Tuesday, June 29, 2010

பயணங்கள் !


ஸாதிக் ஹாஜியார் வழமைக்கு மாற்றமாக அதிக நேரம் பள்ளியில் கழித்தது பற்றி எல்லோருக்கும் ஆச்சரியம். தொழுது முடிய ஸலாம் கொடுத்தவுடன் எழுந்து கடைக்குப் போய்விடும் அவரை இப்படி பள்ளியில் பார்த்தால் ஆச்சரியம் இல்லாமல் இருக்குமா?

கொட்டிக்கிடக்கும் பணத்தில் ஒரு சின்ன பகுதியை வெறும் புகழுக்காக செலவழித்துவிட்டு, தான் ஹாஜியார் என்று முத்திரை குத்திக்கொள்ளாத குறையாக பெருமையாக பேசித் திரிபவர் அவர்.

இப்போது இந்த இரண்டு நாட்களாக அவரது நடவடிக்கையில் பெருத்த மாற்றம் இருந்தது. தான் அந்த ஏழைக் கன்னி பஸீனாவுக்கு செய்த அநியாயமே தற்போது தன் மகளுக்கு வந்து மு(வி)டிந்திருக்கிறது என்று எண்ணம் வரும் போதெல்லாம் வலது கையால் இடது நெஞ்சைத் தடவி சமாதானம் தேடிக்கொண்டிருந்தார்.

***************

உயர்தர வகுப்பு டியூஷனுக்கு போகும் போதெல்லாம் பஸீனாவின் சிறந்த குணத்தை அறிந்து அவளுடன் நெருங்கிப்பழக முயன்று கொண்டிருந்தான் சமீர். வீட்டுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கமாக வளர்ந்த பஸீனாவுக்கு சமீரின் நடவடிக்கைகள் எரிச்சலையூட்டின. அவனது போக்குக்கு அவள் அடிமையாகவில்லை.

ஏ.எல் முடித்து கௌரவமான தொழில் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே தற்போது அவளது தேவையாக இருந்தது. அதற்கு அப்பாற்பட்ட விடயங்களை அவள் நினைத்தும் பார்க்கவில்லை. உழைத்து ஓடாய் தேய்ந்து போன வாப்பா இனியும் உழைத்து தன்னையும் தனது தங்கையரையும் கரை சேர்ப்பது சாத்தியமில்லை என்பது அவளது அறிவுக்கு புலப்படாமல் இல்லை.

ஆகவே அவள் படித்து உழைத்துத்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவள் விரும்பியோ விரும்பாமலோ அவளுக்கு சுமத்தப்பட்டிருந்தது. ஆண் பிள்ளையை பெற்றுக்கொள்ளாமல் இருந்தது பற்றி அவளது பெற்றோர் நடு இரவொன்றில் அழுததை தலையணையில் முகம் புதைத்தவாறு கேட்டுக் கொண்டிருந்ததன் தாக்கமே அவள் சமீரை ஏறெடுத்தும் பார்க்காதது.

சமீரும் அவளை எல்லோரும் போல் பார்க்கவில்லை. அவன் உண்மையிலேயே அவளை நேசித்தான். அவளும் அவளையறியாமல் தன்னை நேசிப்பது சமீருக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் பள்ளி செல்லும் மாணவியிடம் திருமணம் பற்றி பேசுவது அழகல்ல என்பதால் இரண்டு வருடங்களை அவளுக்காகவே காத்திருப்பதாய் நினைத்து உழைக்கவென்று வெளிநாடு புறப்பட்டான்.

அவனது உண்மையான அன்பைப் புரிந்தாலும்கூட தற்போதைக்கு பஸீனாவால் எதுவும் சொல்ல முடியாது என்பதால் காலத்தை கடத்தி வந்தாள். சமீர் தன்னை விட்டு விட்டுப்போனதாகவே அவள் எண்ணினாள். ஆனால் துளியும் வருத்தப்படவில்லை. கழாகத்ர் (விதி) படியே எல்லாம் நடக்கும் என்று எண்ணி தன் வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டாள்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காதே. வருடங்கள் இரண்டு முடிய சமீர் ஊருக்கு வந்திருந்தான். அவன் சற்று கொழுத்து, மிகவும் அழகாய் இருப்பதாக கேள்விப்பட்ட போதும் அவனைப் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து துடிக்கவில்லை. அவளது ஆசைகள் சிறகடிக்கவில்லை. காரணம் பணக்கார வாலிபர்கள் அனைவரையும் அவள் ஒரே மாதிரி எடைபோட்டிருந்தமையே.

அவன் பஸீனாவைப்பற்றி அவளது தோழி சுலைஹாவிடம் விசாரித்த போது பஸீனா ஆசிரியையாக தொழில் புரிவது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவளது இலட்சியங்களை அறிந்திருந்தவனுக்கு அவளது ஆசைப்படியே கௌரவமான தொழில் கிடைத்ததையிட்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினான்.

வெளிநாட்டிலிருந்தபோது ஒருநாள் ஸாதிக் ஹாஜியார் மகன் சமீருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது சமீரின் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அதனால் சமீரை திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும் படியும் கூறினார்.

‘தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் வாப்பா. என்னை எதுக்கு வற்புறுத்துறீங்க?’

‘அட நீ வேறப்பா. முதல்ல சிலோனுக்கு வா. அப்புறம் எல்லாத்தயும் வௌரமா சொல்றேன்’ என்றுவிட்டு போனை வைத்தார்.

இது நினைவு வர சமீர் ஒரு நாள் தன் வாப்பா ஸாதிக் ஹாஜியாரிடம் இது பற்றிக் கதைத்தான்.

மகனிடம் எப்படி தொடங்குவது என்றிருந்த ஸாதிக் ஹாஜியார் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

‘அதொன்டுமில்ல மகன். கண்டீல ஒரு பார்ட்டி. நல்ல சல்லிக்காரங்க. உன்ட தங்கச்சிய கெம்பஸில பாத்துட்டு அந்தப் பொடியன் விரும்பீட்டானாம். உன்ட தங்கச்சிக்கும் அவன் மேல ஆச இருப்பதாய் தெரியுது. அவன் நண்பன் மூலமா தன் வாப்பாட்ட செல்லீக்கியான். அவரு விசாரிச்சுப் பாத்ததில என்ட மகள்னு தெரிஞ்சீக்கி. கரீம் ஹாஜி என் நல்ல கூட்டாளி’

இதற்கும் நான் கல்யாணம் முடிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் என்று சமீர் நினைத்த போது அவரே பேச்சை மறுபடியும் தொடங்கினார்.

‘விசயம் என்னன்டா சமீரு.... அவன்ட தங்கச்சிய நீ முடிக்கோணும். அப்போ எல்லா சொத்தும் நமக்கு வந்த மாதிரித்தான். உங்களிருவரயும் நல்ல இடத்தில் கரசேத்த திருப்தியோட நானும் மௌத்தாகிடுவன். பொடியனுக்கு உன் தங்கச்சியும், அவன்ட தங்கச்சிக்கு உன்னையும் மாத்தி செய்றதா வாக்கு கொடுத்திட்டன்’

‘வாக்கு கொடுத்தீங்களா? என்னை ஒரு வார்த்தை கேட்காமல் என் வாழ்க்கையை தீர்மானிக்கிறீங்களே வாப்பா? என் மனசில் இருக்கும் ஆசை தெரியுமா? நான் விரும்பும் என் தேவதை யார் என்று தெரியுமா? உங்களிடம் இவ்வளவு பணமிருந்தும் நான் ஏன் வெளிநாடு போய் உழைத்து வந்தேன் தெரியுமா? எல்லாம் பணத்துக்காக வாப்பா. பஸீனா ஏழைனு தெரிஞ்சா நீங்க கட்டாயமா ஒத்துக்க மாட்டீங்க. அதனாலதான் நானே ஒழச்சி அந்தப் பணத்தையெல்லாம் அவ மூலமா ஒங்களுக்கு தர வச்சிருந்தன்’

உடைந்து சிதறிய வார்த்தைகளை கஷ்டப்பட்டு கோர்த்து அவன் அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தான். சொல்லி முடியுமுன்பே அவனுக்கு தலைசுற்றுவது போலிருந்தது. அதிர்ச்சி நீங்கி நிதானித்து பார்த்தபோது அவனது சிவந்த கன்னத்தில் ஹாஜியாரின் கை அச்சு உக்கிரமாய் பதிந்திருந்தது. அதற்குப்பிறகு இது பற்றி அவனும் பேசவில்லை. அவரும் பேசவில்லை. அவன் மிகவும் நொந்து போயிருந்தான். பெண்களுக்கு மட்டும்தான் மனசிருக்கிறதா? அப்படியில்லையே. இதோ இன்று பஸீனாவை எண்ணி என் மனம் படுகிற வேதனையை அறிந்த நாயனே எனக்கு நல்ல வழியொன்றை காட்டித்தா என்று சமீர் புலம்பிக்கொண்டிருந்தான்.

அவனது பிரச்சனைகளை தன் தாயிடமும் சொல்லியழ முடியாத சோகம் அவனுக்கு. வாப்பாவின் கத்தலுக்கே சுவரோடு ஒடுங்கிப்போகும் ரகம்; அவனது உம்மா. வாப்பாவை எதிர்த்து பேசும்படி உம்மாவை தூண்டிவிட்டு அதன் பிறகு தன் உம்மா கண்கலங்குவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது.

அது தவிர, தன் தங்கையின் நிலைமையையும் நினைத்து உருகினான் சமீர். தான் அந்த கண்டி ஹாஜியாரின் மகளை மணமுடிக்க ஒத்துக்கொள்ளாவிட்டால் தன் தங்கையின் ஆசைகள், கனவுகள் என்னாவது? அவனுக்குள் பெரும் போராட்டமாய் இருந்தது. மகனது நடிவடிக்கைகளில் எவ்வித மாற்றத்தையும் அறியாத ஹாஜியார் அடுத்தகட்ட காரியமாக பஸீனாவின் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

ஒரு நாளும் இல்லாமல் முக்கிய விடயமொன்றைக்கூற வந்திருந்த தோழி சுலைஹாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் பஸீனா. எதிரே முற்றத்தில் திடீரென வந்து நின்ற காரிலிருந்து இறங்கி வேகமாய் வந்து கொண்டிருந்த ஸாதிக் ஹாஜியாரைப் பார்க்க இருவருக்கும் பயமெடுத்தது. சுலைஹா விடயத்தை ஓரளவு உணர்ந்து கொண்டாள்.

‘ஏய் தாவூத் வெளில வா. மாசச் சம்பளத்த வாங்குறத்துக்கு முதலாளிக்கிட்ட கையேந்தி நிக்கிற கூட்டத்தைச் சேர்ந்தவன் நீ. உன் புள்ளக்கி என்ட மகன் கேக்குதாமா? வசதியான பையன வளைச்சு போட சொல்லிக்கொடுத்தியா? எல்லா வினையும் இதோ.. உன் மகளால தான். இன்று அவன் என் பேச்சை கேட்காமல் இவள் வேணும்னுகிட்டு இருக்கான். எல்லாத்தயும் மரியாதயா விட்டிரச் சொல்லு. அப்புறம் போலீசுல நாய் படாத பாடு படுவே’

நரம்பில்லாத நாக்கால் குத்தலாய் பேசி அடிக்கடி பஸீனாவை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தார் ஹாஜியார். அவரது கதைகளைக்கேட்டு காதை பொத்தியவாறு அழுது கொண்டிருந்தாள் பஸீனா.

நான் சமீரை விரும்புறேனாமா? வாப்பாவை எப்படி கீழ்த்தரமாய் பேசிவிட்டார் இந்தப் பெரிய மனுசன்? இவரெல்லாம் அஞ்சு நேரம் அல்லாவ தொழுறவங்க தானா? இன்னும் என்னென்னமோ ஹாஜியார் சொல்லிக்கொண்டிருக்க, சுவரில் அடித்த ஆணியாய் பஸீனாவின் உம்மாவும் வாப்பாவும் பேச திராணியற்று மௌனமாக இருந்தார்கள்.

ஹாஜியார் தன் கொடூர பேச்சை முடித்துவிட்டு செல்ல, தன் மீது படியும் பெற்றோரின் பார்வையை ஒருமாதிரியாக உணர்ந்தாள் பஸீனா. ஆனால் அந்தப் பெற்றோருக்கு தம் வளர்ப்பின் மீது நம்பிக்கையிருந்தது. அதை விட பஸீனா மேல் அதிகம் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் பஸீனாவை சமாதானப்படுத்த, அவள் நெஞ்சுருகி தன் தாயின் தோளில் சாய்ந்து அழுதாள்.

சுலைஹாவின் முன் இப்படி அவமானப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த போது, சமீர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பின் ஒருநாள் தன்னிடம் பஸீனா பற்றி விசாரித்ததாகவும், அதை சொல்லவே இன்று வந்ததாகவும் கூறிச் சென்றாள் சுலைஹா.

பஸீனாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. சமீர் இன்னமும் என்னை நெனச்சிக்கிட்டு இருக்காரா? ஆனால் அவருக்கு மனைவியாக வாழுற பாக்கியம் எனக்கில்லையே. ஸாதிக் ஹாஜியார் வந்து பேசிவிட்டுப் போன பேச்சுக்கள் கொஞ்சநஞ்சமா? உண்மையில் நேசித்திருந்தாலும் விட்டுவிட வேண்டிய நிலைமையல்லவா இது?
பெற்றோரிடமிருந்து பிள்ளையை பிரிக்கும் கல்நெஞ்சம் கொண்டவள் அல்லவே பஸீனா. எல்லாம் அல்லாஹ் விட்ட வழி என்று தன் மனசை திசை திருப்பினாள். ஆறேழு மாதங்கள் கடந்த நிலையில் பஸீனா வேறொருவரை மணமுடித்து சந்தோஷமாய் சென்றாள். அவளது வாழ்க்கை மிகச்சிறப்பாய் இருந்தது. அவளை கரம்பற்றியவரும் அதிர்ஷ்டசாலி.

ஆனால் சமீர் இன்று உருக்குலைந்து, தானும் வேலையும் என்று காலம் கடத்துகிறான்.

ஹாஜியாருடன் மொத்தமாக அவன் பேசவில்லை. இதெல்லாம் ஹாஜியாருக்கு மன வருத்தத்தைக் கொடுக்கவில்லை. பஸீனா என்ற தொல்லை கழிந்தது. இனி சமீரை சம்மதிக்க வைத்து விடலாம் என்று எண்ணியிருந்த போதே அவரது தலையில் இடி விழுந்தது.

அதாவது கண்டியிலுள்ள கரீம் ஹாஜியார், ஸாதிக் ஹாஜிக்கு ஒரு மடல் அனுப்பியிருந்தார்.

அன்பின் நண்பருக்கு,

அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும். உங்கள் பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்ற ஆசையில் பெரும் பணக்காரர்களான மணமக்களையே எதிர்பார்த்தீர்கள். என் மகனும் உங்கள் மகளைத்தான் இன்னமும் விரும்பிக்கொண்டிருக்கிறான். அதற்கு என்ன செய்ய? நானும் உங்களைப்போல ஒரு தகப்பன்தானே? என் பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்றுதானே நினைப்பேன். ஆதலால் உங்களை விட மிகவும் வசதியான ஒருவரின் மகளுக்கு என் மகனை மணமுடித்து வைக்க ஏற்பாடு நடந்துவிட்டது. வஸ்ஸலாம்.

இப்படிக்கு
கரீம் ஹாஜியார்.

தனது பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்ற பெயரில், தான் பேராசைப்பட்டதை எண்ணி மனசு வெடித்தார் ஸாதிக் ஹாஜி. தன் மகளின் கனவுகள், தன் மகனின் ஆசைகள் எல்லாம் தன்னால் எரிக்கப்பட்டு விட்டதாய் உணர்ந்தார். அன்று அவர் பஸீனாவுக்கு செய்த அநியாயத்தால் வந்த பாவத்தைக் கழிக்கவே இப்போதெல்லாம் அதிக நேரத்தை பள்ளிவாசலில் கழிக்கிறாரோ என்னவோ!!!

Thursday, June 24, 2010

சிட்டுக்குருவி !



ரவீனா உயர்தரத்துக்கு தெரிவாகியிருந்த போது அதே வகுப்பில் படிப்பதற்காக தூர கிராமத்துலிருந்து வந்திருந்தாள் ஷியாமளா. வந்த புதிதில் யாருடனும் பெரிதாக ஒட்டிக் கொள்வதில்லை. தானும் தன் படிப்பும் என்றிருப்பாள். பாடசாலை இடைவேளை நேரத்தில்கூட யாருடனும் கலந்து கொள்வதில்லை. இவளுடைய இந்தப் போக்கு ரவீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. எனவே அவளே வலிய சென்று ஷியாமளாவுடன் பேச்சுக்கொடுத்தாள்.

ஷியாமளாவுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. புதிய பாடசாலைக்குப் போனால் அங்குள்ளவர்கள் முதலில் கதைத்தால் தானே சந்தோஷமாக இருக்கும். அந்த சந்தோஷத்தை ரவீனாவின் நட்பில் உணர்ந்தாள் ஷியாமளா. ஒவ்வொரு நாளும் சோகத்துடனேயே பாடசாலைக்கு வருவதில் உள்ள கஷ்டத்தை ஷியாமளா சொல்லாமலேயே ரவீனா புரிந்து கொண்டாள். ஷியா பிரிதொரு விடுதியிலிருந்தே பாடசாலைக்கு வருவதாய் ரவீனா எண்ணியிருந்தாள்.

‘ஏன் ஷியா இங்க உங்கட சொந்தக்காரங்க யாரும் இல்லயா?’

ரவீனாவின் இந்தக் கேள்வி ஷியாவுக்கு உள்ளூர வருத்தத்தை ஏற்படுத்தியது. ஷியாமளா விழித்தாள். விடை சொல்ல முடியாமல் தவித்தாள். ஷியாவின் மௌனம் யாரும் இல்லை என்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். அல்லது இருப்பவர்கள் பெரிய வசதிக்காரராய் இருந்து அவள் அங்கே தங்குவது பிடிக்காதவர்களாயிருக்கலாம். அதை ரவீனா ஊகித்துக்கொண்டாள்.

***************

ஷியாவுடைய பெரியம்மாவின் மகளான அபி டீச்சர் இந்தப் பிரபலமான பாடசாலையில்தான்; தமிழ் மொழி விசேட ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். பாடசாலையில் அவருக்கு செல்வாக்கு அதிகம் என்று அவரே சொல்லித்தான் தெரியும். ஷியாவை எப்படியாவது அந்த பாடசாலையில் சேர்த்து படிக்க வைக்க பேரவா கொண்டார்கள் ஷியாவின்; பெற்றோர். தனது சகோதரியின் மகள் தனது மகளுக்கு உதவுவாள் என்ற நம்பிக்கை ஷியாவின் தாயாருக்கு இருந்தது.

அதே போல் தங்கள் வீட்டில் வந்து ஷியாவை தங்கியிருக்குமாறும் டியூஷன் வகுப்பு தேடித்தருவதாயும் அபி டீச்சர் சொன்னதால் அவர் தனக்கு பக்கபலமாக நின்று உதவுவாள் என்று ஷியாவும் எண்ணினாள். ஆனால் அவையெல்லாம் வெறும் பித்தலாட்டங்கள் என்று பிறகே தெரிந்தது.

அம்மா அப்பாவின் ஆசைப்படி நன்றாக படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் மட்டுமே ஷியாவின் மனதில் படிந்திருந்தது. கிராமத்து பாடசாலையில் இருந்த உயிர்த்தோழிகளை மறந்தது, பசி தாகம் பாராமல் பொறுமையாக இருந்தது எல்லாம் லட்சியங்களை நனவாக்கிக் கொள்ளத்தானே.

ஆனால் அந்த அபி டீச்சருக்கு பாடசாலையில்; செல்வாக்கு இருந்ததே ஒழிய அவர் சொல்வாக்கில் தவறியவராகவே இருந்தார். தெரியாத இடத்தில் விடுதி தேடிப்போகுமாறு அடிக்கடி ஷியாவுக்கு கட்டளையிட்டார். தன் பிள்ளைக்கு சுகமில்லை என்றால்; ஷியா மேல் எரிந்து விழுந்தார். ஆயிரம் கனவுகளை சுமந்து பறந்து வந்த ஷியா எனும் சின்னச் சிட்டின் சிறகுகள் மாதம் ஒன்று செல்லும் முன்பே கத்தரிக்கப்பட்டன. படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக வாய் மூடி மௌனம் காத்தாள் ஷியா.

ஊரிலிருந்து அம்மா தொலைபேசியில் கதைக்கும் போதெல்லாம் தொண்டை அடைக்கும். அழுகை முட்டும். சிரிக்கவே தோன்றாது. அப்பா, தம்பியுடனும் கொஞ்சமாக பேசிவிட்டு வைத்துவிடுவாள். பிறகு தலையணை நனையும். தன் அக்காவுடன் மாத்திரம்; ஷியா கூடுதலாக ஒட்டுவதுண்டு. பாடசாலையில் உள்ள மாணவர்கள் ஷியாவுக்கு காதல் மனு போட்டதையெல்லாம் கூறுமளவுக்கு நெருக்கமாகப் பழகினார்கள் அவர்கள்.

ஆனால் இப்போது அருகில் அக்காவும் இருக்கவில்லை. ஓரிரு முறைதான் தொலைபேசியில் கதைத்தார். அப்போதும்கூட தன் பிரச்சனைகளை கூறவில்லை ஷியா. கூறவில்லை என்பதை விட கூறும் வாய்ப்பு இருக்கவில்லை. முதன்முதலாக தான் சந்தோஷமாக இருப்பதாயும் படிப்பதாயும் அக்காவிடம் பொய் சொன்னபோது உள்ளம் பற்றி எரிந்தது ஷியாவுக்கு.

இன்றைய காலத்தில் கல்விக்கு கொடுக்கப்படும் மதிப்பு மிகவும் உச்ச நிலையில் உள்ளது. வறுமைப்பட்டவர்களும் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். விருப்பம் மட்டும் இருந்;;தால் போதுமா? கல்வி மனதில் பதிவதற்கு என்றொரு சூழல் வேண்டுமே. அது கிடைக்காத போது படிபடி என்று சொல்லுவதில் அர்த்தமில்லை.

‘ஏய் என்ன யோசிக்கிற?’ அவளைப் பிடித்து உலுக்கிய போது சிந்தை கலைந்தாள் ஷியா.

‘எங்களுக்கு பெரிய வீடு இருக்கு. 3 பேர் இருக்கோம். அப்பா வியாபாரத்துக்காக வெளிநாட்டுக்குப் போனால் ஒரு மாசம் கழிச்சி வருவாரு. அம்மாகிட்ட சொல்லிட்டா நீயும் வந்து தங்கிக்கலாம். என்ன வர்ரியா?’

ஷியாவுக்கும் உண்மையில் வேறெங்காவது போனால் நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. உடனே தாயாருடன் தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னாள் ஷியா. தன் மகள் படிக்கிறாள் என்று எண்ணியிருந்த பெற்றோருக்கு இந்த செய்தி உண்மையை உணரச்செய்தது. அவள் அங்கே படிக்கவில்லை. துடித்துப் போயிருக்கிறாள் என்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இப்போது ஷியா தன் தோழி ரவீனாவுடன் மிகவும் சந்தோஷமாயிருக்கிறாள். இரத்த பந்தத்தை விட இந்த உறவுகள் வலிமை கூடியது.

சிறகொடிக்கப்பட்டிருந்த சிட்டுக்குருவி ஷியாவின் ஆசைகள் மீண்டும் சிறகடிக்கத் தொடங்கி விட்டன!!!

என்னை அறிந்த போது !



கவின் தேனீரை குடிப்பா!

தயாள் அண்ணா என்னை எழுப்பிய போது நான் திடுக்கிட்டு எழுந்தேன். மணி ஆறைத் தாண்டும் முன் என்னை எழுப்பினால் நேரத்துக்கு வேலைக்கு போகலாம் என்பது அவருக்குத்தெரியும். ஏனெனில் கொஞ்சம் சுணங்கினாலும் எங்கள் மேலதிகாரி வசிட்டராகி விடுவார். ஏதோ என்னுடைய செலவுகளை கொஞ்சமாவது சமாளித்துக் கொள்ளவும் ஆத்திர அவசரமென்றால் லீவு போட்டுவிட்டு போவதற்கும் சுதந்திரம் உண்டு. அதனால் வேறு வேலைகளுக்கு போக நினைத்தாலும் இவற்றை நினைத்து மௌனியாகி விடுவேன்.

தயாள் அண்ணா ஊற்றித் தந்த தேனீரை வைத்துக் கொண்டு மிக்ஷர், பிஸ்கட் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். முடிந்து போயிருந்தது. வீட்டில் அப்பா ஏதாவது வாங்கி வைத்திருப்பார். எனக்கு யோகட், ஆப்பிள் இப்படி ஏதாவது சாப்பிடுவது பிடிக்கும்.

என்றாலும் நான் வீண் செலவுகளை செய்வதில்லை என்றபடியால் எதைக் கேட்டாலும் வசதி இருந்தால் தயாள் அண்ணா வாங்கித் தராமல் இருக்கமாட்டார். இந்த இடத்தில் இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. அன்றும் ஒரு நாள் அப்படித்தான். நான் ஏ.எல் செய்து கொண்டிருந்த காலமது. அவசரத்தில் சீசன் டிக்கட்டை எடுக்காமல் போய்விட்டேன். எனவே மீண்டும் வீட்டுக்குப்போய் அப்பாவிடம் காசு இருபது ரூபாயும் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறு வந்து கொண்டிருந்தேன். வீட்டு வாசலை நெருங்கும் போது...

‘அண்ணனைப் பாரு எப்பவாச்சும் காசு கேட்கிறானா... நீயும் வந்து வாச்சிருக்கியே’ என்று தம்பிக்கு அப்பா அர்ச்சனை செய்துகொண்டிருந்தார். நான் வந்த சுவடு கூட தெரியாமல் நழுவிப் போய்விட்டேன்.

எனக்கொன்றும் பெரிய வயதில்லை.  தயாள் அண்ணா இருக்கும் தைரியத்தில்தான் அம்மா என்னை தலைநகருக்கு அனுப்பியுள்ளார். ஆம் தயாள் அண்ணா இப்போது என் இலக்கிய நண்பன் மட்டுமல்ல. அறை நண்பனும் கூட. அவர் தற்போது தனியார் கம்பனியொன்றில் கணக்காளராக பணிபுரிகிறார்.

கவின் என்ன எழுதுகிறாய்? என்று என் பாடசாலை நண்பனொருவன் கேட்ட போது நான் எழுதியிருந்ததை அவனிடம் கொடுத்தேன். அது பாடல் வரிகளையும் உள்ளடக்கிய எனது கற்பனை. அதற்கு சிறியதொரு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. மாறாக அவன் மற்றவர்களுக்கும் அதைக்காட்டி என்னை ஏளனம் செய்தான். (தற்போது என் கவிதைகளை பத்;திரிகைகளில் பார்ப்பதும் அவனுடைய நண்பர்களிடம் என்னுடைய நண்பனென தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும் வேறு கதை)

எனினும் நான் என் முயற்சிகளை நிறுத்தவில்லை. சில நாட்களில் என் வரிகளை பார்த்துவிட்டு பெரிய கவிஞர்களின் வரிகளை ‘காப்பி’ பண்ணியிருக்கிறான் என்பார்கள். அப்போதெல்லாம் ஆஹா அந்தளவிற்கு நன்றாகயிருக்கிறதா என்று மனசுக்குள் சிரித்துக் கொள்வேன்.

நான் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டவன் என்று அம்மாவும் கூறுவார். தரம் மூன்றிலிருந்த போதே என் பெற்றோர் பல கதைப் புத்தகங்களை வாங்கித் தந்திருக்கிறார்கள். தரம் ஆறு வரைக்கும் பல போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தேன். ஆனால் என்னை அடிக்கடி பாடசாலை மாற்றியதால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை என்னை வறுத்தெடுத்து செயலிழக்கச் செய்தது. இப்படி நாம் ஊர் விட்டு ஊர் செல்லக் காரணம் அம்மாவின் இடமாற்றம் என்பதை விட எங்கள் அப்பாவின் சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த வாக்குவாதம் என்று பின்னாட்களில் அறிந்தேன்.

என் சிறு பராயத்தில் எல்லாம் முதல் ஐந்து நிலைகளுக்குள் வந்த நான் மற்ற பாடசாலைகளில் ஒன்பதுக்கும் பிற்பட்ட ஸ்தானத்துக்கு வந்தபோது முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்து யாருக்கும் தெரியாமல் அழுதிருக்கிறேன்.

அம்மாவைத் தவிர அனைவரும் என்னை குறைத்து மதிப்பிடும் போதெல்லாம் எனக்கென்று அன்பு காட்ட யாராவது இருந்தால்... என்றெண்ணியெல்லாம் உள்ளுக்குள் மருகியிருக்கிறேன்.

ஏதோ வாழ்க்கையை கடந்து கொண்டிருந்த போது என் வகுப்பு நண்பர்களுக்கும் உயர் வகுப்பு அண்ணாமார்களுக்கும் இடையில் பாடசாலையில் சண்டை நடந்தது. ஆனாலும் அதில் கொஞ்சமும் சம்பந்தப்படாத நானும் அம்மாவின் முன்னாலேயே அதிபரால் தண்டிக்கப்பட்டபோது வாழ்க்கை மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போயிற்று. அம்மாவின் முகம் பார்க்க முடியாதளவுக்கு வேதனையாயிருந்தது. அதற்கான காரண கர்த்தாக்கள் சில ஆசிரியர்களே என்றபோது அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் எமது முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் என்றும் உதட்டில் தேனும் நெஞ்சில் விஷமுடனும் பேசுபவர்கள் என்று சொல்லி அம்மா என்னை தேற்றினார்.

எப்படியோ புதிய பாடசாலையில் இருந்த மூன்று வருடங்களும் படிக்க முடியாதவர்களுடனேயே நட்புகொள்ள முடிந்தது. கெட்டிக்காரப் பிள்ளைகள் ஒரு ஆசிரியையின் மகன் என்றுகூட எண்ணாமல் என்னை ஒதுக்கியது ரொம்பவும் வருத்தமாயிருந்தது. பிறகு நான் சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகியிருந்ததால் என் சுட்டித் தனங்கள் யாவும் தற்காலிகமாக விடை பெற்றோடின. பின்னே? என் குடும்பத்தார் யாவரும் படித்து பெரியவர்களாயிருக்கும் போது நான் மட்டும் இப்படியே இருப்பதா என்ற சவாலுடன் பரீட்சைக்கு என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். என் தாயும், தந்தையும், சகோதரர்களும் எனக்கு பேருதவியாய் இருந்தார்கள்.

இந்த நேரம் பார்த்துத்தான் அந்த சந்தோஷமானதும் சங்கடமானதுமான செய்தியை என் சின்னம்மா என்னிடம் கூறினார். என் தங்கை பருவமடைந்திருந்தாள். ஒருவாறு மற்ற அனைத்து அத்தை பெரியம்மாமாருக்கும் சாடைமாடையாக விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு வருமாறு கூறினேன்.

பின்பு நான் உயர்தரத்துக்கும் தெரிவாகியிருந்ததுடன் அறநெறி பாடசாலையில் ஆசிரியனாகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். இடைப்பட்ட இந்த காலத்திலேயே என் வாழ்வின் திருப்புமுனை ஏற்பட்டதென்று சொல்ல வேண்டும். மனதில் தோன்றிய அத்தனையையும் கவிதைகளாக மொழி பெயர்த்தேன். அவற்றை பத்திரிகைகளுக்கும் அனுப்புமாறு அம்மா சொன்னார். நன்றாய் இருந்திருக்க வேண்டும். மாதமொன்று செல்லு முன்பே பிரசுரமாகியிருந்தது.

எத்தனை மகிழ்ச்சி! எத்தனை கூச்சல்!! இதையெல்லாம் காட்டிய பின்பு ஷஇங்க பாருடா கழுதை கவிதை எழுதுது| என்று என்னை கேவலப்படுத்திய நண்பன், தன் காதலிக்கு கொடுப்பதற்காக என்னிடம் கவிதை எழுதி கேட்கத் தொடங்கினான். நான் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. அவன் அசடு வழிந்தான். எனினும் மென்மேலும் என் திறமையை வளர்க்கும் முயற்சிக்கு உத்தரவாதங்கள் இருக்கவில்லை. எப்படி எழுதுவது, எதில் எழுதுவது என்று தெரியாமல் அவஸ்தை பட்டிருக்கிறேன். அப்படியிருக்கையில் ‘கவின் உனக்கொரு கடிதம் வந்திருக்கு’ என்று அம்மா கூறினார்.

முக்கியமானதொரு விடயத்தைக் கூற மறந்துவிட்டேன். உயர்தர வகுப்பில் இருந்த காலத்தில் சின்னதாய் ஒரு காதல் அரும்பியது. ஆனால் அவளுக்கு அப்படியிருந்திருக்காது. என்னைப் பார்த்து ஒரு நாளாவது வெட்கப்பட்டதில்லை. நகம் கடித்ததில்லை. நிலத்தில் கால் விரலால் கோலம் போட்டதுமில்லை. எனவே நட்பு ரீதியாகவேனும் கடிதம் போடுவதென்றால் எனக்கு அவளைத்தவிர யாரும் இருக்கவில்லை. அவளே இல்லை என்று ஆன பிறகு இப்போது யாராக இருக்கும்? என்று கலவரமடைந்தேன். கடிதத்தை வாசிக்க வாசிக்க கலக்கமும் சந்தோஷமும் ஒன்றாக உற்பத்தியானது. சாராம்சம் இதுதான்.

நான் தயாள். எழுத்தாளன். 

உங்கள் கவிதைகளின் தரம்பற்றி என் நண்பன் கூற கேட்டேன். 
கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். தொடர்பு கொள்க.

- தயாள்.

ஓரிரு மாதங்களுக்குள் என் படைப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரமா? அல்லது வேறு யாருடைய கவிதை வரிகளாவது தெரியாமல் என் கவிதைகளில் உள்ளடக்கப்பட்டு விட்டதா என்ற பயம் என்னைத் தின்றது. தயங்கிய படியே கோல் பண்ணிய போது தயாள் அண்ணா மிக அன்புடன் கதைத்தார். என் கவிதைகள் பற்றி சிலாகித்து பேசினார். நன்றாக எழுதுவதாக சொன்னார். என் நண்பர்களுடன் அவரை ஒப்பிட்டு வியந்தேன்.

நாட்கள் செல்லச் செல்ல நானும் தயாள் அண்ணாவும் மரியாதை எனும் போர்வையிலிருந்து விலகி அன்பென்ற பந்தலுக்குள் இணைந்து கொண்டோம். நீண்ட ஒரு விடுமுறையின் போது தயாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தபோதே இலக்கியத்தின் சுவை உணர்ந்து அதையே மூச்சாக எண்ணி செயல்பட்டேன் நான். இதைப் பார்த்து இலக்கியம் சோறு போடுமா என்று என்னை பரிகசித்தவர்களும் இருக்கிறார்கள். எனினும் என் இலக்கிய வேட்கைக்கு நல்ல பதிலை தயாள் அண்ணா தந்துகொண்டிருந்தார். அவர் தலை நகரில் வீடெடுத்தவுடனேயே என்னையும் அழைத்துக்கொண்டார்.

இங்கு வந்த பிறகுதான் நான் புதிய உலகமொன்றை கண்டு கொண்டேன். இலக்கியத்தின் நுணுக்கங்களை கற்றுத்தந்தார். என் சிறுசிறு குறைகளை சீர்படுத்தினார். எதிர்மாறான எண்ணங்களிலும் பல சிக்கல்களிலும் துவண்டிருந்த என்னை உற்சாகப்படுத்தினார். ஷஎன் நண்பன் துணிச்சல்காரன்| என்று சொல்லி என்னைப் பாராட்டினார்.

தலை நகரில் நடக்கின்ற பல இலக்கிய விழாக்களையும் நான் தரிசிக்கக் காரணம் அவரே. பிரபலமான எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் என்னுடனும் பேசும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருந்தது தெரியுமா? என் குடும்பத்தார்கூட மிகவும் மகிழ்ச்சியடைந்தார்களே.

தற்போது நானும் ஒரு அறியப்பட்ட எழுத்தாளன். முழுக்காரணமும் என் தயாள் அண்ணாதான். அவருடைய மேலீடு இல்லாமல் என்னால் எதையும் சாதிக்க முடியாது. நான் அவரை மிக மதிக்கிறேன். நேசிக்கின்றேன்!!!

சிதைவு !


சாருமதி தலையில் அடித்து அழுது கொண்டாள். தன் வாழ்க்கை தன்னாலேயே இப்படி போகும் என்று அவள் நினைக்கவில்லை. உண்மையில் அவள் இப்படி அலறி அழுவதற்கான காரணம் தன் வாழ்க்கை தடம் மாறிப்போனதா? அல்லது அதோ அங்கே பைத்தியம் தெளிந்தும் தலைவிரி கோலமாய் நின்று தனக்குத்தானே ஏதோ சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறாளே தங்கை புவனா, அவளைப் பார்த்தா?

எப்படியோ தன் பிடிவாதத்தால தான் எல்லாமே நடந்தது என்று எண்ணம் வரும்போதெல்லாம் உடம்பெல்லாம் கொதிக்கும் எண்ணெய் கொட்டியது போல உணர்வாள்.

தாயிருந்தும் தனியாக வளர்ந்தவர்கள் தாம் இருவரும். தந்தையின் மறைவுக்குப் பின் சாரு தாயாயிருந்து தங்கையைப்; பார்த்தாள். அப்போது மிஞ்சிப் போனால் அவளுக்கு இருபத்;து மூன்று வயது கூட இருக்காது. படிப்பையும் வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்து ஒருவாறு சமாளித்து வந்தாள்.

அவளும் பெண் தானே? வாழ்க்கையைப்பற்றி அவளுக்கும் கனவுகள் இருக்கவே செய்தது. தனது தகுதிக்கேற்ற ஒருவன் கிடைக்கும் வரை காத்திருந்தாள். எல்லோரும் வீடு ரொக்கமாகப் பணம் கேட்டு பெண் பார்த்தார்களே தவிர அவளது உள்ளத்தை பார்க்க யாரும் இருக்கவில்லை.

ஆம்! வந்தான் நரேன். அவளது கனவு கற்பனை எல்லாவற்றிற்கும் உயிரூட்டுவது போலவே அவனிருந்தான். சாருவின் மனசை போட்டு பிழிந்து அவளது சந்தோஷங்களை உறிஞ்சிக் கொண்டிருந்தான். உறக்கம் வராத இரவுகளை புதிதாக தந்து கொண்டிருந்தான். ஆனால் தப்பியும் அவள் தன் உணர்வுகளை அவனுக்கு காட்டிக் கொள்ளவில்லை.

அவனுக்குள்ளும் ஷீலா என்றொருத்தி நான்கு வருடங்களாக வாழ்ந்துகொண்டிருந்தாள். அந்த ஷீலாவை அவனால் இன்னமும் மறக்க முடியவில்லை. அவனையே தன் மூச்சு என்றவள் அவன் வாசமே தன் வாழ்க்கை என்றவள் காலத்தின் கட்டாயங்களுக்கு கட்டுப்பட்டு இன்னொருவனை மணமுடித்துக்கொண்டு போனாள். சில ஆண்களைப் போல் அல்லாமல் அவளது வாழ்வு சிறப்பாய் அமைய இறைவனை வேண்டினான் அவன். மறக்க வேண்டும் என்று நினைத்தவைகள் யாவும் ஏனோ மீண்டும் மீண்டும் வந்து அவனை தொல்லைப்படுத்தின. அவற்றையெல்லாம் துரத்தியடிக்க முடியாமல் திணறிய அவன் குடி, சிகரட் போன்ற பழக்கங்கள் இல்லாததால் தன் மனசில் புயலடித்தவைகளுக்கு எழுத்துருவம் கொடுக்கத் தொடங்கினான். கவிதை எழுதத்தொடங்கினான்.

அந்த கவிதை சாருவையும் நரேனையும் நண்பர்களாக்கின. தன்னையும் மீறி, தன் கட்டுப்பாடு இழப்பதை அவளாலும் தடை செய்து கொள்ள முடியவில்லை. ஆகவே உள்ளுக்குள் வைத்திருந்த ஆசைகள் பார்வைகளாய் வெளிப்பட்டன. சூடு கண்ட ஆணல்லவா? புரிந்தாலும் அவன் சும்மாயிருந்தான்.

எத்தனை முறை அவன் விலகிப் போனாலும் சாருவின் மனது அவனையே விரும்பியது. எப்போதாவது அவனுடன் தொலைபேசியில் உரையாடியவளுக்கு எப்போதுமே அவனுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது. இறுதியில் காதல் தீ பற்றிக்கொண்டது.

‘நரேன் என்ன ஏமாத்திட மாட்டிங்களே?’

அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் அவள் மறக்காமல் கேட்கும் கேள்வி இது. ஏற்கனவே ஷீலாவின் மூலம் ஏமாற்றத்தின் வலி கண்டிருந்தவன் தன்னால் அந்த வலி யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தான். இப்படியிருக்க சாபம் போல வந்து வாய்த்தான் சாருமதியின் நண்பன் சுதன்.

சுதனின் சிரிப்புகளுக்கிடையே ஊர்ந்து திரியும் பொய்மையை சாரு விளங்காததுபற்றி நரேனுக்கு பெரும் ஆச்சரியம். அட்டைக்கு மெத்தை எப்போதுமே பிடிப்பதில்லையே? அப்படியிருக்க இப்படிப்பட்ட ஒருவன் சாருவின் பார்வைக்கு கூட தகுதியில்லாதபோது அவனை எப்படி இவளால் நண்பனாக ஏற்க முடியும் என எண்ணி குழம்பியிருக்கிறான்.

சுதனின் நடவடிக்கை பற்றி நரேன் கூறுகையில், தன் ஐந்து வருட நட்பு என்று கதையை ஓரங்கட்டி விடுவாள். மிஞ்சி ஏதாவது பேசினால் சுதனின் நட்புக்கு பிறகுதான் உன் காதல் என்பாள். அன்புக்கும் காதலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் புரியாதபடிக்கு நரேன் வேண்டப்படாதவன் ஆகிவிட்டான்.
‘நட்பு படலை வரைக்கும்’ என்ற முதுமொழி மாறி, வீடு வரைக்கும் சாரு சுதனை அனுமதித்திருந்தாள். நரேன் கூட இதுவரை அவள் வீட்டுக்குப் போனதில்லை. இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு ஒரு ஆண் செல்வது சமூகத்தில் தமக்கிருக்கும் மரியாதையை குறைக்கும் என்பது படிப்பறிவுள்ள அவனுக்கு விளங்கியது. சில இரவுகளில் கோல் பண்ணுகையில் சுதனும் இருப்பதாக சாரு கூறுவாள். இரவு பத்தரை மணி வரை சுதன் என்ன செய்கிறான் என்று நரேனால் கேட்க முடியவில்லை.

சந்தேகம் சந்தோஷத்தை தின்றுவிடும் என்பதால் சும்மாயிருந்தான். காலம் யாருக்காகவும் காத்திருக்காதே. காதலில் விழுந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் நரேனின் தொலைபேசிக்கு மிரட்டல் அழைப்புகள் வரத் தொடங்கிற்று. சாருவை விட்டு விலகும்படி அந்த மிரட்டல் அமைந்திருந்தது. தான் காதலிப்பவளைப் பற்றி ஒருவன் இப்படி கூறினால் எந்த ஆணுக்குத்தான் கோபம் வராது? என்றாலும் நரேன் பொறுத்தான். ஏனெனில் திக்கித்திணறி பேசும் இவன் சுதன் தான் என்பது புரிய நரேனுக்கு வெகுகாலம் செல்லவில்லை.

ஒரு நாள் அலுவலகம்விட்டு வந்து கொண்டிருந்த நரேன் அந்தக் காட்சியைக் கண்டு இரத்தம் உறைந்து போனான். சாருவின் தங்கை புவனா சுதனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக திரும்பியவர்கள் இவனைக் கண்டு திக்குமுக்காடிப் போனார்கள். சுதனின் இந்த நாடகம் சாருவுக்குத் தெரியவில்லை. அவளைப் பொறுத்தளவில் தங்கையும் நண்பனும் தங்கங்கள்.

நரேன் அப்போதைக்கு எதுவும் பேசாதது மாத்திரமன்றி இது பற்றி சாருவிடமும் சொல்லவில்லை. சாருவிடம் சொல்லாமல் விடுவதுதான் பிற்காலத்தில் தனக்கு எமனாய் அமையும் என்று எண்ணவில்லை. வாழ்க்கை துணைவனாக வரப் போகும் நரேனை விட வழித்துணையாய் வரும் சுதன் பெரிதாக தோன்றினானா சாருவுக்கு? நரேன் புவனா மேல் மையல் கொண்டவன் என்பது போல் மாயையை தோற்றுவித்தான் சுதன். எதுவுமே தெரியாமல் தன்னையே சுதனிடம் இழக்குமளவுக்கு புவனா சுதனை காதலித்துத் தீர்த்தாள்.

விதி விளையாடிற்று. ஒரு நாள் பாதையோரத்தில் நஞ்சருந்தி மயங்கி விழுந்து கிடந்த புவனாவை நரேன் தூக்கி வரவும், எதிர்பாரா விதமாக அவ்வழியால் சாரு வரவும் சரியாயிருந்தது. சாருவிடம் சுதன் கூறியிருந்த பொய் அக்கணத்தில் வேதவாக்காய் மாறியது. புவனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள். அவளது கர்ப்பத்துக்கு காரணம் நான்தான் என சாருவின் முன்னலேயே ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நரேன் இருந்தான். காதலில் விரிசல் விழ, நரேனும் சாருவும் சந்தோஷித்த காலம் எல்லாம் கண் முன்வந்து ஏளனமாய்; சிரித்தன.

மாதங்கள் இரண்டு கடந்த நிலையில் தங்கை குணமானாள். கண் விழித்தவுடனேயே நரேனைக் கேட்டாள். சாருவுக்கு கோபம் தலைக்கேற பச்சையாகவே திட்டினாள். நரேனை துரோகி என்றாள். நயவஞ்சகன் என்றாள். விஷயமறிந்து துடிதுடித்தாள் புவனா.

உண்மையில் தன் கர்ப்பத்துக்கு காரணம் நரேனல்ல. அந்த ராஸ்கல் சுதன் என்றும், எல்லாம் முடிந்த பின் தன்னிடமே சாருவை காதலிப்பதாய் கூறி அவன் தம்மை ஏமாற்றிவிட்டதையும் கூறினாள். புவனா மூலம் இவற்றைக் கேட்ட போது சாருவுக்கு உறைத்தது. ஒரு முறையேனும் சுதன் வைத்தியசாலை வந்து பார்க்காததும் ஞாபகம் வந்து தொலைத்தது.

எல்லாம் முடிந்து போயிற்று. கள்ளுக்கும் பாலுக்குமிடையே உள்ள வித்தியாசம் நன்றாகவே புரிந்தது சாருவுக்கு. இனி எத்தனைக்கும் நரேன் தனக்கில்லை என்று எண்ணியபோது நெஞ்சுக்குள் கடுமையாய் வலித்தது. சுவாசிக்க மறந்து தகிக்கும் அவளால் அப்போதைக்கு ஆழ்ந்த பெருமூச்சொன்றை மட்டுமே வெளியிட முடியுமாயிருந்தது!!!

ஓயாத நினைவலைகள் !



என் உள்ளம் உள்ளூர அழுது கொண்டது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு டீச்சரை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னேன். இன்று லீவு போடுமாறு கணவருக்கும் சொல்லிவிட்டு உம்மாவையும் அழைத்துக்கொண்டு டீச்சரைப் பார்க்க புறப்பட்டோம். ஆனால் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை எப்படியிருந்த டீச்சர்? இன்று இப்படி உருக்குலைந்து...

***************

நசீமா டீச்சர்!

பாடசாலை வாழ்க்கை பற்றிய எண்ணங்களின் போதெல்லாம் இந்த நசீமா டீச்சரின் ஞாபகம் வரத் தவறியதேயில்லை. அவர் மீது அளப்பரிய அன்பு எனக்கு. சின்ன வயதில் நான் படு சுட்டியாக இருந்தேன் என்று அடிக்கடி என் உம்மா கூறி சிரிப்பதுண்டு. டீச்சரும் என் குறும்புத் தனங்களை கூறி ‘இவள் ரொம்ப திறமைசாலியா வரணும்’ என்று துஆ கேட்டது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. உம்மாவின் உயிர்த் தோழியான ஆதிலா மாமியை விடவும் நசீமா டீச்சரை ரொம்பப் பிடிக்கும் எனக்கு.

நான் முதலாம் ஆண்டுக்கு செல்லும் போதே அவர் அங்கிருந்தார். எங்கள் ‘பெரிய சேரின்’ மனைவி தான் அவர். சேருக்கும் என் மீது பிரியம் அதிகம். மொண்டசூரி போகும் போதும் உம்மா அந்த பாடசாலைக்கு என்னை கூட்டிச் சென்றிருப்பதால் பெரிய சேரை நானும் அறிந்திருந்தேன். அவர் எனக்கு சொக்கலேட் தராத நாட்களில் அவருடன் பேசாமல் வந்ததை நினைத்தால் இப்போதும் எனக்கு சிரிப்பு வருகிறது. அன்றும் அப்படித்தான். சேருடன் கதைத்துக் கொண்டிருந்த போது டீச்சர் வந்தார்.

‘டீச்சர் கொஞ்சம் வெளியில போங்க சேருடன் தனியா பேசணும்’ என்றேன்.

கோபம் வந்திருக்காது தானே? சிரித்து விட்டு பேசாமல் பைலை பார்த்துக் கொண்டிருந்தார் டீச்சர். எனக்கோ கோபம் தலையுச்சிக்கு ஏறியது. மேசைக்கு முன்னால் சுவாரசியமாக என் கதைகளை கேட்டுக் கொண்டிருந்த பெரிய சேரிடம்,

‘சேர் இவங்கள வெளிய போக சொல்லுங்க’ என முறையிட்டேன்.

சேரும் என்ன நினைத்தாரோ ‘நசீமா டீச்சர் கொஞ்சம் அங்கால போங்க’ என்று கதவு இருந்த பக்கத்தைக் காட்டினார்.

எனக்கோ மிகவும் சந்தோஷம். மழலை மொழியில் மிச்ச மீதியிருந்த கதைகளை சொல்லிவிட்டு உம்மா படித்துக் கொடுத்துக் கொண்டிருந்த ஏழாம் வகுப்புக்கு ஓடிவிட்டேன். டீச்சர் என்னை வாஞ்சையோடு அணைத்துக் கொள்வார். பல கதைகள் சொல்லித் தருவார்.

வீட்டில் செய்து கொண்டு வரும் சிற்றுண்டிகளையும்  எனக்குத் தருவார். ஸ்டாப் ரூமில் அனைத்து ஆசிரியைகளும் சாப்பிடும்போது சிலநேரம் என்னையும் உம்மா கூப்பிட்டுக் கொள்வார். அப்போது  நசீமா டீச்சர்;, தான் செய்து கொண்டு வந்த உணவுகளையும் தந்து என்னை சாப்பிடச் சொல்வார்.

கொஞ்சம் என் சுட்டித் தனங்கள் குறைந்தது தெரிந்த போது, உம்மா டீச்சரின் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அங்கு அவரது இரண்டு மகன்மார் இருந்தார்கள். நளீர் நானா மீதுதான் நான் அதிகமாக இரக்கம் வைத்திருந்தேன். அவர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர். பழகுவதற்கு இனிமையானவர். மற்றவர் காமில். அதிகம் பேசமாட்டார். கழுவும் மீனில் நழுவும் மீனைப் போல சிரித்தும் சிரிக்காமலும் சென்றுவிடுவார்.

உம்மாவுக்கு அப்போது என் தம்பி பிறந்திருக்கவில்லை. அதனால் ஆண் பிள்ளையின் கனவை டீச்சரின் மகன்மாரிடம் நனவாக்கிக் கொண்டிருந்தார் உம்மா. டீச்சருக்கு பெண் பிள்ளைகள் இல்லை. நான் தான் நானாமார் இருவருக்கும் தங்கை என கூறி மகிழ்வார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சித்தியடைந்தவுடனேயே நானும் வேறு பாடசாலைக்கு போய்விட்டேன். அதன் பிறகு டீச்சர் பென்ஷன் போயிருக்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது டீச்சரின் தரிசனம் பெறாமல் போவதில்லை. நானும் சிறுமி என்ற ஸ்தானத்தில் இருந்து ஒரு படி உயர்ந்திருந்ததால் எனக்கும் பெரிய சேருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி இருந்தது.

என் உம்மாவுக்கோ டீச்சருக்கோ நானும் நானாhமாரும் முன்போல் பழகுவதில் சங்கடங்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் யௌவன வயதுடையவர்கள் என்பதால் எம்மிடையே வேரூன்றப்பட்ட சகோதர உறவு கூட ஒரு சிரிப்புடன் மாத்திரம் மட்டுப்பட்டுவிட்டது.

காலச் சக்கரம் வேகமாக சுழன்றது. சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஊருக்கு வந்திருந்தபோது நளீர் நானா வேலை கிடைத்து கொழும்புக்கு போயிருப்பதாய் சொன்னார்கள். காமில் ஏ.எல் செய்து கொண்டிருந்தார். எனக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்று தினமும் அல்லாஹ்விடம் வேண்டுவதாக டீச்சர் சொல்லும் போதெல்லாம் என் காதோரம் சிவத்துப் போகும்.

***************

நானும் தற்போது திருமணம் செய்;து தலைநகரம் வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. என் திருமணத்துக்கும் டீச்சர் வரவில்லை. ‘என்னை பார்க்க வராமல் என்ன செய்தாராம்’ என்று நான் அழுதேன். இதற்கிடையில் டீச்சரும் குடும்பம் சகிதம் மட்டக்குளியில் இருப்பது தெரிந்தது. நளீர் நானாவின் திருமணம் முடிந்துவிட்டது.

ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் இடம் தேடியலைந்து வீட்டைக் கண்டு பிடித்தபோது பெரியதொரு சாதனையை செய்துவிட்டது போல இருந்தது. போதாத குறைக்கு மதிய உணவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் டீச்சர். அங்கு போய் டீச்சரைப் பார்த்த முதல் வினாடியே மனசைப் போட்டு பிசைவது போல வலித்தது. ஏன் வந்தோம் என்று எண்ணினேன். டீச்சர் முகம் வெளுத்து தலை நரைத்து, வேறு யாரோ போல் இருந்தார்.

கடந்த இரு வருடங்களுக்கு முதல் டீச்சருக்கு சுகவீனம் ஏற்பட்டதாம் அதனாலேயே என் திருமணத்துக்கு வரவில்லை என்றபோது என் முகத்தை வேறெங்காவது கொண்டுபோய் வைக்க முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

நாம் வரும் மகிழ்ச்சியில்தான் இன்று இந்த அளவுக்காவது எழுந்து நடமாடுவதாக சேர் சொன்னபோது ஆனந்தம் பரவினாலும் சமையல்காரியின் உதவியுடன் எமக்காக அனைத்தும் தயாரித்ததை அறிந்து துடித்துப் போனேன். செல்லமாக கோபித்தேன். உம்மாவும் வெகுவாக கலங்கித்தான் போனார்.

உம்மாவுக்கும் டீச்சருக்கும் தேநீர் கொடுப்பதற்காக டீச்சரின் அறைக்கு நுழைந்தபோது, தாம் இளம் ஆசிரியைகளாக இருந்தபோது பாடசாலையின் அபிவிருத்திக்காக பட்டபாட்டை இருவருமாக கதையளந்து கொண்டிருந்தனர். நானாமாரும் வெளியில் போயிருந்ததால் பெரிய சேர்தான் என் கணவருக்கு பிஸ்கட், தேனீர் முதலியவற்றை கொடுத்துக்கொண்டிருந்தார்.

நிறைய நேரம் உம்மாவையும் டீச்சரையும் பேசவிட்டு நாம் முன் அறையில் இருந்தோம். வீட்டுக்கு வர வேண்டிய நேரம் நெருங்கவே டீச்சருக்கு தெரிவித்துவிட்டு அவரின் நலனுக்காக ப்ரார்த்தித்தவாறு வெளியே வந்தோம். பெரிய சேரின் கண்கள் கலங்கியதை காணத் தவறவில்லையாயினும் காட்டிக்கொள்ளவில்லை. கேட்டை விட்டு வெளியே வந்ததும் பீறிட்டுப் பாய்ந்த கண்ணீரை கணவருக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டேன்!!!

கானல் நீர் !


தேவாவின் மனைவி முதலில் அதிர்ச்சியடைந்தாலும் கணவனது உள்ளம் குழுந்தைகளுக்காக ஏங்குவது கண்டு தலையாட்டினாள். அதனால் நாளை காலை கேட்டுவிட வேண்டும் என திடசங்கற்பம் பூண்டவனாக உறங்கினான் தேவா. அவன் கனவில் அந்தக் குழந்தையை தூக்கி முத்தமிட்டு, விளையாட்டுப் பொருட்களாய் வாங்கி அடுக்கி.. எத்தனை ஆசைகள்? எத்தனை கற்பனைகள்?

***************

மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர். பிச்சைக்காரப் பெண்ணை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர். அந்த பிஞ்சு முகம் இன்று நிர்ச்சலமாக இருந்தது. சதாவும் முகத்தை சுருக்கிக்கொண்டு சிணுங்கும் அந்தக் குழந்தை இன்று இப்படி அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை எல்லோருமாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள். குழந்தை அழவில்லை என்பதற்காக அதைப்போட்டு அடித்த அடியில் மூர்ச்சையாகி...

பிச்சைக்காரியின் முகத்தில் சிறிதும் சலனமிருக்கவில்லை. அவளைப் பார்க்கும் போது தாய்ப் பாசம் என தரணியில் பேசப்படும் யாவும் பிழைத்துப் போனது போல் தோன்றிற்று. தாயின் சேலையை சப்பிக்கொண்டும் அடம் பிடித்தழுது கொண்டும் வலம் வரும் அந்த குழந்தை.. தாயைப் போலவே எப்போதுமே கையை விரித்து பணம் கேட்டவாறு வரும் அந்தக் குழந்தை இப்படி பேச்சு மூச்சற்று கிடக்கிறதே!

அன்றும் அப்படித்தான். தேவா அலுவலகம் செல்வதற்கு வழக்கமாக ஏறும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். அயன் பண்ணிய நீளக் கை ஷேர்ட், பேர்ப்யூம் வாசனை என அழகனாகச் செல்லும் அவன் வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான்.

கழிந்து போன இளமையின் நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த அவன் அக்குழந்தை அவனது தோற்பட்டையை தொடும் வரை சுய நினைவுக்கு வரவில்லை. திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் அனல் தெரித்தது. இளையான்கள் மூக்கைச் சூழ்ந்திருக்க ஏதோ மிச்சம் மீதிகளை சாப்பிட்ட கையுடன் அவனைத் தொட்டதால் ஷேர்ட் அழுக்காகி இருந்தது. குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும்போது அது உதைத்தால் நாம் மீண்டும் குழந்தையை உதைக்கிறோமா? இல்லையே. அவனும் அந்தரப்பட்டுப் போனான். ஒரு கணம் முறைத்துப் பார்த்தான். இவன் முறைக்கிறானா சிரிக்கிறானா என அறியாத குழந்தை அவனைப் பார்த்து அழகாய் சிரித்தது. அதைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சுரீர் என்றது.

‘ச்சீ... பச்ச புள்ளய போய் கோவிச்சிக்கிறமே?’

அப்படியே பாசம் வந்து கொட்டினாலும் தூக்கிக் கொஞ்சத்தான் முடியுமா? பஸ்ஸிலுள்ளவர்கள் இவனை வினோதமாக பார்க்க மாட்டார்களா? பேசாமல் திரும்பிக்கொண்டான். அன்றைய நாள் முழுவதும் அந்த குழந்தை அவனது நினைவுகளில் வந்துபோனது. வேலை முடிந்து வீட்டுக்குப்போகையில் வழக்கம் போலவே அன்றும் மனைவி அழுது கொண்டிருந்தாள்.

ஆண்டவா! இந்த பிரச்சினைக்கு முடிவு எப்போது வருமோ? சில வேளைகளில் நேரம் கெட்ட நேரத்தில் அழுது கொண்டிருக்கும் மனைவியை பார்த்து கோபம் வரும். என்றாலும் இவளை சதாவும் குறை சொல்லும் அயல் வீட்டுப் பெண்களையும்; எத்தனை முறை கண்டித்தாயிற்று? இவனிலும் அவளிலும் எந்தக் குறையுமில்லை. ஏனோ ஆண்டவன் குழந்தை பாக்கியத்தை இவர்களுக்குக் கொடுக்கவில்லை. இவளது தங்கையின் பிள்ளைகளை வாரியணைத்து இருவருமாக கொஞ்சும் போது அதைப் பார்ப்பவர்களுக்கும் இயற்கை மீது கோபம் கோபமாய் வரும்.

கவனிப்பாரற்று கிடப்பதால்தானே அந்தக்குழந்தை இப்படி இருக்கிறது? ஒழுங்காக குளிப்பாட்டி அழகாய் அணிவித்தால்? இவன் ஆசைப்பட்டு என்ன பயன்? மனைவியும் அம்மாவும் சம்மதிக்க வேண்டுமே? அது சாத்தியப்படக் கூடிய ஒன்றா? பலவாறு சிந்தித்தான். தினமும் அழுது கொண்டே பஸ் ஏறும் பிச்சைக்காரியிடம் என்னவென்று போய் பேசுவது? வாய்க்கு வந்தது போல அவள் ஏதாவது சொல்லி விட்டால் பெருத்த அவமானமாக போய் விடுமே.

அன்றொருநாள் கூட யாரோ ஒரு பெண் தன் பிள்ளைக்கு வைத்திருந்த பிஸ்கட்டை இந்தக் குழந்தைக்கு கொடுத்ததற்காக எப்படியெல்லாம் வசைபாடினாள் இந்தப் பிச்சைக்காரி? அந்த பெண்ணின் முகம் வெட்கத்தால் அப்படியே சிவந்து போயிற்றே. அப்பேர்ப்பட்ட இவளிடம் போய் ‘உன் பிள்ளையை தத்ததெடுக்கவா?’ என்று கேட்க முடியுமா? இன்னொரு நாள் வழக்கமாக அவள் அந்த குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை. அதை தட்டியெழுப்பினாள் அந்தத்தாய். பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு பெரும் ஆச்சரியமாய் போயிற்று.

வேலையில்லாத நாட்களிலும் அவன் நேர காலத்துடன் எழும்பினால் இன்னும் கொஞ்சம் தூங்கி எழுமாறு கூறும் இவனது அம்மா எங்கே? தூங்கும் பச்சைப் பிள்ளையை எழுப்பி விடும் அவள் எங்கே? மீண்டும் கவனித்தான். குழந்தை மீண்டும் அவளது தோளில் சாயும் போது அவள் அங்குமிங்கும் நோட்டம் விட்டாள். இவன் ; பார்ப்பதை அவள் காணவில்லை போலும். யாரும் அறியாத வண்ணம் குழந்தையின் தொடையில் கிள்ள, குழந்தை வீறிட்டுக் கதறி அழுதது. அவன் மலைத்துப் போனான். அழும் குழந்தையை காட்டி அவள் பணம் பெற்றுக்கொண்டிருந்தாள்.

வேலை விட்டு ஒரு தினம் வந்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்த டொபி மனதை என்னவோ செய்தது. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். மனைவியிடம் பேசி அவள் சம்மதம் பெற்று நாளைக்கு எப்படியாவது இந்த பிள்ளையை தனக்கு தர முடியுமா என இவளிடம் கேட்டுவிட வேண்டும். எனினும் ஒரு பிச்சைக்காரியின் பிள்ளை என்றால் யாரும் விரும்பப் போவதில்லை என்பதை நன்கறிவான். அதனால் தனது அலுவலக நண்பனுடைய தோழியின் பிள்ளை என கூறியே வீட்டாரிடம் சம்மதமும் வாங்கிக்கொண்டான்.

***************

இப்போது குழந்தையும் தாயும் வழமையாக நடமாடும் இடத்திற்கு தேவா வருகின்றான். பொலிசார் ஏதோ விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அழ வைப்பதற்காக தாய் அடித்த அடியால் திணறிய குழந்தை இறந்து கிடக்கின்றது!!!

கனவுகள் !


இளையராணிக்கு இருப்பு கொள்ளவில்லை. வாழ்வு குறித்து அவள் கண்ட கனவுகள் இனிமேல் நிலைத்திருக்க வேண்டும் இறைவா. மானசீகமாக கடவுளை வேண்டினாள். இன்று அவர் வரப் போகிறார். வந்த பின் குளித்து சாப்பிட்டு குழந்தையை கொஞ்சும் அழகை அவள் இன்று தானே முதன் முதலாகப் பார்த்து ரசிப்பாள்?

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள்??

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்ததோ? எந்த ஜாதிமத பேதம் ஒழிய வேண்டும் என நினைத்தாளோ, அதே ஜாதிப் பிரச்சனை இந்தளவுக்கு விசுவரூபம்; எடுத்து தன்னையும் தன் கணவனையும் ஏழு வருடங்கள் பிரித்து விட்டிருக்கிறதே? இத்தனை வருடங்களிலும் வேட்கை மிகுந்து திரியும் கயவர்களை சமாளிக்க எத்தனை போராட்டங்களை நடாத்த வேண்டியிருந்தது. தாலியிருந்தும் வேலியில்லாத பயிர் போல் தன்னைத் தானே எண்ணி அந்தரப்பட்டாளே. தத்தமது மனைவியருடனேயே வந்து பிள்ளையை தூக்கும் சாட்டில் இவளை திருட்டுத்தனமாக ரசிக்கும் எத்தனை பேர்? இளமை வாட்டத்தில் கணவனது படம்; பார்த்து எத்தனை இரவுகள் ஏக்கமாய் இருந்திருப்பாள்?

***************

இளையராணி இளம் பராயத்தில் இருந்தபோது பசு தோலுரிக்கப்பட்ட மனிதர்களின் முகங்களை முழுமையாகக் கண்டு அதிர்ந்து போனாள். உலகத்தில் யாருமே செய்யாத ஒன்றை அவள் செய்தாளா? இல்லையே. ஆனால் உலகத்தில் அரங்கேறும் மிகப் பிரதான குற்றமும் இதுதானே?

காதல்!

இந்த மந்திர வார்த்தையின் சுகத்தை முழுமையாய் உணருமுன்பே காலம் அதன் கை வரிசையை எப்படியெல்லாம் காட்டிப் போயிற்று? ஊருக்குள்ளேயே எப்பேர்ப்பட்ட அவமானங்கள்? உண்மையில் இவற்றுக்கெல்லாம் காரணம் அவளுடைய காதலா? காலம் தொட்டு பேசப்பட்டு வரும் ஜாதிகளுக்கிடையிலான வேறுபாடா?

பாடசாலை காலத்திலிருந்தே வாளிப்பான அவளது உடலமைப்பு மேல் மையல் கொண்டிருந்தவன் சரவணன். காதலை காரணம் காட்டி அவளை அடையும் அவனது நோக்கம் புரியாதளவுக்கு இவளென்ன முட்டாளா? எக்காரணம் கொண்டும் அவனது காதலை ஏற்க அவள் தயாரில்லை. அதையும் விட அவளுக்குள் ஓர் உணர்வு சதாவும் ஓடி ஓடி உயிரை வதைத்துக் கொண்டிருந்ததே? மனசுக்குள் போட்டு பூட்டி வைத்திருந்த காதல் புகையை மறைக்க அவளால் முடியாமல் போன போது சாடைமாடையாக குமரனிடம் ஒப்பேற்றினாள். அவன் வரும்போது நாணிச் சிவந்தாள்.

ஆதிகால சமூகம் தொட்டு குலம் கோத்திரம் பார்த்து மக்கள் தங்களுக்குள் பிரிவினைப்பட்டுப் போவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரே இறைவனின் படைப்பு, ஒரே நிற இரத்தம். இது தான் மனித இனம் என்று அவள் எண்ணினாள்.

வண்ணாண் அழுக்ககற்றி கழுவும் ஆடையை ஆடம்பரமாய் உடுத்தும் அவளது தந்தை, வீட்டு வாசலுக்குத் தானும் அவர்களை வரவிடாது படலை வரை மட்டுமே அனுமதித்து காசு கொடுப்பதை பார்த்து மனம் வெதும்பியிருக்கிறாள். மா இடிக்க வருகிற கூலிக்காரியையும் கொல்லைப் புறத்தில் நிற்க வைத்து வேலை வாங்குவதைப் பார்த்துப் பொறுக்காமல் பெற்றோரிடம் வாதாடியிருக்கிறாள். தமது இனங்களுக்கு இடையிலேயே ஏன் இத்தகைய வேறுபாடுகள் என எதிர்வாதம் புரிந்து இருக்கிறாள்.

அப்போதெல்லாம் ஷநீ சின்னப் பொண்ணு இதையெல்லாம் பற்றி நீ பேசக்கூடாது| என்று அதட்டப்பட்டாள். இயற்கையிலேயே இரக்க குணம் கொண்ட அவள் இப்படிப்பட்ட அரக்க குணங்களை அடியோடு வெறுத்தாள். அதன் காரணமாகவோ என்னவோ குமரனை விரும்பினாள். ஆனால் அவனோ தப்பித் தவறியேனும் அவள் பக்கம் பார்ப்பதேயில்லை. எதேச்சையாக கண்டுகொண்டாலும் கூட திரும்பிக் கொண்டு போய்விடுவான். அப்போதெல்லாம் பச்சைப் புண்ணில் மிளகாய்பட்டது போல அவளது உள்ளம் துடிக்கும்.

எனினும் இளையராணி தளர்ந்து போய்விடவில்லை. புற்றீசல் போல் வெளிப்பட்ட அவள் காதல், குமரனின் இதயத்தில் புற்றை அமைக்க அவா கொண்டது. காலம் அதன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. நான்கு மாதங்களின் பின் அவளது முயற்சிக்கு பலன் கிடைத்தது போல் அவனது புன்னகை கிட்டியது. விட்டில் தானாய் வலிய வலம் வந்தால் எந்த விளக்கு விரட்டியடிக்கும்? என்றாலும் வேண்டுமென்று அவள் விழுந்து அல்லல் படுவதை குமரன் விரும்பவில்லை. பக்குவமாக எடுத்துச் சொன்னான். அவளும் அவன் மட்டுமே வேண்டும் என்று உறுதியாகவே நின்றாள்.

ஆறு மாதங்கள் ஆனந்தமாய் கழிந்தன. அதற்குப் பிறகு புயலடிக்கும் என்று யார் கண்டது? இந்த விவகாரத்தை முதலில் எதிர்த்த சரவணன்; குமரனை மிரட்டினான். அவளை இனி சந்திக்கவே கூடாது என்றான். ஆனால் இளையராணியின் அன்பு நதியில் நீச்சலடித்துக்கொண்டிருந்த குமரன் இவற்றையெல்லாம் துளியளவும் பொருட்படுத்தவில்லை. எதற்காகவும் இந்த காதல் ஜோடி அஞ்சவில்லை.

தம் காதல் மூலமாகவேனும் சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து போகட்டும்; அல்லது நம்முடன் சேர்ந்தே இந்த ஜாதிப் பிரச்சனைகள் அழிந்து சாகட்டும் என சபதம் எடுத்துக் கொண்டனர். எதிர்ப்புகள் காதலை மேலும் வலுவடையத்தானே செய்கின்றன. இவர்களும் தம் காதலில் இன்னும் உறுதியானார்கள்.

இது இளையராணியின் பெற்றோரின் காதுகளுக்கு எட்டிய போது பதை பதைத்துப் போனார்கள். சமூக கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் என்றுமே விலகி நடந்ததில்லை. அப்படி ஏடாகூடமாய் எதுவும் நடந்தால் ஊர் தம்மை தள்ளி வைத்துவிடுமே எனப் பயந்தார்கள். முழு ஊருக்கும் தெரியும் முன்பே இளைய ராணியையும் அழைத்துக் கொண்டு எங்காவது கண்காணாத தேசத்துக்கு ஓடிவிட அவர்கள் முடிவெடுத்தார்கள்.

இருபது வருடமாய் வளத்த வளர்ப்புக்கு அவள் தேடித்தந்த வெகுமதியா இது? ஒரே பெண் என்று எப்படியெல்லாம் பாசத்தை ஊட்டி வளர்த்தார்கள் அவளது பெற்றோர். அவளுக்கு குறை வைக்கக் கூடாதென்று இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று கூட அவர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தார்களே. அத்தகைய அன்பிற்கு இந்த தண்டணை போதுமா? எத்தனை பெற்றோர்கள் இன்று இந்த பாட்டைப் படுகிறார்கள்? காரணமென்ன காதலா? சாதி மத பேதமா?

அவளாவது யோசித்திருக்கலாமே? தன்னைக் கேட்காமல் படிக்க வைத்து, தன்னைக் கேட்காமல் சாப்பிடத் தந்து, தன்னைக் கேட்காமல் ஆடை அணிகலன் தந்த பெற்றோர் தனக்குத் தேவையான வயதில் வரன் தேடித்தராமல் இருப்பார்களா? காதல் இவ்வளவு வலிமையானதா? எப்படியோ ஊரை விட்டு போகும் முடிவை இளைய ராணியே நிறைவேற்றிவிட்டாள். ஆம்! அவள் குமரனுடன் ஓடிப் போனாள். ஊரார்களுக்கு முன்னே நின்று தலைவிரி கோலமாய் அவளது அம்மா அவளை திட்டிக்கொண்டிருந்தாள். தான் பெற்ற பிள்ளையை ஒரு தாய் இப்படி திட்டுவாளா என்று ஊர் வம்பை அவல் தின்னும் பெண்களே மனம் கலங்கினர். ஆனால் அதன் உள்நோக்கம் மற்றவர்கள் திட்டுவதைவிட தானே திட்டுவது போல நடித்ததுதான் என்பது யாருக்குத் தெரியப் போகிறது?

இந்த சம்பவம் சரவணனை மிருகமாக்கி விட்டிருக்கும் என்று யாருமே நம்பியிருக்கமாட்டார்கள். சாதி வெறி பிடித்தலையும் ஒருவன் என்றே இளையராணி போன்றோர் நினைப்பார்கள். சமூக கட்டுப்பாடு மீறாதவன் என ஊரார் எண்ணுவார்கள். தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனுடன் போய்விட்ட அந்த அவமானத்தை அவன் ஏற்றுக் கொள்ள திக்கித் திணறினான். நண்பர்களிடம் கேலிக்காளானான்.

இவனைப் போன்றே அவள் மீது காதல் கொண்டவர்கள் ஷஅவங்களை சும்மா விடக் கூடாது| என கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய்விட்டு வேடிக்கை பார்த்தனர். ஒரு குழுவாக இயங்கி அவர்களை கண்டுபிடித்துத் தருவதாக அவள் பெற்றோரிடம் வாக்களித்தனர். இனிமேலும் இந்த ஊரில் இப்படிப்பட்ட தவறுகள் இடம் பெறக் கூடாதென்று மேடை அமைத்துப் பேசினர்.

எதுவுமே தெரியாமல் குமரனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள் இளையராணி. தாய் தகப்பனை விட்டுவிட்டு வந்த சோகம் குடிகொண்டிருந்தாலும், குமரனின் அணைப்பில் அவளது கவலைகள் கட்டுப்பட்டிருந்தன. இல்லற வாழ்வின் இனிமை இத்தனை சுகமா என அவள் எண்ணியிருந்தாள். அதற்கு கண் வைத்தாற் போல இவர்களின் வாழ்க்கையில் மீண்டும் பேரிடியாக வந்தான் சரவணன்.

தான் மணமுடிக்க இருந்த பெண்ணை கூட்டிக் கொண்டு வந்ததற்காக முதலில் சரவணன் வசை பாடினான். பிறகு கையோங்கினான். கீழ் சாதியான் தனக்கு பயப்படுவான் என்று எண்ணியே அவன் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும். முதலில் செய்வதறியாமல் பின்னே நகர்ந்தான் குமரன். அதை கண்ட சரவணன் உடனே இளையராணியை நெருங்கி பிள்ளை வயிற்றுக்காரி என்று கூட பாராமல் சட்டையை கிழித்து மானபங்கப்படுத்தினான்.

காதல் தந்த தைரியமோ என்னவோ வெறி கொண்டவனாய் எழுந்து சரவணனை தாக்கினான் குமரன். இந்த திடீர் தாக்குதலால் சரவணன் நிலை குலைந்து போனான்.

ஒரு நிமிடத்துக்குள் தனக்கு நடக்கவிருந்த அவமானத்தை எண்ணி உயிர் நடுங்கிய இளையராணி குமரனின் வெறியைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். எல்லாவற்றிற்கும் அவள் தான் முதலில் அத்திவாரம் போடுவாள். அவன் திறமையாக கட்டி முடிப்பான். அவனாக ராகமிசைத்து அவளை வழிக்கு எடுப்பதில்லை.

அப்படிப்பட்டவன் இவ்வாறு வெறித்தனமாக நடந்துகொண்டால் யாருக்கு ஆச்சரியமிருக்காது? ஒரு நிமிடம்.. ஒரே ஒரு நிமிடம் ஆனந்தப்பட்டவளுக்கு தன் கண் முன்னே நொடிப் பொழுதில் அரங்கேறிய அந்தக் கோரக் காட்சி ஈரலை குளிரச் செய்தது. கடவுளே.. கத்தியில் இரத்தம் சொட்டச் சொட்ட அவள் கணவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தான். அருகில் சரவணண் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தான்.

***************

ஏழு வருடங்களின் பின் இன்று குமரன் விடுதலையாகி வருகிறான். நீண்ட  காலமாக குமரனைப் பிரிந்திருந்த இளையராணி அவனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறாள்!!!

அழகன் !


அன்று சந்தியாவால் அலுவலகத்தில் வேலை செய்யவே முடியவில்லை. அந்த இனிய காலைப்பொழுதில் தனது வசீகரமான தோற்றத்தை மேலும் மெருகூட்டும் விதத்தில் முதன் முதலாக சேலையில் வந்திருந்தாள். அதுவே மனதில் ரம்மியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

காலையில் அவன் சந்தியாவின் கண்ணில்பட்டு அவள் இதயத்தில் சலனமூட்டி ஆனந்த பரவசத்தைத் தந்தான். இன்னும் ஒருமுறை அவனைப் பார்க்க வேண்டுமே! மனது சொல்லியவண்ணமே இருந்தது. அவனாவது அவளை விட்டு வைத்தானா? வைத்த கண்வாங்காமல் அவளை விழிகளாலேயே உண்டுவிட்டானே!

அன்று காலை சற்று நேரத்தில் டீசலை உண்டுவிட்டு ஏப்பமிடுவது போல ‘ப்ரேக்’ சத்தத்துடனும், பயணிகளை சாபமிடுவது போல தூசியைக்கிளறி புகையுடனும் வந்து நின்றது பஸ். ஏறிய சந்தியாவின் மான் விழியில் முதலில் அவன் உருவமே பட்டுத் தெறித்தது. சுருளான கேசம், நீண்ட நாசி, நேர் வரிசைப்பற்களில் ஒன்று விலகியதாலே அமைந்த அழகான சிரிப்பு. இப்படி சகலவற்றிலுமே அழகாயிருந்தான்.

அவளது அதிஷ்டமோ என்னவோ அவனது அம்மாவின் பக்கத்திலேயே இடம் கிடைத்ததால் அவள் மனம் மகிழ்ந்தது. அவளது காந்த விழிகள் அவனை மேய்ந்த வண்ணமே இருக்க அவனும் அவளைப் பார்த்து சிரிப்பதுவும் ஏன் தொடுவதுமாக இருந்தான். அடச்...சீ ஒரு பருவ வயதழகியை அவன் அம்மா முன்னிலையிலேயே இப்படி கிண்டல் பண்ணுவதா என அவள் நினைக்கவில்லை. அதுவே அவளுக்கு சுகமாயிருந்தது.

‘எங்கம்மா வேலைக்கிப் போறியா...? ஊரெது, தொழில் என்ன, பேர் என்ன...?’ என்று அவனது அம்மாவின் அடுக்கு கேள்விகளுக்கு பதில் கூறியே இருவரும் புது உறவை ஏற்படுத்திக்கொள்ள தயாராயிருப்பதை சிரித்து ரசித்தான் அவன்.

சில நிமிடங்களில் தன் கெமரா போன் மூலமாக திருட்டுத் தனமாக அவனை அதில் பதிவு செய்த சந்தியா கனத்த இதயத்துடன் விடை பெற்று இறங்கி அலுவலகம் வந்துவிட்டாள். வழக்கத்துக்கு மாறாக யாருடனும் பேசாமலும், இன்னும் வீட்டுக்குப் போகாமலும் யோசித்துக் கொண்டிருந்த சந்தியாவைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள் நண்பி.

‘எனக்கும் வேண்டும் இப்படியொரு...’ என்று தனக்குத்தானே உளறிக் கொண்டிருந்தாள் சந்தியா.

அவளைப் பார்த்து ‘ஏய் சந்தியா ஆபீஸ் விட்டாச்சி. நீ வீட்டுக்குப் போகலியா?’ என்று கேட்டவாறு அருகில் வந்து போட்டோவைப் பார்த்துவிட்டாள் சந்தியாவின் தோழி. ஒரு கிண்டல் சிரிப்பை அவள் உதிர்க்க, கற்பனை கலைந்த அவ்வேளையிலும் சந்தியாவின் முகம் செக்கச்சிவந்து உதடு துடித்தது.

வீட்டில் போய் தனது அறையைக்குச் சென்று கதவைத் தாழிடாமல் அவன் போட்டோவை ஆற அமர, ஆசை தீர ரசித்துவிட்டு எதேச்சையாக திரும்பினாள். திரும்பியவள் மூச்சுத்திணறி அதிர்ந்தாள். எதிரே பெற்றோர்.

‘யாரவன், யார் பிள்ளை?’ என வினா தொடுக்க நிதானமாய் எல்லாவற்றையும் கூறி முடித்தாள். விபரம் அறிந்த பெற்றோர் கேள்விகளை விட்டுவிட்டு புன்னகை பூத்தூவ சந்தியாவின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

நடந்த அனைத்தையும் பார்த்தவாறு போட்டோவில் அழகாக சிரித்தவாறு அவனிருந்தான். ஆமாம் சரியாக மூன்று வயது கூட நிரம்பாத அவனைப் பார்த்து, அவன் அழகை ரசித்து சந்தியா மீண்டும் தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.

‘எனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை’!!!

காதல் கல்வெட்டு !


வசீகரன் காரை ஸ்டார்ட் செய்தான். வழி நெடுகிலும் அவனுக்கு வலி தரும் காட்சிகளையே கண்டான். ஆங்காங்கே குடைக்குள்ளும் சீமேந்து கட்டுகளிலும் காதலர்கள் இவ்வுலகை மறந்து தத்தமக்குரிய தனிமையான, இனிமையான உலகத்துக்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு வருடங்கள் எவ்வளவு சீக்கிரம் ஓடி விட்டன. ஓ நிஷ்மிதா! வசீகரன் வாய்விட்டு அழுதான். அந்த சந்தோஷமும் பாதிதானே?

***************

பி.கொம் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் வசீகரனிடம் அதிகாலைகளில் வோக்கிங் செல்லும் பழக்கம் அவனது பதினொரு வயது தொடக்கம் கடமை போன்றே ஆகிவிட்டிருந்தது. வழமையாக அவன் வோக்கிங் போகும் பாதையில் வானை முட்டுமளவுக்கு உயரமாக கட்டப்பட்டுள்ள அந்த கட்டிடத்தை எண்ணி பிரமித்து ஒவ்வொரு தட்டாக எண்ணினான்.

ஒரு நிமிடம் கடவுளே!

அகோர ஒலி எழுப்பிய அவன், லிப்ட் இருப்பதையும் மறந்து மாடிப்படி வழியாக விரைந்து ஓடிப்போய் பார்த்தான். இன்னும் ஒரே ஒரு செக்கனை வீணாக்கினாலும் அவ்வளவுதான். துரிதமாக செயல்பட்டு அவளைப்பிடித்து பின்னால் இழுத்து ஓங்கி ஒரு அறைவிட்டான். எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் அதிர்ச்சியடைந்த அவள் அவனை மிரட்சியுடன் நோக்கினாள்.

‘ஏய் யாரு நீ? எதுக்கு தற்கொலைக்கு முயற்சி பண்ணினே?’

அவள் மௌனமாயிருந்தாள்.
‘என்ன காதல் தோல்வியா? இல்லேன்னா எவன்கிட்டயாவது...?’ அவன் முடிக்கு முன்னே அவள் சீறினாள்.

‘ஏய் மிஸ்டர்! நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எதுக்காக என்னை காப்பாத்தினீங்க?’

வசீகரன் தயங்கிய படி அவளிடம் மன்னிப்பு கேட்டான். அவன் அப்படி இரங்கி வந்து தன்னிடம் பேசிய போது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். ஏனோ வசீகரனுக்கும் மீண்டும் அவளிடம் காரணம் கேட்க வெட்கமாக இருந்தது.

நிஷ்மிதாவுக்கு வாழ்வே வெறுத்தது. இந்த சமூகம் இப்படித்தான். நல்லாயிருந்தால் வாழவும் விடாது. கெட்டுப்போனால் சாகவும் விடாது. இப்போது கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. தன் கையாலாகாத நிலைமையை எப்படி போக்குவது என்று அறியாமல் கண்ணீரை துணைக்கழைத்தபடி அவள் தூங்கிப்போனாள். காலையில் அவள் தன் தோழியின் ஞாபகமாக எடுத்து வந்த ரோஜாவை ரசித்துக்கொண்டிருந்தாள்.

‘இந்த ரோஜாப்பூ கூட எத்தனை அழகானது. என் வாழ்வில் மட்டும் ஏன்...?’ அவளது மனதுக்குள் வெறுமை நிறைந்து மூச்செடுக்க தடை செய்தது. மாதங்கள் கழிந்தன.

நிஷ்மி குட்டிக்கு என்ன வாங்கலாம்? காதலர் தின வாழ்த்து அட்டை, உயிருள்ள பூனைக்குட்டி, நகைகள்... எதை வாங்குவதென்று அங்கே தவித்துக் கொண்டிருந்தான் வசீகரன். ஷஇவ என் காதலை ஏத்துக்கணுமே... ஏத்துக்குவாளா?

அடுத்த நாள் காலை ஒரு பார்சலை அவளுக்கு கொடுத்துவிட்டு அவள் கண்களில் தன் உருவம் பார்த்தான். பிறகு தன் இதயத்தை அவளுக்கு தர இருப்பதாக சாடைமாடையாக காதலைக் கூறினான். அவனுடைய காதல் இப்படி அவளது கண்ணீரில் மிதக்கும் என்று நினைத்திருப்பானா? அவனது பார்சலை அவனிடமே திருப்பிக்கொடுத்துவிட்டு அழுதுகொண்டே சென்றாள் நிஷ்மிதா.

அப்படி முகத்திலடித்தாட்போல வந்தது நிஷ்மியின் மனதில் நெருடிக்கொண்டே இருந்தது. அவளும் அவனைக் காதலிக்கிறாளா? வெளிமனம் ஆனந்தத்தால் துள்ளிப் பாய்ந்தாலும் ஆழ்மனம் எச்சரித்து அவஸ்தைப்படுத்தியது. உண்மையைச் சொன்னால் அவன் தாங்குவானா? அவளால் உண்மையைச் சொல்ல முடியுமா?

வசீகரனின் அன்புத் தொல்லை வாழ்நாள் பூராக வேண்டும்போல் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து இருவரும் சந்திக்க நேர்ந்தது. சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத நிஷ்மிதா அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அதை வசீகரன் புரிந்து கொண்டானோ என்னவோ? அவள் சொல்லப் போவது தனக்குத் தெரியும் என்று கூறிவிட்டு அனைத்தையும் கூறி சரிதானே என்றான். சிலையாகி நின்ற நிஷ்மிதாவை தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான். விதியின் கைகள் இத்தனை வலிமையானதா? என நொந்து கொண்டாள் நிஷ்மிதா.

‘சொரி நிஷ்மி உன் அனுமதி இல்லாமல் உன் மெடிக்கல் ரிப்போட்ஸ் பார்த்துட்டேன்’ என்று கூறி தலையைக் கவிழ்த்துக் கொண்டான். இந்த ஒரு வாக்கியம் போதுமே... அவள் அழவில்லை. மனசு கல்லாகியிருந்தது. அவன் தான் அழுதான். பின் சமாதானம் கூறினான்.

‘வசீ.. என்னை மறந்துருடா. நான் உனக்கேத்த பொண்ணில்ல’

‘வாயைமூடு. கொஞ்சம் உன் கழுத்தை அறுக்குறேன். வலியைப் பொறுத்துக்க என்பதுபோலதானே நீ பேசுறே. உனக்காக எதையும் செய்கிறேன் நிஷ்மி. ஆனால் உன்னை இழக்கமாட்டேன்’.

இரண்டு வருஷம் கழிச்சி நீ இதே இடத்துக்கு வர்ரே. நீ வர்ரப்ப உன் மனசு கண்டிப்பா மாறி இருக்கும். அப்பயும் மாறலேன்னா உன்னோடு எனக்கு திருமணம். என்னை நம்புப்பா.

பார்க்கலாம் நிஷ்மி. ரெண்டு வருஷம்கிறது அதிக காலம்தான். ஆனால் என் காதலை நிரூபிக்கிறேன். எனக்காக காத்திரு என்று கூறி விடைபெற்றான்.

***************

வசீகரன் இப்போது காரை மிக வேகமாக செலுத்தினான். நிஷ்மிதா சொன்ன அந்த நாள் இன்று தானே என்று எண்ணினான். அந்த கட்டிடம் அப்படியே கம்பீரமாக காட்சி தந்தது. ஆனால் அதன் வர்ணம் மங்கியிருந்தது. அதை நெருங்க நெருங்கத்தான் அவன் உள்ளத்தில் கொந்தளிப்பு. மெதுவாக காரை விட்டு இறங்கி மாடிப்படி ஏறி....

‘யாரங்கே என் நிஷ்மிதாவா?’ அவள் தான். சந்தேகமேயில்லை. வாழ்க்கைiயே வெறுத்தவள் போல் வெளிறிக் காணப்பட்டாள்.

அவனுக்கு கண்ணீர் பீறிட்டது. பெருமூச்சுடனே அவளருகே உட்கார்ந்தவனை அதிசயமாகப் பார்த்தாள் நிஷ்மி. அவளுக்கு என்ன பேசுவது எதைச்சொல்வது என்று தெரியவில்லை. சொன்னபடியே முழுசாய் வந்து நிற்கிறானே என்று ஆச்சரியமடைந்தாள்.

‘நீ எனக்குரியவள் மட்டும் தான்டா. உன் கர்ப்பப் பையில உள்ள குறையால நம்ம காதல எதுவும் பண்ணேலாதுடா. எனக்கு நீ, உனக்கு நான் குழந்தையா இருக்கலாம்’

தன் தெரிவு சரியானதாக இருப்பதாய் அவள் பெருமைப்பட்டாலும் அவனது வம்சம் துளிர்விட்டு வளர தன்னில் குறையிருக்கும் எண்ணம் அவளது சந்தோஷத்தை வெட்டிப்போட்டது.

‘நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னுதானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. அது போதும். வா கார்ல ஏறு’ என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச்சென்றான்.

அவனது அதீத பாசத்தால் அவளில் பழைய உற்சாகம் ஒட்டிக்கொண்டது. அவனுடன் அவனது வீட்டுக்குச் சென்றாள். அவன் வாங்கித்தந்த நகைகள், சல்வார் செட், மியூசிக் கார்ட், சொக்லேட் என அனைத்தையும் பரப்பி ரசித்தாள். முப்பது நிமிடங்கள் கழிந்து அவன் மஞ்சட் கயிறைக் கொண்டு வந்தான். காதலை சாட்சியாக வைத்து மூன்று முடிச்சுகளை இட்டான். மெதுவாக அவளை இழுத்தணைத்தான். அவள் கண்களை மூடிக்கொண்டாள்!!!

தோல்வி !

இப்போதுகளிலெல்லாம் இருள் சூழ்ந்த உலகமாகிவிட்டது என் வாழ்க்கை. வாழ்வின் வசந்தங்களை ஒவ்வொன்றாக நுகரத்துடிக்கும் விடலைப் பருவம் முடிந்த ஒரு வருடத்தில் நான் விதியிடம் தோற்றுப் போனேன். அந்த கொடுங் கணங்கள் எனக்கு ஞாபகமிருக்கிறது.

பாடசாலைப் பருவத்தில் முதன்முதலாக அவளைப் பார்த்தேன். ஜீவிதம் பற்றி விலாவாரியாக தெரியாத வயசெனக்கு. உண்மையில் சொல்வதென்றால் என் மனசில் நட்சத்திரமாக மின்னியவள். என் மனசுக்குள் காதல் வலைகளைப் பின்னியவள்.

வாழ்வின் அர்த்தம் தெரியாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்த என்னைப் பிடித்து நிறுத்தி வசந்தம் காட்டியவள். என்னை விட ஓராண்டு இளையவள். உடைந்திருந்த என் உள்ளத் துகள்களை தன் பார்வையால் ஒன்று சேர்த்தவள். நான் அழகனல்லன். எனினும் அவளது தரிசனம் கிடைக்கிற ஒவ்வொரு நாளிலும் நான் அழகாகவே தோன்றுவேன்.

கையெழுத்து கோணியிருந்தாலும் என் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்று ஆறுதல் சொன்ன ஏணியவள். அவளுக்காக எதையும் செய்யத் தயாராயிருந்தேன். என் சக்திக்கு மீறியவற்றையும் அவளது சந்தோஷத்துக்காக செய்ய விழைந்ததுண்டு. அவள் விருப்பமற்ற எதையும் நான் செய்ய நினைத்ததில்லை. அவளுக்கு பிடித்த அனைத்தும் ஏனோ எனக்கும் பிடித்திருந்தது.

என்னை ரொம்பவும் ரசிப்பாள். உற்று உற்றுப் பார்ப்பாள். தேவையின்றி சிரிப்பாள். தலைகால் புரியாத ஆனந்தத்தில் பலநாள் தூக்கம் கெட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் என் உள்ளம் ஆனந்த மழையில் நனைந்து கொள்ளும். என்னைத் தொடாமல் அவளுக்கு பேசத் தெரியாது. எனக்கோ கூச்சமாக இருக்கும். அவளைத் தொட்டுப் பேச ஆசையாகவுமிருக்கும்.

காலடியில் இருக்கும் பல தனியார் வகுப்புக்களை விட்டுவிட்டு மிகத் தொலைவில் இருக்கும் வகுப்புக்களுக்கு போய் வருவேன். ஏன் தெரியுமா? அவளோடு இணைந்து நடந்து, சின்னக் கண்கள் பார்த்து, மதுரக்குரல் கேட்டு சந்தோஷமாக செல்வதற்கு. அதைவிட வேறென்ன தேவையிருந்திருக்கும் எனக்கு? தேளாக கொட்டிவிட்டுப் போகும் வரை நான் அவளைக் காதலித்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டுப் போன போது துடித்துப் போனேன். இதயம் வெடித்துப் போனேன்.

ஆரம்ப காலத்தில் நன்றாகத்தானிருந்தாள். ஆனால் அவள் என் நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்ளை சொருகி விட்டுப் போகும் வரை எனக்குத் தெரியவில்லை. தெரியாதளவுக்கு நான் சின்னக் குழந்தையுமில்லை. அன்பைக் காட்டி வம்பை வாங்குவேன் என்று நான் அறிந்திருப்பேனா?

அவள் ஊருக்கு போவாள். அப்போது இதயத்தில் இனம்புரியாத வலியெடுக்கும். ஏனெனில் திரும்பி வரும்போது என்னைப் பற்றி சுமந்து சென்ற ஞாபகங்களில் பாதியை தொலைத்து விட்டுத்தான் வந்திருப்பாள். வந்த பின் கழுகாய் என்னைச் சுற்றி, பாம்பாய் என்னைக் கொத்தி வதைப்பாள்.

அப்படியெல்லாம் நடந்தாலும் நான் அவளுடன் கதைக்காமல் இருந்ததில்லை. என் அகம் முழுக்க அவள் வியாபித்து இருந்ததாலோ என்னவோ மீண்டும் மீண்டும் அவள் முகம் பார்க்கவே ஏங்கினேன். அவளை மட்டுமே என் இதயத்தின் இளவரசியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஷபோனால் போடி| என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாம், நான் அவள் மீது கொண்ட காதல் பொய் என்றால்!

அவள் எனக்கு மட்டுமானவள் என்று எண்ணியிருந்தேன். ‘எனக்கு இன்னொருவன் இருக்கிறான்’ என அவள் சொல்லும் வரை. அவள் வேண்டும் என்பதற்காக நான் அவளைக் காதலிக்கவில்லை. நான் உண்மையாக அவளைக் காதலிப்பதால்தான் அவள் எனக்கு தேவையாக இருக்கிறாள். அவளைத் தவிர வேறெந்த ஞாபகங்களும் எனக்கில்லை. என் இதயம் அழுகிறது.

அவளது வீட்டார் விரும்பும் மணவாளனுக்கு அவளைக் கொடுத்துவிட்டு நான் விலகிக்கொள்ள நினைத்தாலும் என் உள்ளம் உலோபியாகின்றது. அவளை என் உயிர் போல நான் கருதிடாத காரணம், உயிரும் ஓர் நாள் என்னை விட்டு பிரிந்திடுமே என்பதால்தான்.

அவளை உண்மையாய் காதலித்ததற்காக எனக்கு கிடைக்கவிருக்கும் பரிசு என்னவோ? ஐயோ கண்ணீர் கட்டுப்பாடின்றி பெருகுகின்றது. அழிந்து போகவே முடியாதபடிக்கு ஒரு காதல் வடுவை தந்திடுவாளோ? என் ஆசைகளை அவளின் வார்த்தைகளுக்குள் கருகச் செய்து விட்டு என் அந்தரங்கத் துன்பத்தில் சுகம் கண்டால்? அந்த எவனோ ஒருவனின் அணைப்பில் அவளது மனசாட்சி கருகிப்போய் என்னை மறந்துவிட்டால்? என்னைச் சுற்றி சதாவும் ஒரு தீக்குளம் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது.

துன்பக்கடலில் மூழ்கடித்துவிட்டு மூச்சு முட்டச் செய்தாலும் அவளுடன் நான் கோபிக்கப் போவதில்லை. என் மனசில் அவளுக்காக ஊற்றெடுக்கும் அன்பை முழுவதுமாக வெளிப்படுத்தத் தெரியவில்லை. ஒரு வேளை அப்படித் தெரியப் படுத்தினால் என்னை பைத்தியக்காரனாகவும் எண்ணியிருப்பாள்.

சிலவேளை என் ஆன்மாவை கசக்கிப் பிழிந்து காதல் சாறை வலுக்கட்டாயமாக பருக்கியதாலோ என்னவோ அவள் என்னை விட்டுப்போக எண்ணியிருக்கக்கூடும். அவள் இன்னொருவனுக்கு உரிமையாகப் போகிறாள். கடவுளே. அதைத் தாங்கும் பலமான உள்ளம் எனக்கில்லையே.

கறவை மாடாய் காதலித்துக்கொண்டிருந்த என்னைவிட்டு அந்தப் பறவை உல்லாசமாய் பறந்து போய்விட்டது. ஆனால் சிறகுகள் எறிந்து சாம்பலாகிக் கொண்டிருப்பது நான் தான்!!!

மே தின விடுமுறை!

குருமூர்த்தியின் மனது சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தது. நாளை மே தினம். விடுமுறை நாள். வீதியெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நாளைய தினத்தில் மேதின ஊர்வலம் நடைபெறும் என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்த போது அவனுக்கு சத்திமிட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.

மலைய மக்களின் வாழ்க்கைச் சுமையும் தேயிலைச் சுமையும் நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. கடலோரப் பிரதேச வாசிகளின் வருமானம் பிடுங்கித்தின்னப்படுகிறது. நடுச்சாமத்தில் வலை வீசுபவர்களிடம் முதலுக்கும் மோசமாக்குவது போல குறைத்துத் தருமாறு விலை பேசுகிறார்கள். கம்பனிகள், கடைகள் வீட்டு வேலைகள் எல்லாவற்றிலும் பணத்தின் அதிகாரம் தலைவிரித்தாடுகிறது. வருடம் முழுவதும் மாடாய் நடாத்திவிட்டு ஒரு நாளைக்கு மட்டும் தொழிலாளர்களுக்காக தொண்டைக்கிழிய கத்தப்போகிறார்கள்?

எல்லோரும் விடுமுறை நாள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்க இவன் மாத்திரம் இப்படி தவிப்பதற்கு காரணம் இல்லாமலில்லை. வறுமையில் வாடிக்கொண்டிருப்பது மட்டுமே அவனது வாழ்க்கையாகி விட்டதே. இதையெண்ணி கவலைப்படுவதைத் தவிர அவனால் வேறு என்ன செய்ய முடியும்?

அரச மரத்தை ஆயிரம் முறை சுற்றி வந்தும், விரதங்கள், நேத்திகள் என்று பல தவங்கள் செய்தும் சில பணக்காரர்களுக்கு ஆண்டவன் ஏனோ குழந்தைப் பாக்கியத்தை மட்டும் கொடுப்பதேயில்லை. ஆனால் ஏழைகளுக்கு உள்ள ஒரே சொத்து இந்த குழந்தை பாக்கியம் மட்டுமே. அந்த வகையில் குருமூர்திக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தன. கடைசிக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களும் பூர்த்தியாகவில்லை.

குழந்தைகள் பசி தீர உணவு சாப்பிட்டதை அவன் இன்று வரை பார்த்ததில்லை. அவனது வாழ்க்கையில் அவனுடன் கூடவே ஒட்டி வந்து நிலைத்த ஒரே உறவு வறுமை மட்டுமே. நன்றாக படித்தால் பிற்காலத்தில் நன்றாய் வாழலாம் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்லியிருக்கிறார்கள். எனினும் படிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் அது நிறைவேறாமல் போனதற்குக் காரணமும் அந்த வறுமைதானே?

தன்னைவிட ஓரளவு வசதி வாய்ந்த தன் மனைவி தன்னைக் கல்யாணம் செய்துகொண்டதிலிருந்து அவள் கண்ட சுகம் என்ன? வாய்க்கு ருசியாய் சாப்பிட்டிருப்பாளா? ஆசையாக புதுத்துணி உடுத்தியிருப்பாளா? அவளுக்கென்றிருந்த கொஞ்ச சொத்தையும் அவளது பணக்கார சகோதரர்கள் பறித்துக்கொண்டாகிவிட்டதே?

குருமூர்த்தி பிரபலமான துணிக்கடையொன்றில் வேலை செய்கிறான். அவனது படிப்புக்கு இந்த வேலை கிடைத்ததே அதிஷ்டம் என்று மெனேஜர் உட்பட பலர் அவனை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில். அதில் கோபப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை. உண்மையும் அதுவே.

ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில் ஏழு வருடங்களுக்கு முன்பு தொழிலுக்கு வந்தான் குருமூர்த்தி. கடை முதலாளியும் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது போன்றே இன்னமும் ஒரு ரூபாயேனும் அதிகமாக்கிக் கொடுக்கவில்லை.

ஒரு வேளைக்கு பருப்பும் தேங்காயும் பாணும் எடுத்தால் அன்றைக்கே இருநூறு ரூபாய் காலியாகி விடுமே? பீட்ஸா சாப்பிடும் பணக்காரர்களின் வாய்க்கு குருமூர்த்தியின் சாப்பாட்டைக் கொடுத்தால் என்ன செய்வார் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலாளியிடம் பல முறை இது குறித்து சொல்லியும்; ஷஅடுத்த மாதம் பார்ப்பம்| என்ற ஒற்றை பதிலுடன் பேச்சை முடித்துவிடுவார்?

இந்தத் துணிக்கடையை வைத்துக்கொண்டு முதலாளி எவ்வளவு பெரிய மனிதராகிவிட்டார். அவரது சொல்பேச்சை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு தன்னிடம் வேலை செய்பவர்களையும் கிட்டத்தட்ட அடிமை போல வைத்திருந்தார் அவர். விஷேசமாக குருமூர்த்தியின் பங்களிப்பு அந்தக்கடைக்கு அத்தியவசிமானதாக இருந்தது. இருக்காதா பின்னே? பண்பட்ட நிலத்தில்தான் விளைச்சல் அதிகமாய் இருக்கும் என்பதற்கிணங்க ஏழு வருடங்கள் துளிக்கூட வஞ்சகமின்றி ஓடி ஓடி உழைத்து இந்தக்கடைக்காக தன் வாழ்க்கையையே தியாகமாக்கிக்கொண்டிருக்கிறான் குருமூர்த்தி. பெருநாள் தினங்களுக்கே லீவு கொடுக்காமலும், கடை மூடியிருக்கும் நாட்களில் சம்பளத்தை வெட்டியும் தன் அதிகாரத் திமிரைக் காட்டி ஏழைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளும் இந்த அயோக்கிய முதலாளி, குருமூர்த்தியை அவ்வளவு சீக்கிரத்தில் வேறொரு இடத்துக்கு வேலைக்குப் போக விட்டுவிடுவாரா? முதலாளி விடுகிறாரோ இல்லையோ இந்த வேலையை விட்டு வேறொரு தொழிலுக்கு செல்ல குருமூர்த்திக்கும் வழியில்லை. அவன் பழகிக்கொண்ட ஒரே தொழில் இது மட்டுமே.

முதலாளிகள் என்று தம்மை என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டு தொழிலாளர்களை வெறும் இயந்திரங்களாக நடாத்தும் எத்தனைப்பேர் இன்று நன்றாக வாழ்கிறார்கள்? தம்மிடம் வேலைப்பார்ப்போரை ஏன் வாழவிடாமல் இருக்கிறார்கள்? 'கெஷியரில்' இருந்து கொண்டு ஆயிரங்களாக சம்பாதிக்கிறார்களே? வியர்வை சிந்த உழைத்தும் தினமும் மூட்டைத்தூக்கினாலும் ஏன் தொழிலாளி வர்க்கம் மட்டும் ஏழையாகவே எப்போதும்?

சில இடங்களில் குறிப்பிட்ட மாத சம்பளத்தை தாமதித்து அடுத்த மாதத்தில் கொடுக்கின்ற அடாவடித்தனங்களும் இடம் பெறாமல் இல்லை. காதலுக்கும் கல்யாணத்துக்கும் ஜாதி மதம் பணம் என்று பிரித்துப்பார்ப்பவர்கள் போன்று தொழிலாளர்களையும் பிரித்துப்பார்க்கும் ஈனபுத்தி விரல்விட்டு எண்ணக்கூடிய பல முதலாளிகளிடம் இருக்கிறது. அது மாத்திரமின்றி பெருநாள் தினத்தைக்கொண்டாடுவதற்கு தொழிலாளர்களை தத்தமது சொந்த ஊருக்கு போகவிடாமல் தனதும் தனது குடும்பத்தினரின் சுற்றுலாவுக்காக சாரதியாக வைத்துக்கொள்ளும் எத்தனைப் பேர்? சிங்களத்தமிழ் புத்தாண்டுக்கு, கிறிஸ்மசுக்கு, நோன்பு அல்லது ஹஜ் பெருநாட்களுக்கு என்று விடுமுறை தராமல் வேலை செய்யப்பணிக்கின்ற அரக்கர்கள் எத்தனைப் பேர்? சாப்பிடுவதற்கே வழியின்றி இவர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போது வீண் களியாட்டங்களில் ஈடுபடும் பாவிகள் எமது சமூகத்தின் சாபக்கேடுகள். முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்குமான பெரிய போராட்டமே நடப்பதும் இதனால் என்று அவர்கள் அறியவில்லையா? அல்லது அறியாதது போல் வேஷமிட்டுக் கொண்டு இருக்கிறார்களா? இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கும் இக்கருத்து குருமூர்த்திக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதாவது

திருநபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு அருளியுள்ளார்கள்.

'கூலிக்காரனது கூலியை அவனது வியர்வை காயுமுன்னே கொடுத்துவிடுங்கள்'

இந்த கருத்தை மதித்து ஏற்றுக்கொள்ளும் எத்தனை முதலாளிகள் எங்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள்?

இந்தக்காலத்தில் ஆண்கள் பல தொழில்களை கற்று வைத்திருந்தால்தான் குடும்ப பாரத்தை ஓரளவாவது சமாளித்துக்கொள்ள முடியுமாக இருக்கிறது. குருமூர்த்திபோல ஒரு தொழிலை மாத்திரம் கற்றுக்கொண்டு இருந்தால் வேறொரு தொழில்வாய்ப்பு எப்படி அமையும்? நல்ல வசதியான தொழிலுக்கு செல்வதென்றாலும் முதலாளி வர்க்கம் அதற்கு இடம்கொடுப்பதில்லையே? 'இன்டர்வியூ' என்ற பெயரில் அரங்கேறும் அராஜகங்கள் எத்தனை? பணக்காரர்களில் புத்திரர்களுக்கு மாத்திரமாய் அமைந்துவிடும் இந்த தொழில் வாய்ப்புக்கள் வறுமையோடு பிறந்து வறுமையோடு வளர்ந்தவனுக்கு எட்டாத கனிதானோ?

நாளைய தினத்தை எப்படியெல்லாம் களியாட்டங்களில் கழிக்கலாம் என்றும் என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்றும், எந்த நண்பன் வீட்டுக்கு போகலாம் என்றும் பலர் யோசித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் குருமூர்த்தியின் கவலையோ வேறு விதமாக இருந்தது. அதாவது நாளைய தினத்தில் வேலை இல்லை என்றால் வழமையாக கிடைக்கின்ற இருநூறு ரூபாயும் கிடைக்காது. அதனால் அன்றைய செலவுகளை சமாளிப்பது எப்படியென்றும், வழமையாக இருவேளைக் கஞ்சியோடு மாத்திரம் தம் பசியை அடக்கிக்கொள்ளும் தன் குழந்தைகள் நாளைய நாள் முழுவதும் பசியோடு இருக்க நேரிடுமே என்றும்தான். பசி தூக்கம் மறந்து குடும்பத்தை பிள்ளைகளை நினைத்துருகி அயராது வேலை செய்து, முதலாளிகளுக்கு உழைத்துக்கொடுப்பவர்கள் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த மேதினத்தில் கொஞ்சமாவது ஆறுதல் பட்டுக்கொள்ளக்கூடும். ஆனால் அன்றாடங் காய்ச்சிகளான குருமூர்த்தி போன்றோரின் மனம், நிச்சியமாக மேதினம் என்ற விடுமுறை நாளை பொய்யாக கொண்டாடப்போவதில்லை!!!


(கொஞ்சம் கற்பனை)

தவிப்பு !


‘ஏன் இன்னிக்கு இவ்ளோ தாமதம்?’ பொய்க் கோபத்துடன் ஷாமிலா கேட்டாள்.

‘ஒபிஸ்ல சரியான வேலை நெருக்கடி. அதுதான்’ என்று கூறிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் பஸால்.

இரு வீட்டாராலும் தம் காதலுக்கு எதிர்ப்பிருந்த போதும், பொறுத்திருந்து பெற்றோரின் சம்மதத்துடனேயே தன் இனிய காதலியைக் கைப்பற்றியவனல்லவா பஸால். இன்றைக்கு மூன்று வருடங்கள் கடந்தும் யாரும் அவர்களை தம்பதியராய் நோக்கமாட்டார்கள். காரணம் இவர்களுக்கிடையே காணப்பட்ட இரக்கமும் நெருக்கமும்தான்.

‘என் பஸால் ரொம்ப நல்லவன்’ இப்படித்தான் தன் கணவனைப்பற்றி நேற்று வரை பெருமைப்பட்டுக்கொண்டிருந்தாள் ஷாமிலா. ஆனால் இன்று திருஷ்டி பட்டதைப்போல... இறைவனே ஏனிந்த சோகம்? பஸால் அப்படிப்பட்டவன் என்று யார் நினைத்தார்கள்? இல்லை. அவன் அப்படிப்பட்டவனில்லை என்று ஆறுதலடைய அவளால் முடியவில்லையே?

நித்யா!

இந்த மனக்குமுறலுக்கெல்லாம் காரணம் நித்யா என்பவளுக்கு பஸால் எழுதியிருந்த கடிதம் தானே? பீரோவைத் திறக்கையில் வந்து விழுந்த பைலிலிருந்து பஸால் பாதி எழுதிவிட்டு வைத்திருந்த அந்தக்கடிதம் இவளுக்குக் கிடைத்தது. தன் கற்பனையை ஓடவிட்டுப் பொருமினாள். வயிற்றெரிச்சலாயிருந்தது. சாப்பிடப் பிடிக்கவில்லை. குளிக்கவுமில்லை. தன் மணவாழ்வின் இதுவரையும் செய்திராத ஒன்று இன்று அரங்கேறியது. குப்புறப்படுத்து அழுதாள் ஷாமிலா.

பொழுது சாயும் நேரம் மிகவும் களைத்துப்போய் வந்த பஸால், புன்னகையால் தன் களைப்பைப் போக்கும் ஷாமிலா எங்கே என கண்களால் வீடு முழுக்க தடவினான். பளிச்சென அவன் முகம் மிளிர்ந்தது ஏதோ நினைத்தவனாய் உற்சாகத்துடன் படுக்கை அறையை நெருங்க நெருங்கத்தான் பயம் கௌவிக்கொண்டது.
குப்புறப்படுத்து விம்மிக்கொண்டிருந்த ஷாமிலாவின் நெற்றியில் கைவைத்துப் பார்த்து பதறினான். அல்லாஹ்வே.. இப்படி கொதிக்குதே.. என்று கலவரப்பட்டான். பதறிக் கொண்டிருந்தவனை மெல்ல கண்விழித்துப் பார்த்தாள் ஷாமிலா.

‘என் மேல்தான் எவ்வளவு அன்பு’ என்ற எண்ணம் தோன்றி மறையும் முன்பே ‘சீ.. என்னமாய் நடிக்கிறான் ராஸ்கல்’ என்று எண்ணியவளாய் அவனது கையை விலக்கிவிட்டு விருட்டென எழுந்து குளியலறைக்குச் சென்றாள். எல்லாமே புதிதாக இருந்தது பஸாலுக்கு. பசியோடு அமர்ந்திருந்தவனுக்கு ஷாமிலாவின் திடீர் மாற்றத்தை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது.

தொலைபேசி மணி அடித்தது. சுய நினைவுக்கு வந்த பஸால் ரிஸீவரை காதுக்குக் கொடுத்தான்.

‘ஹலோ யாரு நித்தியா.. சொல்லு. ஓகே வர ட்ரை பண்ணுறேன்’ பேசிக்கொண்டிருந்தான்.

மீண்டும் நித்தியா? எத்தனை நாளா நடக்குது இந்த நாடகம்? குளித்துக் கொண்டிருந்தவள் குரூரமாய் சபித்தாள். பஸாலுடைய நினைவுகளோ ஷாமிலாவைக் காதலித்த காலங்களை அசைபோட ஆரம்பித்தது.

***************

ஒரு விபத்திலே அவளை முதன் முதலில் சந்தித்தான். செல்போனில் சுவாரசியமாக உரையாடிக்கொண்டு வந்தவள் மஞ்சட்கடவையில் அல்லாமல் பாதையைக் கடக்க முற்பட்டாள். மறுநிமிடம் இமைகளால் விழிகளை மூடிக்கொண்டாள். சொல்லி வைத்தாட் போல பொலீஸ் சூழ்ந்து கொண்டது. பொலீஸ் அதிகாரி இவனை ஜீப்பில் ஏறச் சொன்னார். பெண்கள் தவறு செய்தாலும் ஆண்களின் தலையில் தானே விழுகிறது என்று நினைத்துக் கொண்டவன் தன் விதியை நொந்தவாறு வேறு வழியின்றி ஜீப்பில் ஏறிக்கொண்டான். மூன்று நாட்கள் கழிய இன்னும் இரண்டு மணித்தியாலம் இருந்தது. அப்போது

‘உங்கள விட்டாச்சி. நீங்கள் வீட்டுக்குப் போகலாம்’ என்று கான்ஸ்டபிள் சிங்களத்தில் கூறினான். வெளியே வந்த போது ஷாமிலா அவனுக்காக காத்திருந்தாள். என்ன நினைத்தானோ அவளிடம் மன்னிப்புக் கேட்டான் பஸால்.
தவறு செய்தவள் அவள். அவனை மன்னிப்பதா?

‘இல்ல மிஸ்டர்...’ அவனது பெயர் தெரியாமல் அவள் தடுமாறிய போது

‘பஸால்’ என்று முடித்து வைத்தான்.

‘நீங்கதான் என்னை மன்னிக்கணும். தவறு செய்ததது நானில்லையா?’

‘எப்படியோங்க உங்களால் அவர்களுக்கு செமலாபம்’ என்று கூறி சிரித்தான். அந்த சிரிப்பில் அவள் சொக்கிப்போனாள்.

கம்பனியில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவளைப் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் ரொம்ப அழகாய் இருப்பதாய் கூறினார்கள். பார்ப்போமே என்று அலட்சியமாய் வந்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. புன்னகை ஒன்றை மட்டும் அன்று பகிர்ந்துகொண்டார்கள். தனது உம்மாவுக்கு சுகமில்லை என்று ஷாமிலா வராதிருந்த அன்று அவனுக்கு உலகமே வெறுத்தது போலிந்தது. அதன் பிறகே தான் ஷாமிலாவுக்குரியவன் என்பதை பஸால் தெரிந்துகொண்டான். பின்பு அவர்கள் தத்தமது இதயங்களை பரிமாறியதும் அவள் வீட்டில் தோன்றிய எதிர்ப்பலைகள் பஸாலின் நடத்தை கண்டு ஓய்ந்ததுவும், ஷாமிலாவின் குணம் கண்டு பஸாலின் பெற்றோருக்கு அவளை பிடித்துப் போனதுவும் பழைய ஆனால் இனிய கதை.

***************

குளியலறைக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அவளோ அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றாள். எழுந்து சென்று பாதி எழுதி விட்டு வைத்திருந்த ‘அந்த’ கடிதத்தை எழுதத்தொடங்கினான். எதேச்சையாக வந்தவள் அவன் பின்னாலிருந்து அவன் எழுதுவதை வாசிக்கத் தொடங்கினாள். அதில்

‘நித்தி.. ஸொரிடா. உன் ரூமில் வந்து உன்னைப் பார்க்க முடியவில்லை...’ இப்படி தொடர்ந்து எழுதி நிறைவு செய்தான்.

அன்றைய இரவு இருவருக்கும் நரகத்துக்கு இட்டுச் சென்ற பாலமாக இருந்தது. எனினும் ஷாமிலாவின் நெஞ்சம் பாறையாய் இறுகியிருந்தது. ஸொரி ‘டா’ வாமே.. அந்தளவுக்கு நெருக்கமோ... அழுகை வந்தது. ஆனால் அழவில்லை. துரோகிகளுக்காக அவள் ஏன் அழ வேண்டும்? அத்தோடு விட்டால் கூட பரவாயில்லை. ரூமில் போய் பார்க்க முடியவில்லையாம். நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. உலகமே ஒன்றிணைந்து தனக்கு சதி செய்வது போல் உணர்ந்தாள்.

சற்று திரும்பியவளின் கண்களுக்கு பஸாலின் புகைப்படம் தென்பட்டது. இந்தச் சிரிப்பில்தானே அவளது கன்னி மனம் பறிபோனது. அவனின் சிரிப்பழகை ரசிக்கவென்றே எத்தனை நகைச்சுவைகளை தேடிச் சொன்னாள்? திடீரென அது ஆள்மயக்கிச் சிரிப்புபோல் தோன்றியது. ‘எல்லா ஆண்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அந்த மாதிர பொறுக்கிகளை மரத்தில கட்டி வச்சி சுடணும். பிறகு கழுகு கொத்தணும்...’ என்று கணவனால் ஏமாற்றப்பட்ட தன் தூரத்து உறவினர் ஒருத்தி சொல்லியிருந்தாள். அது நடந்து அரை ஆண்டுகள் கழிந்திருக்கும். ஆனால் இப்போது ஷாமிலா சொல்லிப் பார்த்த போதும் பொருந்துகிறதே..!

தன்னை உயிருக்குயிராக காதலித்தவள், மணம் முடித்து இன்று வரை தேனாய் தித்திப்பூட்டியவள் இப்படி சீறுகிறாள் என்றால், தன்னில் ஏதாவது பிழையிருக்குமோ என மூளையைக் கசக்கி யோசித்தான் பஸால். ம்ஹும்.. அப்படி சொல்லுமளவுக்கு எதுவுமில்லை. எதற்காகவாவது சற்று உரத்துப் பேசினாலும் சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு பிறகு அதற்குத் தண்டனையாக முத்தம் கேட்பாள். இன்று என்னவாகிற்று? தமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிரிவு பற்றி ஈரேழு வாரங்களாக அவள் எதுவுமே கூறாததில் குழம்பிப் போனான் பஸால். எங்காவது போய் வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. அவளிடம் சொல்லாமலேயே டவுனுக்குச் சென்றான்.

‘ஷமி... நீ நடந்துக் கொள்றது கொஞ்சமும் பிடிக்கல’ அவன் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்த போது அவள் அங்கிருந்தால் தானே? முதன் முதலாக அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது.

நித்தி!

ஷாமிலா சொல்லிப் பார்த்தாள். எரிச்சலாக இருந்தது. சற்று நேரத்தில் குமட்டிக் கொண்டு வர காரணமறிந்து பூரித்துப் போனாள். ஆனால் அந்த சந்தோஷம் வெகுநேரம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட எண்ணிக் கொண்டிருந்தவள் இப்போது விக்கிக்கொண்டு அழுதாள். தான் மோசம் போனதாய் தனக்குள்ளே கற்பனை பண்ணி மனம் சோர்ந்து போனாள். மாலை நேரம் பஸால் தன் நண்பன் ஒருவனுடன் வீட்டுக்கு வந்தான். அவனை இதுவரை ஷாமிலா கண்டதில்லை. அவர்கள் தத்தமது அலுவலக வேலையில் முழ்கிப்போயிருந்தார்கள். வந்தவர்களுக்கு ஒரு கப் டீயாவது கொடுக்காவிட்டால் நல்லாயிருக்காது என்று அவளுக்குத் தெரியும். எனவே நாகரீகம் கருதி தேநீர் தயாரிக்க சமையலறைப் பக்கம் சென்றாள். அவர்கள் பேசுவது அவள் காதுகளுக்கு கேட்டது.

இடையில் பஸால் சொன்னான்.

‘உன் ரூமுக்கு வர நினைச்சன்டா நித்தி. ஆனால் கொஞ்சம் வேலையா இருந்தது. உன் இனிஷியல் என்னானு சொல்லு. பயோடேட்டாவை டைப் பண்ணிடலாம்’

அதற்கு அந்த மற்றவன் கூறினான்...

‘உன் லெட்டர் கிடைச்சதுல சந்தோஷம்டா. நீ வருவன்னு நினச்சன்.. பரவாயில்ல என் முழுப்பெயர் எஸ். ஏ. நித்தியானந்தன்’

‘ஓகே மிஸ்டர் நித்தியானந்தன்’ என்றான் பஸால்.

ஓ.. ‘நித்தியா’னந்தன்!

ஷாமிலாவுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. இவனுக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்துத்தான் அவள் அப்படி குதித்திருக்கிறாள். பஸாலைப்பற்றி தவறாக நினைத்ததை எண்ணி மனசு வலித்தது. எதையும் காட்டிக்கொள்ளாமல் சமாளித்துக்கொண்டு டீயும் வடையும் கொடுத்த போது பஸால் மெதுவாக அவளை ஏறிட்டான். அவனுக்கு எக்ஸ்ட்ராவாக ரொமான்ஸ் புன்னகையும் கொடுத்தாள்.

ஏதோ சொல்ல நினைத்த நித்தி அதைக்கண்டு புரிந்தவனாக சொல்ல வந்ததை சொல்லாமலேயே விடைப்பெற்றுச் சென்றான். வெட்கத்தில் மிரண்டவள் தான் தாய்மை அடைந்த விடயத்தைக் கூறினாள். பிறகு தன்னுடன் சில நாட்களாக கோபம் காட்டியது ஏன் என்று அவன் கேட்டபோது அசடு வழிய காரணத்தைக் கூறினாள். அவனுக்கு சிரிப்பு வந்தது. இப்போதும் அந்தச்சிரிப்பில் கள்ளம் இருக்கவில்லை!!!

சொந்தம் !


‘ப்ளீஸ் ரவி நான் சொல்றத கேளுங்க’

அவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை. முன்பிருந்தவனா இவன்? என்ன நினைப்பு? என தனக்குள்ளேயே கூறிக்கொண்டு திரும்பிய சுகிர்தா ஒரு கணம் அதிர்ந்தாள். அவளருகே நமட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி சதீஷ் எதிர்ப்பட்டான். சமாளித்துவிட்டு நடக்கத் தொடங்கினாள். அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்தவள் மெதுவாக குளியலறைக்கு சென்று கதவைத் தாளிட்டுவிட்டு குமுறி அழுதாள்.

சதீஷ் சொந்தமாக ஒரு கம்பனியை நடாத்துகிறான். அழகுக்கு குறைவில்லை. லேசான மீசை தாடியுடன் கம்பீரமாக இருப்பான். இவன் முதன் முதலாக சுகிர்தாவை காணும் போதே இதயத்தை இழந்துவிட்டான். என்றாலும் ஆண்டவன் சித்தம் இருக்க வேண்டுமே? இரண்டு நிமிடம் கழியும் முன்பே இவள் ரவியின் பின்னால் வலிய சென்று பேசுவதை அவதானித்தான். இந்த ஊமை நாடகத்தை சதீஷ் சமீப காலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அவனுடைய இதயக் கோவிலில் சுகிர்தா என்று குடியேறுவாளோ?

இன்னுமொருவனை அவள் விரட்டி விரட்டி காதலிக்கும் போது அவன் எப்படி தன் காதலைச் சொல்லுவான்? அது நாகரீகமில்லையே? சொல்லி விட்டாலும் சுகிர்தா அதை ஏற்பாளா? அல்லது தெரிந்து தெரிந்து என்னை காதலிக்கிறியேன்னு அவனை தப்பாக நினைக்க மாட்டாளா? அதனால் சதீஷின் காதல் மனசினுள்ளே புதைந்து கிடந்தது.

‘அம்மா சாப்பிட்டாச்சா?’ என்றபடி புத்தம் புது மலராய் குளியலறையிலிருந்து வந்தாள் சுகிர்தா. மனசோ சலனப்பட்டுக் கொண்டிருந்தது. மனசிலுள்ள கவலைகளை அம்மாவிடம் கூறி அவளை சங்கடத்தில் சிக்க வைக்க நினைக்கவில்லை. என்றாலும் அம்மாவிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது.

‘இதோ வந்திடுறேன்மா’ என்ற படி அடுக்களையிலிருந்து வந்த அம்மாவுக்கு மகளின் முக மாற்றம் புலப்பட வெகுநேரம் எடுக்கவில்லை.

‘என்ன சுகிர்தா ஒரு மாதிரி இருக்கே?’

அம்மாவின் கேள்வி சுகிர்தாவின் கண்களில் நீர் வரச் செய்யவே பதறிப் போனாள் அம்மா. ரவியை கண்டது முதல் சதீஷிடம் அவமானப்பட்டது வரை ஒன்று விடாமல் கூறினாள். அவற்றை எல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு நிதானமாக அம்மா கூறிய பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘வேண்டாம் விட்டுடு. நம்மள மதிக்காதவனை நீ ஏன் தேடிப் போற? நீ ஏன்மா வலியுற?’

சாத்தி வைத்து சவுக்கால் அடித்தது போலிருந்தது. என்ன இந்த அம்மா இப்படி பேசுகிறாள்? மற்றவர்களை விட அம்மா புரிந்துகொள்வாள் என்றல்லவா கூறினேன். இல்லை அது பொய் என்பதைப் போல அம்மா நடந்துக்கிறாளே? இறைவனே! உன் படைப்பினங்களில் யாருமே இதயத்தோடு படைக்கப்படவில்லையோ?

‘அம்மா நீ என்ன பேசற? ரவியை மறந்திட்டு எப்படிம்மா?’

சுகிர்தா அப்படி வலிமையாக கூறியபோது தாயுள்ளம் தப்பு செய்ததுபோல தவித்தது. விடிய விடிய நீரை இறைத்து விட்டு கடைசியில் குடத்தை உடைத்துப் போட்டது போன்ற குற்ற உணர்வு அம்மாவை ஆர்ப்பரித்துக் கொண்டது.

மறுநாள் வகுப்பிற்கு போய் வரும்போது பாதையைக் கடக்கையில் பெரியெதொரு லொறி தன்னை நோக்கி வருவதைக் கண்டு அச்சத்தால் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

‘என்ன சுகி கொஞ்சம் அக்கம் பக்கமா பார்த்து வரக் கூடாதாம்மா’ என்ற சதீஷின் குரலைக்கேட்டு முழுமையாக அவன் வார்த்தைகளுக்குள் சுருண்டு போனாள் சுகிர்தா.

‘சுகி’ என்றா கூப்பிட்டான்? அந்த வார்த்தையில் எத்தனை இதம்? எத்தனை மென்மை? பட்டாம் பூச்சி சிறகடித்தது. ஒரு கணம் தான். திடீரென மூளைக்குள் சந்தேகப் பொறி தட்டியது. என் பெயர் எப்படி இவனுக்குத் தெரியும்? வெகுவாக குழம்பியவள் அதைக் கேட்க வாயைத் திறந்து ஏமாந்தாள். சதீஷ் எப்போதோ போய்விட்டிருந்தான்.

அந்த சம்பவத்துக்குப்பின் அவளது மனம் அவன் பின்னால் அலை பாயத் தொடங்கியது. இந்த விசித்திரத்தைக் கண்ட அவளுக்கே தன்னை நம்ப முடியாமல் இருந்தது. அவள் அவனை காதலிக்கிறாளா? காதல் என்ற நோய்க்குள் தன்னை பலி கொடுக்கத் தயங்குபவளாச்சே சுகிர்தா. ‘என் மனசு எப்பவுமே என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும்’ என்று அடிக்கடி தோழிகளிடம் பெருமை பேசிய இவளுக்கு என்னவாயிற்று? மனம் தடுமாறிற்றா?

ஒரு வாரத்துக்குப் பின்பு வேலைக்கு தெரிவாகி இருப்பதாக அவளுக்கு கடிதம் வந்தது. கடிதம் உட்பட முக்கியமான சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தவளுக்கு தேள் கொட்டியது போலிருந்தது. எதிரில் சதீஷ். அவனோ அவளை தெரியாதது போலிருந்தான். அது அவளுக்கு வசதியாகப் போனாலும் உள்ளுக்குள் என்னவோ செய்தது. அன்றைய மாலைப் பொழுதில் பஸ்ஸூக்காக காத்துக்கொண்டிருந்த போது, எதிர்பார்த்த விதமாக ரவியை தூரத்தில் கண்டாள். இதயத்தில் வெளிச்சம் பரவியது.

‘ரவி.. ரவி..!’

ரவியோ சுகிர்தாவைக் கண்டவுடன் நடையின் வேகத்தை அதிகமாக்கினான். உடனே சாரியை சற்று தூக்கி கையால் பிடித்துக் கொண்டு வேகமாக செல்ல முயன்ற போது அவளது தோளை ஒரு கை தொட்டது. சந்தேகமேயில்லை அது சதீஷ்தான்.

ஷசுகி உன்னை புரிஞ்சிக்காதவன நீ எதுக்கு தேடிப் போகணும்?| என்று அவன் ஒற்றையில் அவளை அழைத்தபோது ஒரு பக்கம் ஆச்சரியம் கலந்த ஆனந்தம். மறுபக்கம் அதிர்ச்சி கலந்த கோபம். ஆனாலும் இவ்வளவு இயல்பாக பேசுபவனிடம் எப்படி கோபப்படுவது? அவள் எதையும் பேசவில்லை.

‘என்ன யோசிக்கிற சுகி...?’ அவனது குரல் இளகியிருந்தது.

இப்போது சுகிர்தாவுக்கு கோபம் வரவில்லை. தன் மேனேஜர் என்பதால் சற்று நிதானித்து ‘ஒன்னுமில்ல சேர்’ என்றாள்.

‘என்னை பெயர் சொல்லியே கூப்பிட உனக்கு அனுமதிதர மாட்டேனா?’ தேக்கி வைத்திருந்த காதல் வெள்ளம், வார்த்தைகளாய் பீறிட்டுப் பாய்ந்தது. சற்று தயங்கியவள் சமாளித்துக்கொண்டு,

‘ஓகே சதீஷ்! நீங்க என்ன தப்பா விளங்கிட்டீங்க. நான் அவர் பின்னால அலையவில்லை. யாரையும் நான் காதலிக்கவுமில்லை’

‘என்ன சொல்ற சுகிம்மா?’ குரலில் உற்சாகம் ஒட்டிக்கொண்டது.

‘ஆமா சேர்.. சொரி சதீஷ்! அவர் எங்கள் அண்ணா. அவர் வேற்று மதப் பெண்ணைக் காதலிக்கிறார். அதை அம்மா அப்பா விரும்பவில்லை. அதனால் அண்ணா வீட்டைவிட்டு போயிட்டார்.  அவரை நான் எங்கு கண்டாலும் கெஞ்சி வீட்;டுக்கு கூப்பிடுறேன்’ சுருக்கமாக முழுவதையும் கூறியபோது சுகிர்தாவை அவமானப் படுத்திய சம்பவங்கள் சதீஷின் கழுத்தை நெரித்தன. மிகவும் மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டான்.

ஒரு வாரத்துக்குப்பின் ரவி அண்ணா வீட்டுக்கு வந்தார். அவரைக்கண்டு ஆனந்தமடைந்தவள், அவர் கூறியவற்றைக்கேட்டு பரவசமடைந்தாள்.

‘ரவியின்ர விஷயம் சரியாகிட்டு. அவன் விரும்புறபடியே அவனுக்கு திருமணத்தை நடாத்திரலாம்னு தீர்மானிச்சிட்டோம். அத்தோட உன்ர விஷயத்தையும்..’ என்ற போது முகம் வெளிறினாள் சுகிர்தா. ஏனோ சதீஷ் மனத்திரையில் வந்துதித்தான். அந்த மாற்றத்தைப் புரிந்த அம்மா,

‘சதீசு தம்பி நம்மகிட்ட ஏற்கனவே பேசிட்டாரு. நமக்கெல்லாம் ஓ.கே. நீ என்னம்மா சொல்றே?’ என்றாள்.

அவள் வெட்கத்துடன் மௌனித்தாள்!!!

தெளிந்த வானம் !


அந்தப் பகல் அகோரமாய் தகித்தது. சூரியன் நிலத்தின் வெடிப்புகளுக்கிடையிலும் தன் கதிர்களை பாய்ச்சிக் கொண்டிருந்தான். கடையில் கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த அஸ்லம் எதிர்பாராத விதமாக அக்காட்சியைக் கண்டுவிட்டான். அவனது தந்தை அவளுக்கு கைநீட்டி ஏசிக் கொண்டு இருக்கிறாரே.

முக்கிய தேவைகளின் போது தன்னிடம் பேசுவதற்கு ஒரு கைத்தொலைபேசி வாங்கித்தருவதாக அஸ்லம் அவளை வரச்சொல்லியிருந்தான். காலை பத்தரைக்கு வந்து வாங்கிக்கொண்டு போனாளே. இப்போது இரண்டு மணி கடந்து இங்கென்ன செய்கிறாள்? இந்த மனிதரிடம் வசமாகவே மாட்டிக்கொண்டுவிட்டாளே? மனிதத் தன்மையை மறந்து அவள் மனசை என்ன பாடுபடுத்தி இருப்பாரோ இந்த வாப்பா? ஒரு வேளை அவன் மொபைல் வாங்கிக் கொடுத்ததையும் வாப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டாளோ, சொல்லியிருந்தால் என்னவாம்? அஸ்லமிடம் கேட்கும் உரிமை அவளுக்கு இருக்கிறது தானே? அவளது தேவைகளை கவனிப்பது அஸ்லமின் பொறுப்பில்லையா? பாவம் ரமீஸா!

தன் வாழ்வுரிமை மீறப்பட்டதால் தானே இப்படியொரு இக்கட்டுக்கு விருப்பமின்றியேனும் தள்ளப்பட்டாள். இப்படி அஸ்லமுக்கு தோன்றி என்ன பயன்? அவளது வாப்பா தாஸீம் ஹாஜியாருக்கல்லவா தோன்ற வேண்டும்? ஏன் வாப்பாவுக்கு புத்தி இப்படிப் போகிறதோ? பௌதீக மாற்றமேனும் நிகழ்ந்துவிட்டதோ? வாப்பாவை எதிர்த்து அவளை இந்த வீட்டுக்கு அழைத்து வரும் தைரியம் அஸ்லமுக்கு இல்லை. அவ்வளவு கையாலாகாதவனா அஸ்லம்? இவர்களை விட்டால் ரமீஸா எங்கு போவாள்? யோசித்தவாறே பகல் சாப்பாட்டுக்கு வந்திருந்த அஸ்லமைப் பார்த்ததும் அவனது தாய் வாஸிலாவுக்கு அவன் இதயம் புரிந்துவிட்டது.

‘என்ன ராஜா இன்னிக்கும் ரமீஸாவ கண்டுட்டீங்களா?’

‘ஓம் உம்மா. அதுவும் வாப்பாகிட்ட வசமா மாட்டிட்டாளே’ என்று கூறியதை கேட்ட வாஸிலாவுக்கும் தூக்கிவாரிப்போட்டது. கண்மண் தெரியாமல் தாஸீம் ஹாஜியார் அவளை ஏசியிருப்பார் என்றே வாஸிலாவும் கவலைப்பட்டாள்.
சற்று நேரத்தில் அஸர் தொழுதுவிட்டு வந்த ஹாஜியார் அஸ்லமை பன்மையில் கூப்பிட்டார். அவர் அப்படி கூப்பிட்டால் ரமீஸாவும், அஸ்லமும் சந்தித்த விடயம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். அவளை சந்தித்து பேசிய விடயத்தை கேள்விப்படும் ஒவ்வொரு முறையும் இவனுக்கு பன்மையில் அழைப்பு வரும். பிறகு காதுக்கு அர்ச்சனை நடக்கும். அஸ்லமுக்கும் ரமீஸாவுக்கும் இடையில் இருக்கும் பந்தம் பற்றி இவருக்கு என்ன தெரியும்? காதலித்திருந்தால் தானே ரமீஸாவின் மனநிலையை புரிந்திருப்பாரே? ஏதோ இவர்களின் தந்தைமார்களின் ஸ்நேகிதத்தால் உம்மாவும் வாப்பாவும் மணமுடித்திருக்கிறார்கள். தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். எத்தனை முறை இப்படி உயிரை வாங்கிவிட்டார்.

அவர் தனது வெறுப்பை அடிக்கடி வெளிப்படுத்துவதாலோ என்னவோ அஸ்லமுக்கு ரமீஸா மீதிருந்த அன்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. இருபத்திமூன்று வயது வரை அவளுடன் தானே பேசி, சிரித்து வாழ்ந்தான். அவனை விட இரண்டு வயது வித்தியாசம் தானே அவளுக்கு இருந்தது. வாஸிலாவுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும். பிடிக்காமல் போகுமா? என்ன தவறு செய்தாலும் பாசம் கண்ணை மறைத்துவிடுமே? அவளை வீட்டுக்கு வந்திருக்க அனுமதிக்குமாறு எத்தனை முறை தன் கணவனிடம் சண்டை போட்டிருப்பாள் வாஸிலா?

வாப்பா மீண்டும் கூப்பிடுவது கேட்டபோது அஸ்லமின் கை கால்களில் உதறல் எடுக்கத்தொடங்கின. என்ன கேட்கப் போகிறாரோ என்று எண்ணியபடி சாரத்தை இருகக்கட்டிக்கொண்டு வாசலினருகே வந்து நின்றான்.

‘சொல்லுங்க வாப்பா...’

தன் முன்னால் வந்து நின்ற அவனைப் பார்த்தார் ஹாஜியார்.

‘உங்களுக்கு இப்படி ஒரு மகன் கிடைக்க கோடி புண்ணியம் செஞ்சீக்கோணும்’

அடிக்கடி பஸ்லியா மாமி வாப்பாவிடம் கூறுவாள். தன் மகள் சியானாவுக்கு இவனை கணவனாக்கிவிட வேண்டும் என்ற உள் நோக்கம் அவளுக்கிருப்பதை ஹாஜியார் உற்பட அனைவரும் அறிந்திருந்தனர். பஸ்லியா மாமி சொல்வதிலும் தவறில்லையே? உண்மையில் அஸ்லம் போல் ஒருவனை தன் மகளுக்கு கணவனாக்க முடிந்தால் அந்த பெற்றோர் நன்மை செய்தவர்கள். பாடசாலையில் உயர்தரம் படிக்கும் போது கூட பெண்கள் பின்னால் வலிய செல்வதும், சைட் அடிப்பதும் நண்பர்களோடு இணைந்து மானம் மரியாதை இழந்து பெண்களை இழிவுபடுத்துவதும் கொஞ்சம் கூட அவனுக்கு பிடிப்பதேயில்லை. தன் தாய் தந்தையர் பார்த்து தனக்கும் அவளைப் பிடித்தால் அவளை மணமுடித்து அதன் பிறகு அவளைக் காதலிக்கலாம் என்று நண்பர்களிடம் கூறுவான். அப்போதெல்லாம் அவனுடைய ஸ்நேகிதர்களின் கேலிப் பேச்சுக்களுக்கு சிறைப்பட்டுத்தவிப்பான்.

கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாக இந்தக் குருட்டுச் சமூகம் ஓரங்கட்டிவிட்டதுடன் ஆண்களுக்கு ஆரோக்கியமற்ற சுதந்திரத்தையும் தந்துவிட்டது. காதல் மட்டுமல்ல கலாச்சார ரீதியிலும் கூட மார்க்கம் கூறாத சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கும் இந்தச் சமூகம் குறித்து அஸ்லம் கவலைப்பட்டிருக்கிறான். அத்தகைய அஸ்லமுக்கு வந்து வாய்த்தாளே உறவாக ஒருத்தி? அவளால் அஸ்லம், தாஸீம் ஹாஜியார், வாஸிலா என்று அனைவருமே சந்தித்த பிரச்சினைகள்? வாப்பா பெருமூச்சுவிட்டார். என்ன சிங்கம் கர்ஜிக்கவில்லை? மனுஷன் மௌனமாக இருக்கிறார் என்றால் அவரை உளரீதியாக ஏதோ ஒன்று தாக்கியிருக்க வேண்டும்? புரியாமல் உம்மாவும், மகனும் தவித்தனர். அதை கண்டுவிட்டவர் போல அவர்களை மாறி மாறி பார்த்த ஹாஜியார் நிதானமாகக் கூறுவதற்காக தொண்டையைச் செருமினார்.

‘ரமீஸா கர்ப்பமாக இருக்கிறாளாம்’ என்றார் ஹாஜியார்.

அஸ்லமின் நாடி நரம்புகள் ஒரு நிமிஷம் வேலை செய்யவில்லை. கர்ப்பமாக இருக்கிறாளா? தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? என்னிடம் கூறாத அளவிற்கு வைத்திருந்த ரகசியத்தை சட்டப்படி வாப்பாவிடமா கூறுவது? நெஞ்சில் இடி இறங்கினாலும் ஏதோ ஒரு குதூகலம் அதனுள்ளும் எட்டிப்பார்த்தது. உள்மனம் மகிழ்ச்சிக்கூத்தாடியது.

‘பிள்ளை ஆணாக இருந்தால் என் மடி மீது ஓடி வந்து உட்காருவானே? பெண் பிள்ளை என்றால் வடிவாக அணிவித்து அழகு பார்த்து... ஒரு வேளை இரட்டையர்கள் என்றால் இருவரையும் மாறி மாறிக் கொஞ்சி..’ எத்தனை கற்பனை அஸ்லமுக்கு? திடீரென ஏதோ நினைவு வந்தவன் போல வாப்பாவின் முகத்தை கூர்ந்து ஆராய்ந்தான். அதில் கோபத்தின் ரேகைகள் அறவேயில்லை. ஒரு வேளை தன் தவறு நினைவுக்கு வந்துவிட்டதோ அவருக்கு? ரமீஸாவின் காதலை தாஸீம் ஹாஜியார் ஏற்காத காரணம், சமூகத்தில் அவருக்கிருந்த செல்வாக்கும் பணமும் தானே? அப்படிப்பட்டவர் காதலுக்காக தம்மை எதிர்த்த ரமீஸாவை எப்படி வீட்டுக்குள் அனுமதிப்பார்? அவர் நிலையிலிருந்து எண்ணும் போது அவர் பக்கம் நியாயம் இருக்கிறது. ஆனால் அஸ்லமுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறதே? பால்ய காலத்திலிருந்தே ஒன்றாக உண்டு, விளையாடி, படித்து.. காதல் என்ற ஒன்றை காரணம் காட்டி அவனிடமிருந்து அவளை பிரித்தால் அவன் எப்படித்தாங்குவான்? அவனை அவள் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள். அத்தனை உரிமை? எல்லாம் பறிபோய்விடுமா?

‘வாஸிலா...’

வாப்பா உம்மாவை சன்னமான குரலில் கூப்பிட்ட போது அஸ்லம் சிந்தனை கலைந்தான்.

‘வாஸிலா அவ உண்டாகியிருக்கிறத கேள்விப்பட்ட பின்பும் நான் பிடிவாதமா நின்றால் நான் மனுஷனா பிறந்ததே அர்த்தமில்லாம போயிடும். ரமீஸாட மாப்பிள ஸஜாத் இப்ப ஹோட்டல் வச்சிருக்கானாம். ஸஜாத் உடன் இவ வீட்டவிட்டு போனதுக்கு காரணமே நான் தானே? நல்ல பண்புள்ள ஸஜாத்தை மதிக்காம இழவு.. பணம் பணம்னு என்ட பிள்ளைய பிரிஞ்சி ஒரு வருஷம் எப்படி இருந்தனோ? என் கவுரவத்தை கல்லில் அடிச்சி உடைச்சிருந்தா இன்று இப்படி நடக்குமா? இந்தா இருக்கானே உன் புள்ள அஸ்லம். எப்பப் பாரு தங்கச்சி தங்கச்சின்னு உருகுறான். எனக்குத் தெரியாமலே அவளோட தனியே பேசி உதவிகளும் செய்திருக்கான். இப்படி ஒரு நானாவை விட்டுட்டுப் போக அவளுக்கு எப்படி மனசு வந்திச்சோ?’

‘ராஜா.. நீயாவது எங்கள் விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணிக்கப்பா. என்ன வாஸிலா என் ரத்தத்துல பொறந்தவனுக்கே தங்கச்சி மீது இவ்ளோ பாசம்னா என் மகள் மீது எவ்ளோ பாசம் எனக்கிருக்கும்? ஏதோ விதி வெளயாடிரிச்சி. சரி அஸ்லம் நீ இனி பயப்படாம உன் தங்கச்சி ரமீஸாவுடனும், மச்சானுடனும் பேசு. காலம் கடந்தாலும் என் கண்களை அல்லாஹ் திறந்திட்டான் என்று சொல்லு’

அஸ்லமின் உதடுகள் மௌனமாக ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டன!!!

தொலைந்த கவிதை !


நிஸ்தார் நானா கேற்றை திறந்து வெளியே வந்து பார்த்தார். எறும்புக்கூட்டங்களாய் வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. இந்த நிமிடத்தில் அவசரமாக பாதையைக் கடக்க வேண்டும் என்றால் உயிரை விட வேண்டியிருக்கும்.

‘என்ன யோசிக்கிறீங்க... வாங்க சாப்பிடலாம்’

சொல்லிக் கொண்டு வந்த மனைவியைப் பார்த்து புன்னகைத்தார்.

‘புள்ளையள் ரெண்டு பேரும் டியூஷன் போயிட்டாங்களா?’

‘ஆமா. சாப்பாடு கொடுத்து அனுப்பிட்டேன். வாங்க நாம சாப்பிடலாம்’ என்று கூற அவரும் வீட்டுக்குள் வந்தார்.

அவருக்கு முப்பத்தியிரண்டு வயதிருக்கும். என்றாலும் இருபத்தியாறு வயது போலத் தோற்றம். காது மடலருகே எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை பின்புறமாக சீவிவிட்டால் வாலிபன்தான் நிஸ்தார் நானா. மனைவி ரயீஸா மட்டும் என்னவாம்? இரட்டைக் குழந்தைகளின் தாயார் என்றால் யாருமே நம்பமாட்டார்கள்? இயற்கை இவர்களிடம் அதீத பாசம் கொண்டு இளமையை வாரி வழங்கியிருந்தது.

நிஸ்தார் நானா ஆசிரியர் நியமனம் பெற்று எட்டு வருடங்களிருக்கும். அவரது ஆசிரிய வாழ்வில் அடி, தண்டிப்பு, கோபம் என்றெல்லாம் மாணவர்களிடம் வெளிக்காட்டியதேயில்லை. அன்பும் பாசமும்தான் ஒருவனை நல்லவனாக்கும் என்று எப்போதோ அனுபவம் மூலம் அறிந்தவர். உயர்வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் இவர் தான் நல்ல நண்பர். மனசு விட்டுப்பேசி மாணவர்களின் குறை நிறைகளை அறிந்து உதவுவார். அவர்களுடனிருக்கும் போது தன் இளமை நினைவுகளில் மூழ்கிப்போவார்.

‘என்ன சேர் அந்தக்கால யோசினை வந்திட்டா?’ குறும்புக்கார மாணவன் கேட்டான்.

‘ஓமோம். ரோமியோ ஜுலியட் காலம். போய் திருக்குறள் பாடமாக்கு. நாளைக்கு பரீட்சை’

என ஆதரவாக கூறி அனுப்பினார். அவன் கேட்டதும் சரி தானே? எவ்வளவு வசந்தமான காலங்கள் அவை?

***************

ஆசிரிய பயிற்சிக் கலாசாலை. அங்குதானே அவருக்கு மறக்க முடியாத காலம். மேல்வகுப்பு மாணவர்;கள் எல்லாம் இவரை பாடச்சொல்லி அதட்டினார்களே?

‘பகிடிவதை’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் இப்படியுமா? பாடசாலைக் காலத்தில் எந்தவித வம்புதும்புக்கும் போகாதவர் இவர்களிடம் மிரண்டு போனார்.

‘நானா எனக்கு பாட வராதே’

‘என்னடா பாக்குற பாடுன்னு சொல்றேனில்ல..’ மீண்டும் அதட்டல்கள்.

‘பாடவா ஓஓர் பாஆஆடலை...’ குரல் நடுங்கியது நிஸ்தார் நானாவுக்கு.

மேல் வகுப்பு மாணவர்கள் எல்லாம் குடல் வெளியே தெரியுமளவுக்கு சிரித்தார்கள். பாடலை நிறுத்தச் சொல்லி, நிறுத்தியதற்காக பாராட்டினார்கள். பின்பு அவர்கள் அனைவரும் நண்பர்களாகி வாழ்க்கையை அனுபவித்ததெல்லாம் மனசில் பதிந்த இனிய நினைவுகள் அல்லவா?

‘டேய் மச்சான் சூப்பர் ஃபிகர்டா| வா போய் பார்க்கலாம்’

மேல் வகுப்பு மாணவன் கூப்பிட்டும் பேகாவிட்டால் என்ன நடக்கும் என்று முழு பல்கலைக்கழக வளாகமும் அறியும். குட்டி போட்ட பூனை போல நிஸ்தார் நானாவும் சென்றார். போய் அந்தப் பெண்ணைப் பார்த்தவர்...

***************

பாடசாலை விடுவதற்காக மணி ஒலித்தது. தன் மோட்டார் சைக்கிளின் உதவியுடன் அரை மணி நேரத்துக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தார். சாப்பிட்டுவிட்டு வந்தவருக்கு மனைவி நீட்டிய பானத்தில் பார்வை நிலை குத்தியது. அதனூடே மீண்டும் அந்தப் பெண் அவரது புலன்களுடே வந்து சலனமூட்டினாள்.

அப்படித்தான். ஒருநாள் சிற்றுண்டிச்சாலைக்கு நுழைந்து தொண்டைவரை சாப்பிட்டார். அந்த நேரம் பார்த்து ஒரு குரல்..

‘அங்கிள் தோடம்பழச்சாறு ஒன்னு ப்ளீஸ்..’

திரும்பியவருக்கு வியப்பு. என்ன அழகான குரல். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் அவரை நோக்கி நெருங்கிக்கொண்டு வந்தாள். பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா எனப்பார்த்தார். இல்லை. அவருக்கு மின்னலடித்தது. அவர் கைகளில் தோடம்பழச்சாறை தந்துவிட்டுப் போனாள். அடுத்த நாள் காலை சற்று லேட்டாகி எழுந்தவர் தனக்குத்தானே ‘கனவு முழுவதும் கன்னியவள் வருகை’ என்றார்.

***************

‘கனவு முழுவதும் கன்னியவள் வருகை’

அட கவிதை கூட வருமோ, கண்களை சிமிட்டிய படி ரயீஸா வர, வெலவெலத்துப் போனார் நிஸ்தார் நானா.

‘காப்பி பொடி தீர்ந்துடிச்சி. வாங்கிக்கிட்டு, நூலகத்தில புள்ளயள் நிப்பாங்க. அழச்சிக்கிட்டு வந்துடுங்க’

நூலகம்!

அது கூட நெஞ்சிலிருந்து அகலவில்லை. எதை மறக்க நினைக்கிறோமோ அது தான் அடிக்கடி நினைவில் வந்து போகும் என்று எங்கோ வாசித்த வரிகள் அவருக்கு ஞாபகம் வந்தது. எத்தனை முறை அவளிடம் பேசவென்று முயற்சித்திருப்பார். ஒரு பார்வை.. ஒரு புன்னகை.. இதையே பார்த்து எவ்வளவு நாள் சீவிப்பது?

ஆனால் நான்கு மாதங்கள் கழிந்து ஒரு கலைவிழாவின் போதே மனம் திறந்து ஒரு வார்த்தை பேசக்கிடைத்தது. நாளிரா கவிதை சொல்வதற்காக மேடை ஏறியபோது பலத்த கரகோஷம். கவிதையே கவிதை சொல்கிறதா? என்று வியந்தார். அதை சாட்டாக வைத்து பாராட்டினார். அவளும் சிரித்தாள்.

நாளிராவுடனான அவரது பார்வை மற்ற ஆண்களிலிருந்தும் வித்தியாசப்படுவதை உணர்ந்தாள் நாளிரா. அவரது காதல் மனம் அவளுக்கு விளங்கியது.

அதன் பிறகு பயிற்சிக் கலாசாலையிலிருந்து அவர் பாடசாலைக்கு மாறினார். இதன்போது தன் தந்தையின் உத்தரவுக்கிணங்க நாளிரா போவது கட்டாயமானது. சந்திப்புகள் யாவும் பிரிவுகள் ஆனதால் கண்ணீருக்கு கைகளை அணையாக்கிப் பார்த்தார்கள். முடியாமல் போகவே பிரிவு என்பது உண்மை என உணர்ந்தார்கள். அவர்களது எதிர்கால கனவுக் கோட்டையை காற்று அடித்துச்சென்று காணாமலாக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

ஊருக்குச் சென்ற நாளிராவின் தொடர்பு திடீரென்று குறைய மலை ஒன்று இடம் பெயர்ந்து தன் நெஞ்சில் இருப்பதை உணர்ந்தார். உண்மையாக காதலித்தவர்களுக்கு காத்திருப்பதில் தானாம் சுகம் அதிகம். ஆனால் மானசீகமாக காலித்த நிஸ்தார் நானாவுக்கு பொறுமை என்பது பொய்யாகிப் போனது. எனவே அவர் அவளைப் பார்க்கவென்று புறப்பட்டார். ஒரு வேளை போகாமல் இருந்திருந்தால் நாளிரா அவரை ஏமாற்றி விட்டுப் போயிருக்கிறாள் என்றோ அல்லது பெண்களே பேய் என்றோ பிதற்றித் திரிந்திருக்கலாம்.

ஆனால்....

இதோ அவள் பாதி நிர்வாணத்துடன் பிணமாக கிடந்ததாக ஊரார் பேசிக் கொள்கின்றார்களே. இதைக் கேட்கத்தான் ஓடோடி வந்தாரா? சிறுவயதிலிருந்தே நாளிராவுடன் ஒன்றாக விளையாடிய இனிய கடல் நண்பனா சுனாமியாக வந்து இப்படியான கொடுமையைச் செய்தவன்? மூர்ச்சித்து விழுந்தார் நிஸ்தார் நானா.

இன்றும் அவர் நினைவுகளில் நாளிரா வந்து போவதுண்டு. நாளிராவை மறந்த கயவராக அவர் இல்லை. அதே போல நாளிராவை நினைத்துக்கொண்டு ரயீஸாவுக்கு துரோகமும் செய்யவில்லை. அவரைப் பொறுத்தவரையில் நாளிராவை மறக்க முடியாது ஏனெனில் அந்த நாளிரா.. அவரது காணாமல் போன கவிதை!!!

படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா !

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும், சிறுகதை படைப்பாளியுமான எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்தி வரும் இவர் கவிநிலா, குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. சொந்த ஊரான தியத்தலாவையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து உயர்படிப்புக்காக தலைநகரில் தங்கியிருக்கிறார்.

துரம் 03ல் கல்வி கற்கும் போதே பூங்கா என்ற சிறுவர் சஞ்சிகையில் இவரது ஆக்கம் வெளிவந்தது. அத்துடன் மீலாத் தின போட்டிகள், தமிழ்தினப் போட்டிகளில் பங்குபற்றி பல தடவைகள் முதலிடத்தை பெற்றிருக்கிறார்.

தரம் 08ல் கற்கும் போதே கவிதையின் படிக்கட்டுக்களில் காலடி எடுத்து வைத்த இவரது முதல் கவிதை 2004ம் ஆண்டு மெட்ரோ நியூஸ் என்ற பத்திரிகையில் காத்திருப்பு என்ற தலைப்பில் வெளிவந்தது. அதையடுத்து இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 20க்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

துன்பம், சந்தோஷம், இனிமை, காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, மலையகப் பிரச்சனைகள் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன.

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, நிறைவு, ஞானம், இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம், மற்றும் இணையத்தளங்களான www.vaarppu.com, www.youthfulvikatan.com பெண்களின் குரலாக ஒலிக்கும் www.oodaru.com, போன்ற வலைப்பதிவுகளிலும் அவருடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன.www.riznapoems.blogspot.com, www.riznastory.blogspot.com, www.poetrizna.blogspot.com ஆகிய தன்வலைப்பூக்களிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 20 - 26 வார சுடர் ஒளி பத்திரிகையில் வெளிவந்த உணர்வுகள் என்ற பகுதியிலும், 2008 புரட்டாதி மாத செங்கதிர் சஞ்சிகையிலும் மற்றும் 2010ம் ஆண்டு பெப்ரவரி ஞானம் சஞ்சிகையிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் பிரசுரமாகியுள்ளன.

பிறை எப்.எம்., சக்தி எப்.எம்., இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் கடந்த 2010 பெப்ரவரி 03ம் திகதியன்று இவரது நேர்காணலும் இடம் பெற்றது.

தற்போது BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பின் பிரதித் தலைவராகவும் (bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com) பூங்காவனம் சஞ்சிiயின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றி வரும் இவர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

பேய்களின் தேசம் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற இவருடைய இரு கவிதைத் தொகுப்புக்களும் கனவுகள் உயிர் பெறும் நேரம் என்ற சிறுகதைத் தொகுதியும் இலக்கிய உலகத்துக்குள் நுழைய காத்திருக்கிறது.

இலக்கியத் துறையில் மாத்திரமன்றி கணினித் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் Information & Communication Technology என்ற கற்கை நெறியைப் பூர்த்தி செய்து Diploma பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவி வானில் உலா வரும் இக் கவிநிலாவுடன் தொடர்பு கொள்ள...

Phone:- 0094775009222
Email:- frizna76@yahoo.com