்க்கி, புதுமைப்பித்தன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களை விளக்கியிருக்கிறார் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள்.

ரிஸ்னாவின் இந்தத் தொகுப்பில் காதல் கதைகள், முஸ்லிம்களின் வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் பல்சுவைக் கதைகள் அடங்கியுள்ளன. நூலில் முதலாவதாக இடம்பெற்றிருக்கும் அழகன் என்ற கதை அளவில் சிறியதாக இருந்தாலும் அருமையானதொரு பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது. கதையை முழுமையாகப் படித்த பின்புதான் அதனைக் காதல் கதையாக எடை போடுபவர்கள் இறுதியில் ஏமாற்றத்தைக் கண்டுகொள்வார்கள். ஏனெனில் ரசிப்பு, சிரிப்பு, தொடுகை, உரையாடல் எல்லாம் காதலுக்குச் சொந்தமான பண்புகள் போல் காணப்படுவதுதான். அதே போன்று விதி என்ற சிறுகதை தோட்டத் தொழிலாளர்களின் வருமானக் குறைவினால் தமது பெண் பிள்ளைகளை கொழும்பில் உள்ள வீடுகளுக்கு அனுப்பி வைக்கும்போது பிள்ளைகள் படும் துயரினையும், நகர வாழ்வின் தன்மைகளையும், மனித நேயமற்ற மனிதர்களின் பண்புகளையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

மாற்றம் என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் கதையானது, தோட்ட மக்களின் வறுமை நிலையினைக் காட்டுவதோடு காலங்காலமாக அவர்கள் தேயிலைத் தோட்டத்தோடும், அழுக்கு உடைகளோடும்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, படித்து, முன்னேற வேண்டும் என்ற தைரியத்தை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளது. யதார்த்தமாக இருந்தாலும் கற்பனை வளம் பாத்திரப் படைப்புக்களை நன்றாக சித்தரிக்கிறது. தோட்டக்காட்டான் என்று அடைமொழி வழங்கி சித்திரா டீச்சரினால் கேவலமாக பார்க்கப்பட்ட முரளி என்ற சிறுவன் படித்து, முன்னேறி டாக்டர் பட்டம் பெற்று பிரபலம் அடைந்த பின்புதான் கைராசிக்கார டாக்டராக வந்திருக்கிறான். அதை அறியாமல் சித்திரா டீச்சர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்ட போதும் அது நிராசையாகிப் போனதால் அவமானம் தாங்காமல் தலைகுனிவுக்கு உள்ளாகிறார். இதனை அருமையான படிப்பினை ஊட்டும் கதை என்று சொல்லாம்.

அதே போன்று உறவுகள் என்ற கதை ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த அண்ணன் தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவு, விபத்தில் சிக்கிய சகோதரனை தனது இரத்தத்தைக் கொடுத்து காப்பாற்றியதனால் மறைந்தது. 

மேலும் தேயிலைச் செடிகளுக்கு உரமாய் உழைக்கும் அப்பாவி ஜீவன்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் போது அட்டைக்கடியிலும், பாம்புப் புற்றுகளிலும் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முழங்கால் அளவுக்கு பொலித்தீன் பைகளைக் கட்டிக் கொண்டு தேயிலை சுமை சுமக்கும் அவர்கள் மீது கருணைகாட்ட எந்தத் தலைவன் முன்வந்தான்? காலங்காலமாக தேர்தல் காலங்களில் மாத்திரம் இந்தத் தோட்டங்களில் பாதம் பதித்து போலிப் பாசம் காட்டி இறுதியில் ஏமாற்றும் இந்த ஏமாற்று வித்தைக்காரர்களை தொடர்ந்தும் தலைவர்களாக ஏற்றுக்கொள்வதா? என்ற கேள்வி மூலம் தோட்டங்களில் நிலவும் அரசியல் நிலவரம் துலாம்பரமாகிறது. 

அதே வேளை தோட்டப் பாடசாலைகளில் படிக்கப் போகும் பிள்ளைகளின் நிலவரங்களையும் எடுத்துக்காட்ட கதாசிரியர் மறக்கவில்லை `காலில் செருப்பில்லாமலும், புத்தகப் பை இல்லாமலும் வருகின்ற அப்பாவி மாணவர்களை நிறுத்தி வைத்து கேள்வி கேட்கவும், பிரம்பினால் தோலுரிக்கவும் தெரிந்த ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டு நிலவரத்தைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பாரா? வேண்டாம். தெரிந்துகொள்ள முயற்சியாவது எடுத்திருப்பாரா? ஐந்தாறு பிள்ளைகளின் சாப்பாட்டுத் தேவையையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் ஒரு குடும்பத்துக்குள் இருந்து கல்வி கற்பதற்காக புறப்பட்டு வரும் அந்த மாணவனை தட்டிக்கொடுக்க ஒருவருமில்லை. ஆனால் அயன் கலையாத ஆடையுடனும், பொலிஷ் பண்ணப்பட்ட சப்பாத்துடனும் வரும் ஒரு சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்னே கௌரவம் கொடுக்கிறார்கள்?' என்று மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி கதையை சிறப்பாக நகர்த்தியிருக்கிறார். 

இன்று பெண் எழுத்தாளர்கள் என்ற வகையில் நிறையப் பேர் எழுதி வந்தாலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் ஒரு சிலரே எழுதுவதைக் காண முடிகிறது. மூத்த தலைமுறை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் வயது மூப்பு, குடும்பப் பிரச்சினை, நேரமின்னை போன்ற பல்வேறு காரணங்களினால் எழுதுவதிலிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். என்றாலும் இளைய தலைமுறை எழுத்தாளரான எச்.எப். ரிஸ்னா தொடர்ந்தும் சமூகத்துக்காக, சமூகத்திலுள்ள பிரச்சினைகளைப் புரியவைப்பதற்காக, சமூக சீரழிவுகளை சீர் செய்வதற்காக எழுத வேண்டும். சிறுகதை எழுத்தாளராக வர ஆசைப்படுபவர்கள் இந்நூலை வாங்கிப் படிப்பதன் மூலம் சிறந்ததோர் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியம். எச்.எப். ரிஸ்னாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - வைகறை
வகை - சிறுகதை
நூலாசிரியர் - எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி – 07750092220719200580
விலை - 300 ரூபாய்

Wednesday, November 14, 2012

எனது சிறுகதை நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்த டாக்டர் M.K.. முருகானந்தன் அவர்கள் ஆற்றிய தலைமையுரை

'வைகறை' தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் சிறுகதைத் தொகுதி

எம்.கே.முருகானந்தன்

அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களின் முதலாவது சிறுகதைத் தொகுதி நூலினது வெளியீட்டு விழா இது. இலக்கியத்துறையில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர் அவர். ஏற்கனவே 'இன்னும் உன் குரல் கேட்கிறது' என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டதின் மூலம் இலக்கிய உலகில் தனது அடையாளத்தை பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'வைகறை' என்ற இந்த நூல் அவரது சிறுகதைத் தொகுதியாகும். இந்த நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் வெளியிட்டிருகிறது.
'சிறுகதை இலக்கியத்தின் இளையது. கடைக்குட்டி. கடைக்குட்டி எப்பொழுதும் காரமானதாகவும் வீச்சானதாகவும் இருக்கும்.' இவ்வாறு சொல்கிறார் நீர்வை பொன்னையன். இந்த நூலுக்கான அணிந்துரையை எழுதியிருக்கும் நீர்வையின் முதல் வசனம் அவ்வாறு ஆரம்பிக்கிறது.
ஆம் நல்ல சிறுகதைகள் அவ்வாறுதான் இருக்கும். அவ்வாறுதான் இருக்க வேண்டும்.

“A short story is a work of fiction, usually written in narrative prose” எனப் பொதுவாக ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது சிறுகதை என்பது உரைநடையில் அமைந்திருக்கும். அது அளவில் நாவலைப் போலவோ காவியங்கள் போலவோ நீண்டதாக அன்றிக் குறுகியதாக இருக்கும். அத்துடன் அது கற்பனையில் புனையப்பட்ட படைப்பாகவும் இருக்கும்.

ஆனால் சிறுகதை பற்றிய இந்தக் குறிப்பு பூரணமானது அல்ல என்பது மட்டுமின்றி முழுமையாக  ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அல்ல.
சிறுகதையானது எப்பொழுதுமே கற்பனையில் உதிக்கின்ற படைப்பாக இருக்க முடியாது. அது வாழ்வோடு தொடர்புடையது. ஓவ்வொரு படைப்புக்குமான ஊற்று அல்லது அதனுடைய கரு எதுவுமற்ற சூனியத்திலிருந்து திடீரென வந்து குதிக்கும் கற்பனையாக இருக்க முடியாது. எங்கோ நடந்த ஒரு சம்பவத்துடன் அல்லது அனுபவத்துடன் தொடர்புடையதாகவே நிச்சயம் இருக்கும். அதனை கதாசிரியன் தனது சிந்தனை வீச்சாலும், அனுபவத்தாலும், மொழி வளத்தாலும் செழுமைப்படுத்துவான். படைப்பானது சுவார்ஸமானதாகவும், விறுவிறுப்பானதாகவும், மனநிறைவைத் தருவதாகவும் வாசகனுக்கு அமையும்படியான நகாசு வேலைகளைச் செய்வதுதான் படைப்பாளியின் பங்காகும்.

இவ்வாறான எல்லா நல்ல அம்சங்களும் கூடிய சிறுகதையை எல்லோராலும் சுலபமாகப் படைத்துவிட முடியாது. அதற்கு பரந்த அனுபவ வீச்சு கிட்டியிருக்க வேண்டும். சூழுலை நுணுக்கமாக ஆழ்ந்து நோக்கும் இயல்பு இருக்க வேண்டும், ரசனையுணர்வும், மொழியாற்றலும் கை கூடவேண்டும். அதிலும் முக்கியமாக ஒரு ஆரம்ப எழுத்தாளனுக்கு தேடலும், பொறுமையும் விடாமுயற்சியும் மிக மிக அவசியம். இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது தேடலுள்ள ஒரு நல்ல வாசகனாக இருப்பதே ஆகும்.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது பெயர் குறிப்பிடுவது போல மலையகத்தைத் பிறப்பிடமாகக் கொண்டவர். அழகும் குளிர்மையும் நிறைந்த இயற்கைச் சூழலில் வளர்ந்தவர். தனது முஸ்லிம் சமூக உறவுகளுக்கு அப்பால் மலையக மக்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தவர். அதே நேரம் நகர்ப்புறத்தின் அவசர வாழ்வின் அனுபவங்களையும் பெற்றவர். நாளந்த வாழ்வுக்கு அல்லற்படும் மக்களையும், பணம் பதவி, அந்தஸ்து என சொகுசுக்கு அலையும் வர்க்கத்தினரையும் நிஜ வாழ்வில் கண்டவர்.
இவ்வாறு மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே இவருக்கு வாய்த்துள்ளது. பரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தெக்க வைத்து இரை மீட்டு அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும்.

ரிஸ்னா தனது அக்கம் பக்கத்தைக் கருத்தூன்றி அவதானித்திருக்கிறார். இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் முன்னலைப்படுத்திச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. அவற்றுள் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டதாக இவரது படைப்புகளைக் காண முடிகிறது.

இவரது பெரும்பான சிறுகதைகள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி நேரடியாகக் களத்தில் இறங்குகின்றன. இதனால் சலிப்பின்றி கதைக்குள் இறங்க முடிகிறது. மனத்தை ஒரு முகப்படுத்தி வாசிக்க ஆவல் ஏற்படுகிறது.
கருவைப் பொறுத்தவரையில் தனது மனதைப் பாதித்த விடயங்களைப் பற்றியே பேசுகிறார். காதலையும் ஆண் பெண் உறவுகளையும் மையமாகக் கொண்ட பல படைப்புகள் உள்ளன. அத்துடன் குடும்ப உறவுகள் தொடர்பான படைப்புகளும் உள்ளன. களத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் சமூகக் கதைகளும் மலையகம் சார்ந்தவையும் அதிகம். தனக்கு நெருக்கமான சூழலிருந்து கதைகளை ஆக்கியுள்ளமை அவற்றின் நம்பிக்கைத் தன்மைக்குச் சான்றாக இருக்கின்றன.

சிறுகதைகள் என்ற இலக்கிய வடிவத்தைப் பொறுத்த வரையில் அதன் முடிவு முக்கியமானது. இது எந்த இலக்கிய வடிவத்திற்கும் பொருத்தமானதாயினும் சிறுகதையில் அது மிகவும் சிறப்பாக அமைய வேண்டும். முடிவைப் பொறுத்த வரையில் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட் வேண்டியலையாகும். முடிவானது வாசகனுக்கு நன்மை பயப்பதாக அவனுக்கு ஒரு முக்கிய செய்தியைக் கடத்துவதாக இருக்க வேண்டும். இது பொதுவாக சமூக நோக்குள்ள விமர்சகர்கள் கருத்தாகும். இதை மறுப்பாரும் உளர். அது எந்தச் செய்தியையும் பகிர வேண்டியதில்லை மனதை நிறைவு செய்தால் போதும் எனக் கருதுவார்களும் உளர்.

ரிஸ்னா படைப்புகள் வெறும் கதைகள் அல்ல. அதற்குள் ஒரு செய்தி, அதுவும் சமூகத்திற்கு நன்மையளிக்கும் செய்தி மறைந்திருக்கும். எனக்கு இது உவப்பானதாகும்.

முடிவைப் பொறுத்த வரையில் அடுத்த முக்கிய அம்சம் அதில் இருக்க வேண்டிய திடீர் திருப்பம் எனலாம். ஒரு கோணத்தில் எம்மை அழைத்துச் செல்லும் படைப்பானது திடீரென எதிர்பாரத திருப்பத்தைத் தரும்போது இன்ப அதிர்ச்சி கிடைக்கும். ரிஸ்னா பல கதைகளில் இத்தகைய திருப்பத்தைத் தருகின்றன. அதற்கு நல்ல உதாரணம் நூலின் முகப்புக் கதையான அழகன் ஆகும். திடீர் திருப்பத்தால் மட்டுமின்றி சொற் செட்டு, மிகக் குறைந்தளவான பாத்திரங்கள் போன்றவற்றாலும் இக் கதை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
குழந்தைத் தொழிலாளர், ஆணாதிக்கம் பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற வேறு பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் ஆற்றலை இவரது படைப்புகளில் காண்கிறோம்.

ஆனால் அலங்கார வார்த்தைகள், புரியாத சொற்களைப் பொழிதல் இவரது பாணி என்று சொல்ல முடியாது. வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசு தமிழில் எழுதுகிறார். அதை வசப்படுத்தி உருவேற்ற முயன்றிருக்கிறார். அந்த முறையில் வாசகனுடன் நெருங்கி வர முடியும் என்பதைப் புரிந்திருக்கிறார். ஆயினும் தனது படைப்புகளில் மேலும் கூடியளவு இறுக்கமும், சொற்செட்டும், கொண்டுவருவது படைப்புகளை செழுமைப்படுத்த உதவலாம். தான் சார்ந்துள்ள சமூகத்தில் மறைந்து கிடக்கும் அவலங்களையும் பெண்களின் பாடுகளையும் வெளிக் கொணர்வது அவரது படைப்புகளை வலுப்படுத்த உதவும் என நம்புகிறேன்.

ஜனசங்சதய இலக்கிய அமைப்பின் சிறுகதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்ற சிறுகதைப் போட்டி, இருக்கிறம் சஞ்சிகையின் கவிதைப் போட்டி போன்றவற்றில் பெற்ற பாராட்டுகளும் பரிசுகளும் இவரது படைப்பாற்றலைப் பரந்துபட அறியச் செய்திருக்கினறன.

வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய உட்பட இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளிலும், மல்லிகை, ஞானம், ஜீவநதி, செங்கதிர் உட்பட இலங்கையின் முக்கிய சஞ்சிகைகள் அனைத்திலும் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன. இணையத்தில் தனது வலைப்பதிவுகள் ஊடாகவும், இணைய சஞ்சிகைகள் ஊடாகவும் பதிவிடுகிறார். ரீவி, வானொலி ஊடகங்களிலும் தடம் பதிக்கிறார். இவ்வாறு வேகமாகவும், பரபரப்பாகவும் இயங்கும் அதே நேரம் படைப்பில் ஆழத்தை அவாவியும் படைக்கிறார்.

200ற்கு மேற்பட்ட கவிதைகள், 30ற்கு மேற்பட்ட சிறுகதைகள் என குறுகிய காலத்திற்கு பெரு அறுவடை செய்துள்ளார். தான் படித்த பல நல்ல நல்ல நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் நூல் விமர்சனங்களும் செய்கிறார்.

இதனால்தான் இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பில் உலா வரும் இன்றைய வாசகர்கள் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ஆக்கங்களில் நனைந்து திளைத்து மகிழாதிருக்க முடியாது. குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் இவர் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

நீர்வையின் சிறப்பான அணிந்துரை நூலுக்கு அணிசேர்க்கிறது. அதில் இந்த நூலைப் பற்றி மட்டுமின்றி சிறுகதை இலக்கியம் பற்றிய சிறப்பான அறிமுகமாகவும் இருக்கிறது.

கவிதை காவியம் போன்றவை தமிழிலும் சரி உலக இலக்கியங்களிலும் ஆரம்பகால இலக்கியமாக அமைந்திருப்பதையும், அதன் பின்னர் கைத்தொழிற் புரட்சிக்காலத்துடன் ஏற்பட்ட இயந்திர மயமான வேகமாக இயங்க வேண்டிய காலகட்டம் வந்ததும் குறுகிய நேரத்தில் படிக்கக் கூடிய இலக்கியமான சிறுகதை தோற்றம் பெற்றதைக் கூறுகிறார். மேலும் ஒரு சிறுகதையானது எவ்வாறு இருக்க வேண்டும் அதன் பண்புகள் யாவை போன்ற விடயங்களையும் மிக சிறப்பாக எடுத்துச் சொல்கிறது. சிறுகதை இலக்கியத்தில் தேர்ச்சி பெற விரும்பும் ஆரம்ப எழுத்தாளர்களுக்குப் பயன்படக் கூடிய சிறப்பான கட்டுரை இது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. இந்த அமைப்பானது கடந்த பல வருடங்களாக பல்வேறு இலக்கிய மற்றும் சமூக அக்கறை மிக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இவை ஈழத்து இலக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை. கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், நூல் வெளியீடுகள், விமர்சன அரங்குகள் ஊடாக  இலங்கையின் இலக்கியப் படைப்புகளை வாசகர்களிடையே அறிமுகப்படுத்துகின்றன.

பேராசிரியர் கைலாசபதி, கவிஞர் முருகையன், போன்ற மறைந்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளைச் செய்து வருகின்றன. முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்தும் அவர்கள் பற்றிய அறிமுகங்களையும் நூலாக வெளியிடும் பணியைச் செய்கின்றன. இன்றைய தலைமுறையினருக்கு முற்போக்கு இலக்கியமானது ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய அரும் பணிகளை தெரியப்படுத்துவற்கு இத்தகைய செயற்பாடுகள் உதவுகின்றன. அவற்றை ஆவணப்படுத்துவதும் அத்தகைய நூல் வெளியீடுகளில் ஈடுபடுவதும் முக்கிய விடயமாகும்.

இன்றைய இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் பின் நிற்கவில்லை. அவர்களது நூல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா வைகறை என்ற இந்த நூலானது இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினரின் 27வது வெளியீடாகும். மற்றொரு புதிய எழுத்தாளரான வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற நூலை 2010 இல் வெளியிட்டது. அதேபோல திருமதி குமதி குகதாசன் அவர்களின் தளிர்களின் சுமைகள் என்ற நூலை இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தது.

இறுதியாக,

இவரது படைப்பாளுமைக்கு கட்டியம் கூறும் நூலாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. நெடும்பயணமாகத் தொடரப் போகும் இவரது இலக்கியப் பயணத்தில் வளமும், புகழும், சித்திகளும் கிட்ட வாழ்த்துகிறேன்.

பேஸ்புக் வாயிலாக இந்நூல் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

http://www.facebook.com/media/set/?set=a.10152230789800268.931646.750020267&type=1&notif_t=backdated_content

நன்றிகள் - டாக்டர் M.K. முருகானந்தன்

Monday, July 18, 2011

உறவுகள் !



நளீம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு யோசித்தவாறு இருந்தான். அக்பர் சாச்சாவின் நிலைமையை எண்ணி அவனுக்குள் இனம்புரியாத ஒரு வலி இருந்தது. தன் தந்தையின் பேராசை காரணமாக சகோதரன் என்று கூட யோசிக்காமல் அக்பர் சாச்சாவின் குடும்பத்தாரை இந்தப் பெரிய வீட்டைவிட்டு வாப்பா துரத்தியது அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது மட்டுமாயிருந்தால் பரவாயில்லையே. இப்போது இருக்கும் சிறிய நிலப்பரப்பையும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்காக வேலிச் சண்டையை ஆரம்பித்திருக்கும் வாப்பா மீது கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டது.

ஆனால் அந்த காணித்துண்டை மகான் போல விட்டுக்கொடுத்தது நளீமின் வாப்பாவல்ல. அது அக்பர் சாச்சாவின் மனைவியின் சொத்து. அதிலாவது நிம்மதியாக இருக்கவிடாமல் சதாவும் அவர்களை நச்சரிப்பதும், இன்று காலை அவன் எதிர்பாராத விதமாக கண்ட காட்சியும் நளீமுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

பாவம் அக்பர் சாச்சா. மிகவும் நல்லவர். இரண்டு பெண் பிள்ளைகளுக்கும், ஒரு ஆண் பிள்ளைக்கும் தகப்பனான அவர் அந்த பெண் பிள்ளைகள் இருவரையும் திருமணம் செய்து கொடுப்பதற்காகவும், பாடசாலை செல்லும் தனது கடைசி மகனின் செலவுக்குமாக மிகவும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர். இன்றைய காலத்தில் விலைபோகும் சில மணமகன்களுக்கு ஆதனம் சீதனம் என்று கொடுக்க வேண்டுமல்லவா?

‘அல்லாஹ்வே அவரின் நிலைமையை இலகுவாக்க நீதான் அருள் புரிய வேண்டும்’ என்று மனதுக்குள் இறைஞ்சிக் கொண்டான் நளீம்.

***************

நளீமின் வாப்பாவான உஸ்மான் ஹாஜி ஊருக்கு செலவழிப்பதாக காட்டிக்கொள்பவர். பெரிய பள்ளிக்கு கொழும்பிலிருந்து ஜமாத் வந்தால் பெருமைக்காக சாப்பாடு கொடுப்பார். ஆனால் ஏழைகள் யாராவது கேட்டுப்போனால் அவர், அவர்களை விட ஏழையாகி விடுவார். இந்த மாதிரி குணமுடைய உஸ்மான் ஹாஜி பலமுறை ஹஜ்ஜூக்கும், உம்ராவுக்கும் போய் வந்தவர். ஆனால் அந்தப் பயணமானது தன் வியாபார விடயங்களை முக்கியப்படுத்திக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும். இப்போதைக்கே டவுனில் ஐந்து கடைகளுக்கு சொந்தக்காரர். காசு, சொத்து என்று அவருக்கு அல்லாஹ் நிறைய அபிவிருத்தி செய்திருக்கிறான். ஆனால் இல்லாதவர்களுக்கு தர்மம் செய்யும் மனப்பான்மை அவருக்கு பிறவியிலிருந்தே இல்லாத பழக்கமாக இருந்தது. பேர் புகழுக்காக அள்ளிக்கொடுப்பவர். உண்மையான ஏழைகளுக்கு கிள்ளியும் கொடுக்கமாட்டார். அதாவது ஷநான் எனக்கு எனது| என்ற தன்னிலைக் கொள்கையுடடையவர் உஸ்மான  ஹாஜி.

அவர் தனது பிள்ளைகளுக்கு எந்தவித குறையும் வைத்ததில்லை. உம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்து வைக்குமுகமாக அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

தற்போது கூட தனது மூன்றாவது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் யோசனையில் இருக்கும் அவர் தனது வியாபார விடயங்களில் இன்னும் மும்முரமாக இருக்கிறார். ஏனெனில் தன் இரண்டு மருமகன்மாரை விட இப்போது வரப்போகும் மருமகனுக்கு அதிகமாக சீதனம் கொடுக்க வேண்டும். இவ்வாறான திருமணங்களை தன் சகோதரிகளுக்கு செய்து கொடுப்பதில் நளீமுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. எனினும் என்ன செய்ய? வாப்பாவைப் போலவே தாங்களும் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சகோதரிகளை என்ன செய்யலாம்?

உம்மா இருந்தாலாவது நல்ல விடயங்களை சொல்லிக் கொடுத்திருப்பார். ஆனால் அல்லாஹ்வின் நாட்டத்தை யாரால் மாற்ற முடியும். உம்மா மௌத்தாகி இன்றைக்கு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதே என்று எண்ணி தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வான்.

சீதனமின்றி ஒரு ஏழைப் பிள்ளையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற நற்குணமுடையவன்; நளீம். நளீமின் உம்மா கூட அவ்வாறே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வாப்பாவான உஸ்மான் ஹாஜிக்கு அதில் ஒரு துளி கூட இஷ்டமில்லை. தன் பணக்கார நண்பர் ஒருவரின் மகளுக்கே கொழுத்த சீதனத்துடன் நளீமை திருமணம் செய்து கொடுப்பது என்ற வைராக்கியத்தில் அவர் இருந்தார்.

நளீம் சில பொழுதுகளில் சாச்சாவின் வீட்டுக்குப் போவதுண்டு. அந்த சந்தர்ப்பங்களில் சாச்சா மிகவும் பயந்து போய்விடுவார். தன் நானாவின் குணமறிந்தபடியால் நளீமுக்கு ஏதும் ஏசி விடுவாரோ என்று யோசித்துக்கொண்டிருப்பார். ஆனால் அவர்கள் அனைவரும்; நளீமின் வருகையால் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

தன்னையும் சொந்தமகன் போல அவர்கள் எண்ணுவது நளீமுக்கு மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அவனும் அங்கு போகின்ற சந்தர்ப்பங்களின் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களை கொண்டு செல்வான். பாடசாலைபோகும் சாச்சாவின் சின்ன மகனுக்கும், சகோதரிகளுக்கும் தன்னால் முடிந்தளவு தொகை காசு கொடுத்துவிட்டு வருவான். ஒரு சகோதரனாக அனைத்தையும் தானே செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டவன் நளீம் என்பது அவர்களுக்கும் தெரியும். வஞ்சகமில்லாத அவனை நினைத்து அவனின் சுகவாழ்வுக்காய் சதாவும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்.

ஆனால் அவர்களை அடிக்கடி போய் பார்த்துக்கொள்ள முடியாமல் இருந்தான் நளீம். ஏனெனில் தான் அங்கு போவது தன் சகோதரிகள் அறிந்து விட்டால் வாப்பாவிடம் கூறி விடுவார்கள். இனி அந்த நாள் முழுவதும் வாப்பாவின் ஷபோதனை| தொடர்ந்த வண்ணமிருக்கும். நல்லெண்ணம் கொள்ளும்போது என் வாப்பா ஏன் இப்படி முட்டுக் கட்டையாக இருக்கிறார் என்று கவலை வரும். அதை விட தன்னைப் புரிந்து கொள்ளாமல் நடக்கும் தன் சகோதரிகள் மீதும் கவலையாக இருக்கும். எனினும் தன் சகோதரிகளுக்கும் வாப்பாவுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும் என்று ஐவேளையும் தொழும்போது பிரார்த்தித்துக் கொள்வான் நளீம்.

***************

இன்று ஒரு விடயமாக வங்கிக்கு சென்றிருந்தான் நளீம். அவன் வந்ததை அறியாத அக்பர் சாச்சா வங்கி முகாமையாளரிடம் பேசுவது இவனுக்கு தெளிவாக விளங்கியது.

‘சேர். நாங்கள் இப்போது இருக்கும் வீட்டை வித்திட்டு வேறு ஊரு பக்கமா போக முடிவெடுத்தீக்கிறோம். அதோடு கூட்டாளியின் மகனொருவன் மூத்த மகள நிக்காஹ் செய்ய விரும்பியிருக்கிறான். சீதனம் அது இது என்று ஒன்றும் கேக்கல்ல. என்ட கொமரு புள்ளயளோடு இதுக்குள்ள இருந்துக்கிட்டு நானாவோட வாக்குவாதப்படுறதும் சரில்ல தானே? அதுகளுக்கும் ஒரு வாழ்க்கைய அமைச்சிக் கொடுத்தமென்டா அதுக்குப் பொறவு அல்லாஹ்ட காவலா நாம இருந்திடுவோம் தொரே’
‘ஓகே. மிஸ்டர் அக்பர். நான் உங்களுக்கு என்ன செய்யணும்?’

‘சேர் எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் கடனாக வேணும். எப்படியாவது நான் அதை சம்பாரித்து தந்திடுவேன். தயவு பண்ணுங்க சேர்!’

‘ஓம் மிஸ்டர் அக்பர். அதற்கான வசதியை செய்திடலாம். ஆனால் வங்கிக்கென்று சில சட்டதிட்டங்கள் இருக்கு. ஆகக்குறைந்தது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆதனமொன்றின் உறுதிப் பத்திரத்தை நீங்க வங்கிக்கு சமர்ப்பிக்கணும். அப்படி செஞ்சிட்டீங்க என்டால் அந்த டொக்கியூமன்ட பார்த்திட்டு கடன் வசதிய செஞ்சி தரலாம்’

‘என்னா சேர்! அந்தளவு சல்லி ஈக்கியதென்டால் நான் எதுக்கு இங்க வருவன்? முடிஞ்ச வரைக்கும் பாருங்க. ப்ளீஸ்’

‘இதோ பாருங்க. வங்கி என்பது தனிநபரோட விருப்பத்துக்கு செயல்படுற நிறுவனமில்ல. முடிஞ்சா சொன்னத செய்ங்க. இல்லன்னா ஐ அம் வெரி ஸொரி’

‘சேர் ப்ளீஸ்...’

‘நோ நோ. யூ கென் கோ’

***************

இந்த சம்பவம்தான் நெருஞ்சி முள்ளாய் நளீமின் மனதை குடைந்து கொண்டிருந்தது. ச்சீ! நம்மிடம் இவ்வளவு வசதியிருந்தும் குறிப்பிட்டதொரு தொகையை கொடுக்க முடியாமல் இருக்கே. ஷகரண்ட் எக்கவுண்ட்| இருப்பதால் காசு எடுப்பதற்காக காசோலையில் வாப்பாவும் ஒப்பமிட வேண்டுமே. இது நடக்கிற காரியமா? நான் மட்டும் தான் காசோலையில் ஒப்பமிட வேண்டும் என்றால் ஒரு பிரச்சனையுமில்லையே. எப்படி இதை சாத்தியப்படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தான்.

கொடுக்க வேண்டும் என்று உண்மையான மனசிருந்தும் நளீமுக்கு கொடுக்க முடியாத நிலை. எந்த கணக்கு வழக்கு என்றாலும் ஷகரண்ட் எக்கவுண்ட்| இருக்கும் காரணத்தினால் வாப்பாவுடன் கலந்தாலோசிக்காமல் அவனுக்கு முடிவெடுக்க முடியாது. அவன் தன் நண்பர்களிடமாவது கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது நளீமின்; கைத்தொலைபேசி அலறியது.
‘ஹலோ. சொல்லுங்க தாத்தா’

‘தம்பி எங்கயிருக்கீங்க? சீக்கிரம் வாங்க. ஹொஸ்பிட்டலால கோல் வந்திச்சி. வாப்பா எக்ஸிடன்ட்பட்டு இருக்காங்களாம்’

‘என்ன தாத்தா. என்ன சொல்றீங்க? இதோ வந்துடுறேன்’ என்றவனாக பதற்றத்துடன் பாதையில் வேகமாக நடந்து கொண்டிருந்த போது சாச்சா எதிரில் தலைப்பட்டார்.

‘என்ன ராஜா. முகமெல்லாம் ஒரு மாதிரி கிடக்கு. சாப்பிட்டீங்களா? என்ன மவன் கண் கலங்கியிருக்கு. வாப்பா ஏதாச்சும் ஏசிட்டாங்களா?’ என்று அன்பொழுக விசாரித்தார்.

‘இல்ல சாச்சா. வாப்பா எக்ஸிடன்ட் ஆகிட்டாராம். தாத்தா இப்போ தான் கோல் பண்ணினாங்க. சாச்சா எனக்கு பயமாயிருக்கு’

‘யோசிக்க வேணாம் அல்லாஹ் இருக்கான் மகன். வாங்க உடனே வீட்டுக்கு போவம்’

இருவரும் அவசர அவசரமாக நடந்து நளீமின் வீட்டை அடைந்தார்கள். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க சாச்சா தயங்கியபடி இருந்தார். அதையெல்லாம் கவனிக்க நளீமுக்கு நேரமிருக்கவில்லை. வீட்டார்கள் அனைவரும் ஹொஸ்பிட்டலுக்கு சென்றிருப்பதாக பக்கத்துவீட்டு ஆதம் காக்கா சொன்னார். உடனே இருவரும் ஹொஸ்பிட்டலுக்கு விரைந்தார்கள். நளீமின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை படிந்திருந்தது. அவனது உதடுகள் அல்லாஹ்விடம் எதையோ மன்றாடிக் கேட்டுக்கொண்டே இருந்தன.

அங்கு ஹொஸ்பிட்டலில் சேலை நுனியால் வாயை பொத்தியவாறு அழுது கொண்டிருந்தார் தாத்தா. மற்ற தாத்தா இருவரும் மச்சான்மாரும் உடனே அங்கு வந்திருந்தார்கள். அது நளீமுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. டாக்டரிடம் சென்று விசாரித்த போது வாப்பாவுக்கு நிறைய இரத்தம் வீணாகியிருப்பதால் இரண்டு பைந்து இரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொன்னார்.

மச்சான்மாரும் தமக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். நளீமுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் யோசித்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் ஒரு ஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த அக்பர் சாச்சா நளீமிடம்,

‘மவன். கொஞ்சம் வாங்களன். இதோ பாருங்க மவன். நான் அதிகம் படிச்சவனில்ல. ரத்தம் ஏத்தணும் என்டா ஏதோ ஏ குரூப், பீ குரூப் என்று இருக்காமே. எனக்கு அதெல்லாம் தெரியாது வாப்பா. என்ட ரத்தம் பொருந்துதா என்டு டொக்டர பாக்கச் சொல்லுங்க. சரி என்றால் ஒன்டுக்கும் யோசிக்க வேணாம் மவன்’

நளீமுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. புரிந்து கொள்ள அவகாசமுமில்லை. டாக்டரை அணுகி விசயத்தை சொன்னான். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு டாக்டர் நர்ஸ் இடம் ஏவினார். இரத்தம் பரிசோதிக்கப்பட்டது. டாக்டரின் முகத்தில் சந்தோஷத்தின் சாயல்கள்.

‘மிஸ்டர் நளீம். யு ஆர் லக்கி. இரத்தம் பொருந்திடுச்சி. மிஸ்டர் அக்பரை அழைத்து வாங்க’

அனைவருக்கும் ஆச்சரியமும் சந்தோசமுமாக இருந்தது. இரத்தம் ஏற்றி சுமார் நான்கு மணிநேரத்தில் உஸ்மான் ஹாஜியார் கண் விழித்தார். அவர் நா தழுதழுக்க டாக்டரை நோக்கி நன்றி சொல்ல முனைந்தார்

‘இல்ல ஹாஜியார். அல்லாஹ்ட காவலா நீங்க இப்போ இப்படியிருக்கக் காரணம் ஒரு ஏழை மனிதர் தான். உங்கள் மகன் இவரை அழைத்து வராவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவே கஷ்டமா இருக்கு. இறைவனின் நாட்டத்தால் அவரின் இரத்தம் உங்களுக்கு பொருந்திருச்சி’ என்று அக்பரை காட்டினார் டாக்டர். கண்ணீர் ததும்பிய கண்களினூடே தன் தம்பி அக்பர் தயங்கியவராக அங்கிருப்பதை கண்டதும் ஹாஜியாருக்கு நெஞ்சு வெடித்து விடும்போல இருந்தது.

தான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். இந்த ஏழை மனிதர் ‘எங்கள் அக்பர் சாச்சா’ என்று பிள்ளைகள் டாக்டரிடம் சொல்லாத அளவுக்கு நான் அக்பரை எவ்வளவு தூரம் ஒதுக்கி வைத்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ்! அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக! என்று எண்ணியவாறு தன் சகோதரனை அழைத்தார். அக்பர் உஸ்மான் ஹாஜியாரின் அருகில் வந்து தலைகுனிந்து நின்றபோது உஸ்மான் ஹாஜி அவரை அழைத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

அந்த அணைப்பில் அவர் ஆயிரம் சந்தோசம் கண்டார். இருவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். தம்பி.. தம்பி என்று உஸ்மான் ஹாஜி; அழுகையூடே உச்சரித்தார். அதைக்கேட்ட டாக்டரும் முதலில் அதிசயித்து, பின் விடயத்தை நிதானித்தவராக அறையை விட்டு மகிழ்வுடன் வெளியேறினார்.

விடயம் கேள்விப்பட்டு அக்பர் சாச்சாவின் மனைவி பிள்ளைகளும் அங்கு வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் சகோதரர்கள் இருவரும் இப்படி அன்பாயிருப்பது கண்டு மிகவும் சந்தோஷப்பட்டனர்.

நளீமின் சகோதரிகளும் சாச்சாவின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுடன் ஒன்றித்தார்கள். தங்கள் குடும்பம் ஒன்று சேர்வதற்காய் தூய மனம் கொண்டு நளீம் செய்த பிரார்த்தனைகளை அந்த வல்ல அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான்!!!

வரம் !


வரம்



கால்களை நீட்டி சோபாவில் சாய்ந்திருந்தார் சுபா டீச்சர். அவரது சிந்தனைகள் யாவும் பத்து வருஷம் பின்னோக்கியதாய் இருந்தது. அவர் ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றும் பத்து வருஷங்களாகின்றன. தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தார். இந்த தவிப்பிற்குக் காரணம் வைஷ்னவி. அவள் படிப்பில் கெட்டிக்காரி. அவளது பரீட்சைப் புள்ளிகள் பல தடவை சுபாவை குளிர்வித்திருக்கின்றன. வைஷியை உதாரணம் காட்டி எத்தனை பிள்ளைகளை ஊக்குவித்திருப்பார் சுபா டீச்சர்?

சுபா டீச்சர் வங்கிக்குச் சென்றிருந்தார். கியூவில் வருமாறு இருந்த அறிவித்தல் எரிச்சலைத் தந்தது. அதன் பிரதிபலிப்பாக அங்குமிங்கும் பார்த்தவருக்கு அந்த ஜன்னலினூடாக அங்கிருந்த வைஷி தென்பட்டாள். முதலில் யாரென்று அனுமானிக்க முடியாமல் குழம்பினாலும் தீவிரமாக யோசித்ததில் ஆசிரிய மூளை சட்டென்று இனம் கண்டு கொண்டது. சந்தோஷப்பட முடியவில்லை. ஏனெனில் பாடசாலைப் பருவத்தில் துருதுரு என்று இருந்த வைஷி தற்போது களையே இல்லாமல் கறுத்து சிறுத்து இருந்தாள். அதையும் விட பல்கலைக்கழகம் போக வேண்டும் என்ற அவளது சதா பிரார்த்திப்பு?

‘என்ன டீச்சர். பெல் அடிச்சி பத்து நிமிஷம் ஆயிட்டுது’ - வகுப்புத் தலைவியாயில்லாத போதும் வைஷி வந்து கூப்பிட்டாள். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராயிருந்த சுபா டீச்சருக்கு அளவில்லா ஆனந்தம்.

‘படிப்பில் எத்தனை ஆர்வம் இந்தப் பிள்ளைக்கு? கட்டாயம் நல்ல நிலைக்கு வருவா’

மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார் டீச்சர். ஆசிரியர்களின் பிரார்த்தனை தட்டுப்படுவதில்லையே? இப்போதும் கூட நல்ல ஸ்தானத்திலிருந்து கடமை புரிகிறாள். எனினும் சுபா டீச்சருக்குத்தான் திருப்திப்பட்டுக் கொள்ள முடியவில்லை.

அவர் அப்படி கியூவில் நின்ற போது வைஷியும் அவரைக் கண்டிருக்க வேண்டும். பியூன் வந்து உள்ளே வருமாறு கூற சுபா ஆச்சரியமடைந்து பின் நிதானித்து உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் வைஷி எழுந்து நிற்க
‘பண்பாடு மாறாத பிள்ளை. இப்போதும் என்ன கண்டு எழுந்து நிண்டிட்டுது’ - வாழ்த்தினார் டீச்சர்.

அவர் வந்த காரணத்தைக் கேட்டு உடனே செய்து கொடுத்ததுடன் அவரது முகவரியையும் வாங்கி தனக்கு லீவு கிடைக்கும் போது வந்து போவதாகவும் கூறினாள். நன்றியுடன் விடைபெற்று வந்த டீச்சரை குறை கூறியவர்களாக கியூவில் இருந்தவர்கள் முணுமுணுத்தார்கள்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைஷி, சுபா வீட்டுக்கு வந்தாள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சுபாவின் வாழ்க்கை, கணவன், பிள்ளைகள் பற்றி வினவினாள். எதிர்பாராத இக்கேள்வியினால் திக்குமுக்காடிப் போனார் சுபா டீச்சர். அவரது முகமாற்றம் வைஷியின் மனதை என்னவோ செய்தது. செய்யக்கூடாத பெரிய தப்பை செய்து விட்டதாக கருதி தடுமாறினாள். அதை உணர்ந்த சுபா

‘அவர்கள் யாரும் எனக்கில்லைம்மா’ என்றார்.

இந்த ஒற்றை பதிலில் அதிர்ந்த வைஷி

‘ஏன் எல்லோரும் எங்கே? வெளியூரிலா அல்லது நாடிருந்த நிலையில் யுத்தத்துக்கு இரையாகி...’

இதைக் கேட்க நினைத்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். சற்று நேரத்தின் பின் வைஷி பற்றி ஆராய்ந்த போது அவள் பாதாளம் நோக்கிப் போவதை உணர்ந்து கொண்டார் டீச்சர். அது பாதாளமா? பூபாளமா? யாருக்குத் தெரியும்?

‘நீ இன்னமும் அவனைக் காதலிக்கிறியா?’

‘இ.. இல்லை டீச்சர்’ - உண்மையாகவே பொய்யைச் சொன்னாள் வைஷி.

ராகுலின் அப்பா வைஷியின் ஏழ்மை காரணமாகவே அவளை எதிர்ப்பதாக அறிந்த போது கோபம் தலை உச்சியில் ஏறியது சுபா டீச்சருக்கு. ராகுலின் அப்பாவுடன் தான் பேசுவதாக வைஷியை தைரியப்படுத்தினார்.

வைஷியின் காதலாவது வாழட்டுமே?
சுபாவின் காதல்தான் பட்டமரமாய் போயிற்று. அதை வைஷியிடம் வெளிப்படையாக கூற முடியுமா? குரு சிஷ்ய உறவுக்கு பாதிப்பு என்பதை விட சுபாவுக்கு ஒரு மகளிருந்தால் ஏறக்குறைய வைஷியின் வயது இருந்திருக்கும். அப்படியென்றால் மகளிடமே தன் காதல் தோல்வியை கூறுவது போல் ஆகிவிடாதா? அது அநாகரிகம் அல்லவா? வைஷி நாவலொன்றை பார்த்திருக்க, சுபா டீச்சர் இளமைக்கால நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தார்.

***************

‘சுபா என்னைப் பாரேன் ப்ளீஸ்’

‘......................’

‘சொல்றத புரிஞ்சிக்க. உன்ன கலியாணம் செஞ்சா சீதனம் தர மாட்டியள் என்டு அப்பா சொல்றவர். மலேசியாவில் இருக்கும் அப்பாவின் நண்பரின் மகளை யோசிக்கினம். அதனால..’

‘அதனால...’

அவர் குனிந்த தலை நிமிரவில்லை. அவரைப் பிடித்து உலுக்கிக் கேட்டதில் இனி அவர் தனக்கு சொந்தமில்லை என்பதை சுபா புரிந்து கொண்டாள். இறைவா! கனவில் அவருடன் வாழ்ந்து, பிள்ளைக் குட்டிகள் பெற்று.. ஒரே வார்த்தையில் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டாரே? காதலிக்கும் போது பெற்றோரைக் கேட்கிறார்களா? குதிரைக்கு பசித்தால் வைக்கோலையும் திண்ணும் என்பது எவ்வளவு நிதர்சனம். எந்த கஷ்ட நஷ்டம் வந்தாலும் பசித்தாலும் புல் திண்ணாத புலி போல் மனம் மாறமாட்டார் என்றல்லவா சுபா ஆழமாக நம்பியிருந்தாள்? அதே நிலைதானா வைஷ்ணவிக்கும்?

***************

சத்தியமாக வைஷி நாவலை படித்துக் கொண்டிருக்கவில்லை. அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. பாவம் அவளின் ஏழை பெற்றோர். வறுமை காரணமாக ராகுலின் அப்பாவிடம் பேசவே தயங்கினார்கள். டீச்சர் ராகுலின் வீட்டாரிடம் சென்று தனக்காக பரிந்து பேசுவதை வைஷி விரும்பவில்லை. அழகு, குணம், மார்க்கம் இருந்து என்ன பயன்? பணத்துக்கு முன் அவை எல்லாமே மண்டியிட்டு காணாமல் போகின்றனவே? அவற்றைக் கண்டு வைஷியினதோ, ராகுலினதோ காதல் நெஞ்சங்கள் மசியவில்லை. அவனும் தன் அப்பாவுடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டுதான் இருந்தான். அவர்கள் தம் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டார்களோ? அப்படியென்றால் இத்தனை வருடங்களாக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுவிட்டு ஓடுமளவுக்கு வலிமையைத் தந்தது எது? காதல் புனிதமானதா? தீய சக்தியா? உண்மையாக காதலிக்கும் அனைவரும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கு வைஷியும் முகம் கொடுத்திருந்தாள்.

***************

சுபா டீச்சர் கதவைத் தட்டினார். இருபததேழு வயது மதிக்கத்தக்க ஒரு அழகான வாலிபன் கதவைத் திறந்து பார்த்து புருவத்தை சுருக்கினான். அவனைப் பார்த்த டீச்சருக்கு முள்ளுக்குத்தியது போல் இருந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?

அப்போது ‘ராகுல் ஹூ இஸ் தெயார்?’ (ராகுல் யாரங்கே?) என்று கம்பீரமாக ஒலித்த குரல் டீச்சரை தடுமாறச் செய்தது. அந்த உருவம் அவர்களை நெருங்க நெருங்க டீச்சரின் மனமும் மூளையும் ஒருமித்தே விளித்துக்கொண்டன.

அடக்கடவுளே! பால் வாங்க பாம்பிடமா வந்திருக்கிறேன்? சுடர்விட்டு எரிந்த டீச்சரின் நம்பிக்கைத்தீ ராகுலின் தந்தையைப் பார்த்ததும் அணைந்தே போயிற்று. இருக்காதா பின்னே? அவன் அப்பன் ராகுலையும் மாற்றிவிட்டால்? இதோ இந்த ராகுலை எங்கும் பார்க்கவில்லை. இதோ இவரில்தான். மனசு ஓலமிட்டு அலறியது. அவரும் டீச்சரை அடையாளம் கண்டு கொள்ளாதிருப்பாரா? வந்த வேகம் குறைந்து பணிந்துபோய் இல்லையில்லை கூனிக்குறுகிப்போய் நின்றிருந்தார்.

ராகுலுக்கு சுபா டீச்சரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்

‘டாடி இவங்களைத் தெரியுமா’ என்றான்.

‘இல்.. ஓம்.. இல்லை..’ தடுமாறினார் ராகுலின் தந்தை.

‘தெரியாதுப்பா. ஆனா உன்னப்பத்தி பேசத்தான் வந்திருக்கேன்’ என்றார் ராகுலிடம் டீச்சர்.

நாக்கு மேலண்ணத்தில் ஒட்ட கதிரையில் சாய்ந்து மௌனம் காத்தார் ஐங்கரன்.

ஐங்கரன்! சுபாவின் காதலர், இன்னொரு முறையில் சொன்னால் இப்போது ராகுலின் அப்பா.

எதை எப்படி சொல்வது என தவித்து, பின் நிதானித்து வைஷியைப் பற்றி கூறி முடித்தபோது ராகுல் மொத்தமாய் உடைந்திருந்தான். சுபா தன் மகளுக்கு ராகுலைக் கேட்டு வந்திருக்கிறாளா என்று நினைத்தாரோ என்னவோ 'செய்திடலாம்' என்றார் ஐங்கரன்.

அப்பாடா. வந்த காரியம் இனிமையாக முடிந்ததே. கண்மூடி இறைவனுக்கு நன்றி கூறினார் டீச்சர்.

திருமணத்தன்று..

‘அம்மா! இவங்க தான் எங்கள் விஞ்ஞான பாட டீச்சர்’ என்று வைஷி தன் ஏழைத் தாயிடம் கூறிக் கொள்ள அவள் சுபா டீச்சரைப் பார்த்து கைகூப்பினாள். அவளது விழிகளில் எத்தனை நன்றிப் பெருக்கும், சந்தோஷமும்.

இக்காட்சியைக் கண்ட ஐங்கரனுக்கு கண்ணைக்கட்டி நடுக்காட்டில் விட்டது போல் இருந்தது.

‘இவள்.. இவள் சுபாவின் மகளில்லையா? ஐயோ வைஷி தன் மகள் என்று சுபா என்னிடம் கூறவில்லைதானே? நான் எப்படி கற்பனை பண்ணி... சுபாவைக் கண்டதும் ஏற்பட்ட தடுமாற்றத்தில் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டேனா?’ - தவித்த ஐங்கரன் சுபாவை அழைத்து விபரம் கேட்டார்.

‘உங்களைத் தவிர வேறொருத்தன என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியல்லீங்க. நான் இன்னமும் கல்யாணமே பண்ணிக்கல. வைஷி என் பொண்ணுன்னு உங்ககிட்ட சொன்னேனா? இல்லையே. நல்ல குணமான மருமகப் பொண்ணு கிடைச்சிருக்கா. பயம் வேணாம். ராகுலை சந்தோஷமா வச்சிக்குவா. ஐயோ கெட்டிமேளம் சொல்றாங்க. வாங்க போகலாம்’

சுபா நகர அப்படியே சுவரில் சாய்ந்துவிட்டார் ஐங்கரன்.

அங்கே வைஷியின் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான் ராகுல்!!!